Published:Updated:

ஒற்றை ஆர்.டி.ஐ.கேள்வி பலி வாங்கிய இரு உயிர்கள்!

ஒற்றை ஆர்.டி.ஐ.கேள்வி பலி வாங்கிய இரு உயிர்கள்!
ஒற்றை ஆர்.டி.ஐ.கேள்வி பலி வாங்கிய இரு உயிர்கள்!

தனிநபர்களாக இருக்கும்போது, உள்ளூர்ப் பிரதிநிதிகளே உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகிறார்கள்; அல்லது குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு வலுவான அரசியல் தொடர்பு இருக்கும் நிலையில் தவறான தகவல்களைச் சில நேரங்களில் தருகிறார்கள்.

ஞ்சிபாய் சொந்தர்வா என்பவர் குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்திலுள்ள மனெக்வாடா என்னும் கிராமத்தைச் சேர்ந்த ஆர்.டி.ஐ. செயற்பாட்டாளர். இவர் தனது கிராமத்தில் போடப்பட்ட சாலைகளுக்கான செலவு விவரங்களைக் கேட்டிருந்ததன் விளைவு, கடந்த வருடம் மார்ச் மாதம் ஆறு பேரால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். பிறகு, அந்த வழக்கைச் சமரசமில்லாமல் நடத்தி வந்தார் நஞ்சிபாயின் மகன் ராஜேஷ் சொந்தர்வா. இந்நிலையில், கடந்த வாரம் நஞ்சிபாயைக் கொன்ற அதே ஆட்களால் ராஜேஷ் சொந்தர்வாவும் கொல்லப்பட்டிருக்கிறார்.

35 வயதான நஞ்சிபாய் சொந்தர்வா பட்டியலினத்தைச் சேர்ந்தவர். இவரின் கிராமமான மனெக்வாடாவில் சாலை போடப்பட்டதில் ஈடுபட்ட ராஜ்புத் சமூகத்தினர் நிதி முறைகேடு செய்திருக்கிறார்கள் எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சாலை போடுவதற்கான செலவுத்தொகையைக் கேட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதுதொடர்பாக, தொடரப்பட்ட வழக்கு 4 வருடங்களாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இந்நிலையில், ராஜ்கோட்டில் தங்கிப் படித்துக்கொண்டிருந்த தன் மகனைப் பார்க்கச்சென்ற நஞ்சிபாய் சொந்தர்வாவை ஆறு பேர் கொண்ட கும்பல் கொலைசெய்தது. 

ஒற்றை ஆர்.டி.ஐ.கேள்வி பலி வாங்கிய இரு உயிர்கள்!

நஞ்சிபாயைக் கொன்ற ஆறு பேரில், மனெக்வாடா பஞ்சாயத்தின் ஐந்து தலைவர்களுள் ஒருவரான மகேந்திரசிங் ஜடேஜா அடக்கம். நஞ்சிபாய் சென்ற இருசக்கர வாகனத்தை, கார் வைத்து மோதிய கும்பல், அவர் கீழே விழுந்ததும், இரும்புத்தடிகளைக் கொண்டு அடித்துக் கொன்றுவிட்டனர். அவ்வழியே கடந்து சென்றவர்கள் சொன்ன தகவலின் பேரில் நஞ்சிபாயின் அப்பா மெகாபாய் சம்பவ இடத்திற்கு விரைந்து, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். மருத்துவமனைக்குக் கொண்டுசென்ற  வழியிலேயே நஞ்சிபாய் இறந்ததாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

நஞ்சிபாய் தொடர்ந்த வழக்கை, எந்தச் சமரசமுமின்றி அவரது குடும்பத்தினர் நடத்திவந்தனர். நஞ்சிபாயின் தந்தை மெகாபாய் வயது மூப்படைந்துவிட்டதால், ராஜேஷ் சொந்தர்வாவும் அவரது தாயாரும்தான் நடத்திவந்தார்கள். இந்நிலையில் ராஜேஷ் சொந்தர்வா தனது பள்ளி இறுதியாண்டை முடித்துவிட்டு, ராஜ்கோட்டிலிருந்து தனது சொந்த ஊரான மானெக்வாடாவுக்கு அவரது நண்பருடன் திரும்பியவழியில், ஒரு கோயில் முன்னே கும்பல் ஒன்று வழிமறித்து ராஜேஷைத் தாக்க ஆரம்பித்தனர். ராஜேஷுடன் வந்த நண்பர் தப்பியோடிவிட, ராஜேஷ் அவர்களின் தடிகளுக்கும் இரும்புக் குழாய்களுக்கும் பலியானார். அகமதாபாத் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டவர், அடுத்த நாள் காலை இறந்துபோனார்.

