Published:Updated:

``இலங்கைப் போரைவிட நிலைமை மோசமாக இருக்கிறது!" - இலங்கை முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம்

``இலங்கைப் போரைவிட நிலைமை மோசமாக இருக்கிறது!" - இலங்கை முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம்
``இலங்கைப் போரைவிட நிலைமை மோசமாக இருக்கிறது!" - இலங்கை முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம்

"இலங்கை உளவுத்துறை கொடுத்த அந்தக் கடிதத்தில் சந்தேகப்படும்படியாக இரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் திரிவதாகக் கொடுத்துள்ளது. அப்படியென்றால், சந்தேகப்படும்படியான ஆட்களை ஏன் சுற்றிவளைத்துப் பிடிக்குமாறு அரசு உத்தரவிட்டிருக்கலாமே?"

தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இலங்கையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு அம்சத்தின் ஒரு பகுதியாக வாகன ஓட்டிகளுக்கு புதிய விதிமுறைகளை அங்குள்ள பாதுகாப்புத் துறை அமல்படுத்தியுள்ளது. இந்த நிலையில், குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததற்குப் பொறுப்பேற்று அதிபர் மைத்ரி பாலசிறீசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரம சிங்கே ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று அங்குள்ள தமிழ் ஈழ ஆதரவாளர்கள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து இலங்கை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவாஜி லிங்கத்திடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...  

``குண்டுவெடிப்புச் சம்பவத்துக்குப் பிறகு நிலைமை அங்கு எப்படி உள்ளது?"

``இந்தக் கோரமான சம்பவத்துக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இன்னும் அந்தச் சம்பவத்திலிருந்து மக்கள் மீள முடியவில்லை. இதற்கிடையில், ஆங்காங்கே பாதுகாப்பு வாகனங்கள் அதிகரித்தபடியே உள்ளன. குறிப்பாக, மேலும் இதுபோன்ற  தாக்குதல் சம்பவங்கள் தொடரும் என்று அஞ்சப்படுகிறது. அதனால், நிலைமை பதற்றமாகவே உள்ளது".

"சமீபத்தில் நடந்த இலங்கை அமைச்சர்கள் கூட்டத்தில், `இந்திய உளவு அமைப்பான ரா எச்சரிக்கை தரவில்லை' என்று அதிபர் மைத்ரி பாலசிறீசேன கூறியதாகச் சொல்லப்படுகிறதே..?"

``அதிபர் அப்படிச் சொன்னாரா என்ற தகவல் எங்களுக்குத் தெரியாது. இந்திய உளவு அமைப்பான ரா கடந்த 4-ம் தேதி, இப்படியான மிரட்டல் இருப்பதாகக் கூறியிருந்ததாக இலங்கை அமைச்சர்களே கூறியுள்ளனர். அதோடு, இலங்கைப் புலனாய்வுப் பிரிவும் கடந்த 9-ம் தேதி அலர்ட் கொடுத்துள்ளது. அதற்கடுத்த இரண்டு நாள்கள் கழித்து 11-ம் தேதி அனைத்துத் துறைகளுக்கும் புலனாய்வுத் துறை கடிதம் அனுப்பியுள்ளது. அனைத்துத் துறைகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு இத்தனை நாள்கள் ஆன நிலையிலும் அதிபர், பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஏன் அந்தக் கடிதத்தை அப்படியே வைத்திருந்தார்கள் என்பதுதான் தெரியவில்லை. இலங்கை உளவுத்துறை கொடுத்த அந்தக் கடிதத்தில் சந்தேகப்படும்படியாக இரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் திரிவதாகக் கொடுத்துள்ளது. அப்படியென்றால், சந்தேகப்படும்படியான ஆட்களை ஏன் சுற்றிவளைத்துப் பிடிக்குமாறு அரசு உத்தரவிட்டிருக்கலாமே? ஏன் அப்படியான எந்த உத்தரவையும் அரசு கொடுக்கவில்லை... ஏன் அவர்களைப் பிடிக்கவில்லை... வேண்டுமென்றே விட்டுவிட்டார்களா... எனப் பல கேள்விகள் எழுகின்றன. அதனால் இந்தச் சம்பவத்துக்கு முழுப் பொறுப்பேற்று அதிபர், பிரதமர் உட்பட இருவரும் பதவி விலக வேண்டும்."

``இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்துக்குப் பின்னால் அரசியல் பின்னணி ஏதாவது இருக்கிறதா?"

``இந்தச் சம்பவத்தை, அடுத்த ஜனாதிபதி தேர்தலைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாகவும் பார்க்க வேண்டியுள்ளது. இந்த அரசாங்கத்தின்மீது அவநம்பிக்கை ஏற்படுத்த நிகழ்த்தப்பட்ட ஒன்றாகவும் பார்க்க வேண்டிய நிலை உள்ளது. அப்படியே சூழ்ச்சிகளாக இருந்தாலும், எந்தவோர் அரசாங்கமாக இருந்தாலும் இப்படி மோசமான அச்சுறுத்தலை எப்படிக் கையாள வேண்டும் என்பது ஆட்சியாளருக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், நிலைமை தெரிந்தும் ஏன் மெத்தனமாக இருந்தார்கள்? அதனால் இப்படியான பொறுப்பில்லாத ஆட்சியாளர்கள் எங்களுக்குத் தேவையில்லை".

``இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்தை அங்குள்ள தமிழ் மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?" 

``சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த ஓர் எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இங்குள்ள ஒருசிலர் மட்டுமே அதிபரும், பிரதமரும் பதவி விலகவேண்டும் என்று அழுத்தம் கொடுத்துவருகிறோம். இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் தமிழ் மக்களுக்கு மிகுந்த அச்சத்தைக் கொடுத்துள்ளது. குறிப்பாக, இப்படியான அசாதாரண சூழலைக் காரணம் காட்டி இங்குள்ள சிறுபான்மையின் மக்கள் மற்றும் தமிழர்கள் ஆகியோரை ஒடுக்குவதற்கான நடவடிக்கையைத் தொடங்குவார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதனால் அப்படியான அச்சம் அவர்களிடத்தில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஜனநாயகரீதியிலான போராட்டங்கள் அனைத்தும் நசுக்கப்படும். இது ஒரு ஜனநாயகத்துக்கு எதிரான வாய்ப்பூட்டாக அமையப் போகிறது. இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டும் என்றால், விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடந்த போரைவிட மோசமானது தற்போதைய சூழல் ஆகும்". 

அடுத்த கட்டுரைக்கு