Published:Updated:

`எங்களப் பார்த்தா பாவமா இல்லையா?’-தமிழகப் பகுதியில் மதுபாட்டில்களைப் பிடுங்கிய புதுவை போலீஸார் கைது

புதுச்சேரி போலீஸ்
புதுச்சேரி போலீஸ்

தமிழகப் பகுதியில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்த ’குடி’மகன்களிடமிருந்து மதுபாட்டில்களை பறித்துச் சென்ற 3 புதுச்சேரி போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஒருவர் தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் 4-வது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இருந்தாலும் தொற்று எண்ணிக்கை குறைவாக இருப்பதால் நேரக்கெடு விதிக்கப்பட்டு, அனைத்துக் கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மதுக்கடைகள் திறப்பதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்படவில்லை. தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்பட்டுவிட்ட போதிலும், புதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பதில் தாமதமாகி வருகிறது. அதனால் புதுச்சேரியைச் சேர்ந்த `குடி’மகன்கள் மதுபாட்டில்கள் வாங்க அருகில் இருக்கும் தமிழகப் பகுதிகளான விழுப்புரம், கடலூரை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.

மதுபாட்டில்கள்
மதுபாட்டில்கள்

அதேபோல கள்ளச்சந்தையிலும் தமிழக மதுவகைகள் புதுச்சேரியில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் புதுச்சேரியின் எல்லைப் பகுதிகள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, பாதுகாப்புகளைப் பலப்படுத்திக் காவல்துறை கண்காணித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த 16-ம் தேதி புதுச்சேரியை ஒட்டியிருக்கும் தமிழகப் பகுதியான சித்தலப்பட்டு பகுதியைச் சேர்ந்த சங்கர், சோமு இருவரும் டாஸ்மாக் கடையில் 18 குவார்ட்டர் பாட்டில்களை வாங்கி வந்தனர். திருக்கனூரை அடுத்திருக்கும் தமிழகப்பகுதியான மதுரப்பாக்கம் என்ற இடத்தில் உள்ள புளியந்தோப்பில் அமர்ந்து மது குடிக்க அமர்ந்தனர்.

அப்போது புதுச்சேரி திருக்கனூர் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஐ.ஆர்.பி.என் படைப்பிரிவைச் சேர்ந்த பிரசன்னா மற்றும் போக்குவரத்துக் காவலரான செல்வம் இருவரும், பணியை விட்டுவிட்டு அந்தப் புளியந்தோப்பிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். அங்கு மது அருந்தத் தயாராகிக்கொண்டிருந்த சங்கர், சோமுவை மிரட்டி அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களைப் பறித்திருக்கின்றனர். அப்போது, ``சார்.. கஷ்டப்பட்டு வாங்கிட்டு வந்திருக்கோம் சார். எங்களைப் பாத்தா பாவமா இல்லையா? எங்களுக்கு எதாவது கொடுத்துட்டு போங்க சார்” என்று சங்கரும், சோமுவும் கெஞ்சியிருக்கின்றனர். அதையடுத்து அவர்களுக்கு 3 குவார்ட்டர்களைக் கொடுத்துவிட்டு இரு காவலர்களும் பணிக்குத் திரும்பினர். இந்த அனைத்துச் சம்பவங்களையும் ஏற்கெனவே பணியை முடித்துவிட்டு இருந்த ஐ.ஆர்.பி.என் படைப்பிரிவைச் சேர்ந்த கோகுலன் மற்றும் மணிகண்டன் இருவரும் பார்த்துவிட்டு அமைதியானார்கள்.

புதுச்சேரி போலீஸ்
புதுச்சேரி போலீஸ்

இந்நிலையில் காவலர்கள் மதுபாட்டில்களை பறித்துச்சென்ற விவகாரம் குறித்துச் சென்ற புகாரின் அடிப்படையில், ஐ.ஆர்.பி.என் படைப்பிரிவைச் சேர்ந்த பிரசன்னா மற்றும் போக்குவரத்துக் காவலர் செல்வம் இருவரிடமும் விசாரணை நடத்தினார் சீனியர் எஸ்.பி ராகுல் அல்வால். `அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை’ என்று அவர்கள் கூறியதையடுத்து ஐ.ஆர்.பி.என் படைப்பிரிவைச் சேர்ந்த கோகுலன் மற்றும் மணிகண்டனிடம் விசாரணை செய்தார். அவர்களும் இல்லை என்று மறுத்துவிட, மதுபாட்டில்களை பறிகொடுத்த சங்கர் மற்றும் சோமு இருவரையும் அழைத்து விசாரித்திருக்கிறார். அப்போது, ``ஐ.ஆர்.பி.என் போலீஸ் வண்டி ஓட்ட டிராஃபிக் காவலர் பின்னால் அமர்ந்துவந்து பாட்டில்களை எடுத்துச் சென்றனர்” என்று கூறியிருக்கின்றனர்.

அதையடுத்து எல்லைப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் இரண்டு காவலர்களும் பணியில் இல்லாததுடன், இருசக்கர வாகனத்தில் வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

`குவார்ட்டர் 500 ரூபாய்; சோளக்கொல்லையில் மதுபாட்டில்'‍- சிசிடிவியால் சிக்கிய டாஸ்மாக் சூப்பர்வைசர்

அதையடுத்து ஐ.ஆர்.பி.என் படைப்பிரிவைச் சேர்ந்த பிரசன்னா, கோகுலன், மணிகண்டன் மற்றும் போக்குவரத்துக் காவலர் செல்வம் ஆகியோரை அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்ததுடன் அவர்களை கைது செய்யவும் உத்தரவிட்டார் சீனியர் எஸ்.பி ராகுல் அல்வால். அதையடுத்து கோகுலன், மணிகண்டன் மற்றும் போக்குவரத்துக் காவலர் செல்வம் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் ஐ.ஆர்.பி.என் பிரசன்னாமட்டும் தலைமறைவானார். அவரையும் போலீஸார் தேடி வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு