Published:Updated:

‘எங்கே ரூ.78 லட்சம்?’ - ராமேஸ்வரம் கோயிலில் வெடித்த சேமநல நிதி சர்ச்சை

‘எங்கே ரூ.78 லட்சம்?’ - ராமேஸ்வரம் கோயிலில் வெடித்த சேமநல நிதி சர்ச்சை
‘எங்கே ரூ.78 லட்சம்?’ - ராமேஸ்வரம் கோயிலில் வெடித்த சேமநல நிதி சர்ச்சை

ராமேஸ்வரம் கோயில் ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி ரூ.78 லட்சம் மோசடி. கணிப்பொறி தற்காலிகப் பணியாளர்மீது காவல் துறையிடம் கோயில் இணை ஆணையர் புகார்.
 

‘எங்கே ரூ.78 லட்சம்?’ - ராமேஸ்வரம் கோயிலில் வெடித்த சேமநல நிதி சர்ச்சை

ராமேஸ்வரத்தில் உள்ள அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் கண்காணிப்பாளர், பேஷ்கார், இளநிலை உதவியாளர்கள், அர்ச்சகர்கள், கைங்கரியம், பாராக்காரர்கள் என 89 பேர் ஊழியர்களாகப் பணியாற்றிவருகின்றனர். இவர்களுக்கு, புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் தொழிலாளர் சேமநல நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இதற்கென ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவிகிதமும், கோயில் நிர்வாகத்தின்மூலம் குறிப்பிட்ட சதவிகிதமும் மாதந்தோறும் எடுக்கப்பட்டு, ராமேஸ்வரம் ஸ்டேட் வங்கியில் எலெக்ட்ரானிக் பரிவர்த்தனைமூலம் தொழிலாளர் சேமநல நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், கடந்த சில வருடங்களாகத் திருக்கோயில் ஊழியர்களின் சேமநல நிதி கணக்கில் பணம் முறையாக வரவு வைக்கப்படவில்லை. இதற்குக் காரணம் என்ன என விளக்கம் கேட்டு, திருக்கோயில் இணை ஆணையருக்குக் கடிதம் வந்துள்ளது. மேலும், ஓய்வுபெற்ற மற்றும் இயற்கை எய்திய கோயில் ஊழியர்களின் குடும்பத்திற்கான இழப்பீட்டுத் தொகையும் சரிவர கிடைக்கவில்லை. இதையடுத்து, சேமநல நிதி கணக்கு குறித்து இணை ஆணையர் கல்யாணி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, திருக்கோயிலின் தற்காலிகப் பணியாளரான கணிப்பொறி ஆப்பரேட்டர்  சிவன் அருள்குமரன் என்பவர் தொழிலாளர்களின் பெயரில் செலுத்தவேண்டிய ரூ.78 லட்சம் ரூபாயை வங்கியில் செலுத்தாமல் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்மீது மாவட்ட காவல்துறையிடம் இணை ஆணையர் கல்யாணி புகார் கொடுத்துள்ளார்.

‘எங்கே ரூ.78 லட்சம்?’ - ராமேஸ்வரம் கோயிலில் வெடித்த சேமநல நிதி சர்ச்சை


 

இதுகுறித்து இணை ஆணையர் கல்யாணி கூறுகையில், '' கோயில் ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தின் சார்பில், கடந்த மூன்றரை ஆண்டுகளில் சேமநல நிதியாக ரூ.2.13 கோடி செலுத்தியதாக இ-ரசீது உள்ளது. ஆனால், வங்கிக் கணக்கில் இந்தத் தொகை முழுமையாக வரவு வைக்கப்படவில்லை. இதுகுறித்து விரிவாக நடத்தப்பட்ட ஆய்வில்,  தற்காலிகப் பணியாளராகப் பணியாற்றிய கணிப்பொறி ஆப்பரேட்டர் சிவன் அருள்குமரன், வங்கியில் செலுத்தியதுபோன்ற போலி இ-ரசீதுகளை அலுவலகத்தில் கொடுத்துள்ளார். மேலும், திருக்கோயில் வங்கிக் கணக்கில் இருந்து சேம நலநிதி கணக்கிற்குச் செலுத்துவதற்குப் பதில், தனது தந்தையின் வங்கிக் கணக்கில் செலுத்தி, முறைகேடு செய்துள்ளார்.

இதன்மூலம் சுமார் 78 லட்ச ரூபாயை அவர் கையாடல் செய்துள்ளார். இதுகுறித்து  மாவட்ட காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் எதிர்காலம் கருதி, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளேன்'' என்றார். திருக்கோயில் ஊழியர்களின் சேம நலநிதி பணம் கையாடல் செய்யப்பட்ட சம்பவம், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Vikatan