Published:Updated:

திருவாரூர்: `ரூ.20 லட்சம் பணம்; ரூ.12 லட்சம் நகை மாயம்!’ - அதிரவைத்த கூட்டுறவு வங்கி மோசடி!

திருவாரூர் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு
திருவாரூர் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு

`லாக்கருக்குள் வைக்கப்பட்டிருந்த ரூ.20 லட்சம் ரொக்கம் மாயமாகியிருக்க, ரூ.12 லட்சம் மதிப்புள்ள நகைகளும் லாக்கரில் இல்லையென்று கூறப்படுகிறது.’

திருவாரூர் மாவட்டம், பில்லூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் லாக்கரில் இருந்த பல லட்சம் ரொக்கம், தங்க நகைகள் மாயமானது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து, உணவுத்துறை அமைச்சர் காமராஜிடம் ஆளுங்கட்சியினரே நேரடியாக முறையீடு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு
கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு

திருவாரூர் மாவட்டம், கொல்லுமாங்குடியை அடுத்த பில்லூர் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத் தலைவராக இருப்பவர் தம்பி.பிரகாஷ். சங்கத்தின் செயலாளராகப் பதவி வகித்த கதிரவன், சமீபத்தில்தான் மரணமடைந்தார்.

கதிரவன் மரணத்துக்கு முன்னர் லாக்கர் சாவியைத் தன்னிடம் தரும்படி தம்பி.பிரகாஷ் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. கதிரவனின் உடல்நிலை மோசமடையவே, அவரை தஞ்சாவூர் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் ஐ.சி.யூ பிரிவிலிருந்த கதிரவனிடம், லாக்கர் சாவியைக் கேட்டுத் தொந்தரவு செய்வது நீடித்திருக்கிறது.

கதிரவன் சாவியைத் தர மறுத்திருக்கிறார். சாவியை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்போவதாகக் கூறியிருக்கிறார். மிகுந்த மன உளைச்சலுக்கு நடுவே கதிரவன் மரணமடைந்திருக்கிறார். இறுதிச் சடங்கு முடிந்ததும், கதிரவனின் மனைவியிடமும் லாக்கர் சாவியைக் கேட்டுத் தொல்லைக் கொடுத்ததாகச் சொல்கிறார்கள்.

இதற்கிடையே, தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கதிரவனின் மறைவு குறித்து துக்கம் விசாரிக்க, கதிரவனின் இல்லத்துக்கு வந்திருக்கிறார். அப்போது கதிரவனின் சித்தப்பாவும், தி.மு.க முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினருமான சிவக்குமார், அ.தி.மு.க ஒன்றியக்குழு உறுப்பினர் குப்புசாமி ஆகியோர் அமைச்சர் காமராஜைச் சந்தித்தனர்.

கதிரவனின் குடும்பத்தாரிடம் சங்கத் தலைவர் தம்பி.பிரகாஷ் லாக்கர் சாவி கேட்டு தொந்தரவு செய்வதாக அமைச்சரிடம் அவர்கள் முறையிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அமைச்சர் காமராஜ், தம்பி.பிரகாஷைக் கண்டித்ததாகவும், சாவியை வாங்கி லாக்கரைத் திறந்து பரிசோதிக்க உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.

 கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு
கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு

திருவாரூர் கூட்டுறவு துணைப் பதிவாளர் கார்த்திகேயன் தலைமையில் கூட்டுறவு அலுவலர்கள் பில்லூர் சென்றனர். கூட்டுறவு அதிகாரிகள் முன்பு, சங்கத்தின் லாக்கர் திறக்கப்பட்டிருக்கிறது. லாக்கரைத் திறந்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. லாக்கருக்குள் வைக்கப்பட்டிருந்த ரூ.20 லட்சம் ரொக்கம் மாயமாகியிருக்க, ரூ.12 லட்சம் மதிப்புள்ள நகைகளும் லாக்கரில் இல்லையென்று கூறப்படுகிறது.

கதிரவன் மரணமடைந்த பின்னர், லாக்கரிலிருந்த ரூ.20 லட்சம் ரொக்கம், ரூ.12 லட்சம் மதிப்புள்ள நகைகள் மாயமானது எப்படி... லாக்கரிலிருந்த ரொக்கம், நகைகள் இப்போது எங்கிருக்கின்றன... லாக்கரிலிருந்த ரொக்கம், நகைகளைத் துணிகரமாகக் கையாடல் செய்தது யார்... இவை குறித்து திருவாரூர் கூட்டுறவு பதிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

‘‘டாஸ்மாக் திறப்பில் காட்டிய வேகம், கூட்டுறவு வங்கிப் பிரச்னையில் இல்லையே?’’

இது குறித்து திருவாரூர் மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளர் கார்த்திகேயனைத் தொடர்பு கொண்டு பேசினோம். ``பில்லூர் கூட்டுறவு கடன் சங்கத்தின் லாக்கரில் ரொக்கம், நகைகள் மாயமானது உண்மைதான். இது தொடர்பாக நான்கு பேரிடம் விசாரணை நடந்துவருகிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். விசாரணை அறிக்கை வந்ததும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு