Published:Updated:

தொடர்ந்து தாக்கப்படும் இஸ்லாமியர்கள்... ஜம்முவில் பசு பாதுகாவலர்கள் அட்டூழியம்!

தொடர்ந்து தாக்கப்படும் இஸ்லாமியர்கள்... ஜம்முவில் பசு பாதுகாவலர்கள் அட்டூழியம்!
தொடர்ந்து தாக்கப்படும் இஸ்லாமியர்கள்... ஜம்முவில் பசு பாதுகாவலர்கள் அட்டூழியம்!

தொடர்ந்து தாக்கப்படும் இஸ்லாமியர்கள்... ஜம்முவில் பசு பாதுகாவலர்கள் அட்டூழியம்!

ம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இஸ்லாமியர்கள் மீது பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சிலர் கொடூரத் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். ஒரு மாநிலத்தில் 90% இருக்கும் இஸ்லாமியர்களுக்கே இப்படியொரு நெருக்கடியை தந்து வருகிறார்கள் பசு குண்டர்கள் என்னும் பசு காவலர்கள். வட மாநிலங்களில் இருக்கும் மைனாரிட்டி இஸ்லாமியர்களின் நிலை இன்னும் மோசம்.

இந்த மாநிலத்தின் செனாப் பள்ளத்தாக்கில் வாழ்பவர்கள் பெரும்பாலும் கால்நடைகள் மற்றும் அவை தொடர்பான வர்த்தகம் செய்வதைத்தான் தங்கள் தொழிலாகக் கொண்டுள்ளனர். தோடா, ரம்பன், கிஸ்த்ட்வார் ஆகிய மூன்று மாவட்டங்கள் செனாப் 
பள்ளத்தாக்கில் அமைந்திருக்கின்றன. தோடா மாவட்டத்தின் பதேர்வா நகரில் கால்நடை வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் நயீம் அகமது ஷா. இவர் கடந்த வியாழக்கிழமை பசு பாதுகாவலர்களால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை குறித்து தனி விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என நயீம் அகமது ஷாவின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பதேர்வா நகரிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள நல்தி என்னும் ஊரில் நள்ளிரவு 2 மணியளவில் கால்நடை தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். பசு பாதுகாவலர்கள் என அறியப்படும் அவர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நயீம் அகமது ஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் இருந்த சாகூர் அகமது காயங்களுடன் உயிர் தப்பினார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. நயீம் ஷா, உயிரிழந்த செய்தி வேகமாகப் பரவி, பதேர்வா நகரத்தில் இஸ்லாமியர்கள் பலர் போராட்டத்தில் இறங்கினர். கலவரக்காரர்கள் ஆட்டோ ரிக்‌ஷா ஒன்றையும் இரு சக்கர வாகனத்தையும் தீயிட்டுக் கொளுத்தினர். மேலும், பல வாகனங்களின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன. 

கலவரம் தொடர்ந்து நீடிக்காமல், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர, ஜம்மு-காஷ்மீர் மாநிலக் காவல்துறையினர் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தனர். தோடா மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் ஷபீர் அகமது மாலிக் கூறுகையில், "இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகத்தின் பேரில் 8 பேரைக் கைது செய்துள்ளோம். மேலும், அவர்கள் அனைவரும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. வன்முறை வெடிக்காமல் தடுக்கும் வகையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது" என்றார்.

தொடர்ந்து தாக்கப்படும் இஸ்லாமியர்கள்... ஜம்முவில் பசு பாதுகாவலர்கள் அட்டூழியம்!

நயீம் ஷாவின் உறவினரான முகமது இக்பால் கான் கூறுகையில்: "குதிரை வாங்குவதற்காக கத்துவா சென்று திரும்பும்போது நல்தி என்ற இடத்தில் நயீமைக் கொலை செய்துள்ளனர். கத்துவாவில் இருந்து அவர் திரும்பும்போது எந்தக் கால்நடைகளும் அவருடன் இல்லை. ஆனால், சில மாதங்களுக்கு முன்னரே குதிரை மற்றும் கழுதைகளை நயீம் மேய்த்துக்கொண்டிருந்தபோது, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி-யைச் சேர்ந்த சிலர், கால்நடை தொழிலை நயீம் கைவிட வேண்டுமெனக் கூறி, தொடர்ந்து மிரட்டியுள்ளனர். ரம்ஜான் நோன்பு முடிந்த பின்னர் கத்துவா சென்று தான் வாங்கிய குதிரைகளைக் கொண்டுவர திட்டமிட்டிருந்தார். அவரைப் பசு பாதுகாவலர்கள்தான் கொலை செய்துள்ளனர்" என்றார்.

சம்பவத்தை நேரில் பார்த்த முகமது ரம்ஜான், "துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டு எழுந்த நான் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது, ஒரு உடல் சாலையோரம் கிடந்தது. அவருடைய நெற்றி உட்பட பல இடங்களில் காயத்துடன் ரத்தவெள்ளத்தில் கிடந்தார். சில மணிநேரம் கழித்து அவருடைய உடல் உறவினர்களால் மீட்கப்பட்டு கொண்டுசெல்லப்பட்டது" என்றார். மீட்கப்பட்ட நயீம் ஷாவின் உடல் பதேர்வா நகரத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

காயங்களுடன் தப்பிய சாகூர் அகமதுவின் மகன் முகமது சமீர் கூறுகையில், "குற்றவாளிகளின் உறவினர்களை போலீஸார் கைது செய்துள்ளார்கள். உண்மையான குற்றவாளிகள் தப்பிவிட்டனர். கொலையில் ஈடுபட்டவர்களின் பெயர்களைக்கூட நாங்கள் கொடுத்தோம். ஆனால், காவல்துறையினர் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர். காவல்துறையின் விசாரணையில் எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. அரசாள்வது பி.ஜே.பி, கொலையாளிகள் அவர்களின் வேலையாட்கள். பிறகெப்படி காவல்துறை எங்களுக்கு ஆதரவளிப்பார்கள்? தனி விசாரணைக்குழு ஒன்றை நிச்சயம் அமைக்க வேண்டும்" என்றார்.

மேலும் பாதேர்வாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரகீப் ஹமீது நாயக், "சர்வ நிச்சயமாக மதக்கலவரத்தைத் தூண்டவே இத்தகைய கொலைகளைப் பசு பாதுகாவலர்கள் செய்துவருகிறார்கள். பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் பதேர்வா வீதிகளில் 10 முதல் 15 பேர்வரை நின்றுகொண்டு கால்நடை வளர்த்து, அவற்றை விற்று பிழைக்கும் இஸ்லாமியர்களை மிரட்டுவார்கள்" என்று தெரிவித்தார்.

பதேர்வா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சம்பவம் நடந்த தினத்தன்று காலை 9 மணிக்கு ராணுவம் குவிக்கப்பட்டது. கலவரம் பரவாமல் தடுக்கும் வகையில் தொலைத்தொடர்பு சேவை முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின், நிலைமை கட்டுக்குள் வந்ததாகக் காவல்துறையினர் அறிவித்தனர். மேலும் வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்கள் தொழுகைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.

இந்தியாவில் இருக்கும்  சிறுபான்மையினருக்கு எதிரான மாட்டு அரசியலும், மத அரசியலும் ஓய்ந்து, மாடுகளைவிட மனிதர்களின் உயிருக்கு எப்போது மதிப்பளிக்கப்படுமோ?

Vikatan
அடுத்த கட்டுரைக்கு