ராஜேஷ் சொந்தர்வா கொலை பற்றிச் சமூக உரிமைச் செயற்பாட்டாளரான பங்க்தி ஜாக் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ``நஞ்சிபாய் தொடர்ந்து கழிப்பறை கட்டுவது மற்றும் சுகாதாரம் மேம்படுத்துவதில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து வழக்குத் தொடுத்துக்கொண்டிருக்க, அவர் கொல்லப்படுவதற்கு முன்னர் ஒருமுறை கிராம பி.டி.ஓ அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டுத் துன்புறுத்தப்பட்டிருக்கிறார். நஞ்சிபாய் கொல்லப்படுவதற்கு முன்னர், ஃபேஸ்புக் நேரலையில் தோன்றி, அங்கு எப்படி ஊழல் நடந்தது என்பது பற்றியும், தான் கொல்லப்படவிருப்பதாகவும் கூறினார். மேலும் நஞ்சிபாயைக் கொன்றவர்கள், அவரது கொலைக்குப் பிறகு அவரது மகனையும் மனைவியையும் கடுமையான வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். அவர்களுக்குப் பணம் கொடுத்துச் சரிகட்ட பார்த்தபோதும்கூட அவர்கள் அத்தகைய மிரட்டலுக்கு இணங்கவில்லை. நஞ்சிபாய் கொல்லப்பட்ட வழக்கில் கைதான ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த ஆறு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். தைரியமாக வழக்கை நடத்திவந்த ராஜேஷையும் தற்போது  கொன்றுவிட்டார்கள்" என்றார்.

ராஜேஷின் மரணச்செய்தி அங்கிருந்த பட்டியலின மக்களை வெகுண்டெழ வைத்தது. மருத்துவமனை சுற்றியுள்ள சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி நடந்ததறிந்து சம்பவ இடத்திற்கு வந்தவர், ``ராஜேஷின் குடும்பத்திற்குக் காவல் துறை தகுந்த பாதுகாப்பு கொடுக்கவேண்டும். மேலும், ராஜேஷின் தாயாருக்கு அரசாங்க வேலையும் அவர்கள் சொந்தமாக நிலம் வாங்கி வேறு இடத்துக்குக் குடிபெயர தகுந்த சன்மானம் வழங்கவேண்டும். இவையெல்லாம் வியாழக்கிழமை காலை 10 மணிக்குள் ஒப்புக்கொள்ளப்படாவிட்டால் முதல்வர் விஜய ரூபானியின் வீட்டுக்கு ராஜேஷின் உடல் எடுத்துச்செல்லப்படும். சி.ஐ.டி குற்றப்பிரிவு இந்த வழக்கை எடுத்து விசாரிக்கவேண்டும். பட்டியலின மக்களுக்கு நடக்கும் அநீதியில் ராஜேஷும் பலியாகியுள்ளார். வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் அமலில் இருந்தாலும், அதற்குரிய நடவடிக்கை எடுக்க அரசு முன்வருவதில்லை. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டும் விஜய் ரூபானியின் போக்கு மேன்மேலும் பட்டியலின, பழங்குடி மக்கள் மீதான வன்மையை ஊக்குவிக்கிறது " என்றார்.

ஒற்றை ஆர்.டி.ஐ.கேள்வி பலி வாங்கிய இரு உயிர்கள்!

இதுகுறித்துப் பேசிய ராஜ்கோட் காவல் கண்காணிப்பாளர் பால்ராம் மீனா, ``ராஜேஷின் குடும்பம் குற்றம்சாட்டிய எட்டுப் பேரில், ஆறு பேரைக் கைது செய்துவிட்டோம். நஞ்சிபாய் சொந்தர்வாவைக் கொன்றவர்களின் மகன்கள் இதில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிய வருகிறது." என்றார். 

நஞ்சிபாய் சொந்தர்வா குஜராத்தில் கொல்லப்பட்ட 11-வது ஆர்.டி.ஐ. செயற்பாட்டாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.டி.ஐ செயற்பாட்டாளர்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் சிவ இளங்கோ கூறுகையில், ``90 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட ஆர்.டி.ஐ செயற்பாட்டாளர்கள் மக்கள் பிரதிநிதிகள் தொடர்புடைய ஊழலைக் கையிலெடுத்துச் செயல்படுகிறார்கள். கேட்கப்படும் தகவல்கள் உடனடியாக கவுன்சிலர். பஞ்சாயத்துத் தலைவர் எனத் தொடர்புடைய அனைவருக்கும் தகவல் அலுவலர்களின் சார்பில் நகல் அனுப்பப்படுகிறது. தகவல் கேட்பவர்கள் இயக்கம் சார்பாகக் கேட்டால் ஆபத்து இருப்பதில்லை. தனிநபர்களாக  இருக்கும்போது, உள்ளூர்ப் பிரதிநிதிகளே உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்துகிறார்கள் அல்லது குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு வலுவான அரசியல் தொடர்பு இருக்கும் நிலையில் தவறான தகவல்களைச் சில நேரங்களில் தருகிறார்கள். இதைத் தவிர்க்கும் வகையில் எங்கள் தரப்பிலிருந்தும் பயிற்சிகள் தரப்படுகின்றன” என்றார்.

ஆர்.டி.ஐ. செயற்பாட்டாளராக இருந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தவறா?

Vikatan
அடுத்த கட்டுரைக்கு