Published:Updated:

`கொடுத்தது 500 டோக்கன் தான்.. ஆனாலும் குறையாத கூட்டம்?’ -கடலூரில் சிக்கிய ஜெராக்ஸ் கும்பல்

டாஸ்மாக் டோக்கன்கள்
டாஸ்மாக் டோக்கன்கள்

டாஸ்மாக் டோக்கனை ஜெராக்ஸ் எடுத்து பிளாக்கில் விற்பனை செய்த 20 பேரை அதிரடியாகக் கைது செய்திருக்கிறது கடலூர் மாவட்ட காவல்துறை.

இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாடு முழுவதும் மார்ச் 24-ம் தேதி முதல் மே 17-ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருள்களை விற்கும் கடைகளுக்கு நேரக்கெடு விதித்து சில தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், கடந்த 7-ம் தேதி சென்னையைத் தவிர தமிழகத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் திறந்தது தமிழக அரசு. ஆனால் இரண்டே நாள்களில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

போலி டோக்கன் கும்பலிடம் காவல்துறை விசாரணை
போலி டோக்கன் கும்பலிடம் காவல்துறை விசாரணை

ஆனால் அந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது தமிழக அரசு. அந்த மனு மீதான விசாரணையையடுத்து, இந்தியாவில் மதுக்கடைகளுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், தமிழத்தில் மதுக்கடைகளைத் திறக்கத் தடையில்லை என்று உத்தரவிட்டது. அதையடுத்து டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க டோக்கன் முறையில் மதுவை விநியோகிக்க முடிவெடுத்தது. அதன்படி ஒரு கடைக்கு நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே விநியோகிக்கப்பட்டன.

இன்று காலை 10 மணிக்குத் தமிழகத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டன. கைகளில் குடையுடன், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர். அதன்படி கடலூரில் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகே இருக்கும் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை வாங்குவதற்கு இன்று 500 பேருக்கும் நாளை 500 பேருக்கும் தேதி குறிப்பிட்டு டோக்கன்கள் வழங்கப்பட்டன.

ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட போலி டாஸ்மாக் டோக்கன்
ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட போலி டாஸ்மாக் டோக்கன்

இன்றைய டோக்கன்களைப் பெற்ற 500 பேருக்கு மட்டும் மதுபாட்டில்கள் விநியோகிக்கப்பட்டன. ஆனால் நேரம் செல்லச் செல்ல கூட்டம் குறையாததுடன், அதிகரிக்கத் தொடங்கியதால் காவல்துறையினரும், டாஸ்மாக் ஊழியர்களும் குழம்பிப் போனார்கள்.

ஒருகட்டத்தில் புதிதாக வந்து வரிசையில் நின்றவர்களை பிடித்து விசாரித்தது போலீஸ். அதற்கு ”எங்களுக்கு நாளைக்குத்தான் டோக்கன் குடுத்திருக்காங்க. அதுவரைக்கும் நாங்க என்ன பண்றது ? அதான் பஸ் ஸ்டாண்டு பக்கத்துல 200 ரூபாய்க்கு பிளாக்கில் டோக்கனை வாங்கிட்டு வர்றோம்” என்று அவர்கள் கூற, டோக்கன்களைப் பெற்ற 500 பேரும் இங்கிருக்கும்போது எப்படி பிளாக்கில் விற்கப்படுகிறது என்று குழம்பிப் போனது காவல்துறை. அதையடுத்து ரகசியமாக ஒருவரிடம் பணம் கொடுத்து டோக்கனை வாங்கிவரச் சொன்னது.

`நாளொன்றுக்கு 500 பேர்; 7 வண்ண டோக்கன்கள்!' -டாஸ்மாக் நிர்வாகத்தின் சிறப்பு ஏற்பாடு

அந்த டோக்கனில் இன்றைய தேதி போடப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த காவல்துறை, அந்தக் கும்பலைச் சுற்றி வளைத்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், இன்றைய தேதியில் விநியோகிக்கப்பட்ட டோக்கனை ஜெராக்ஸ் எடுத்து அதனை விற்பனை செய்தது தெரியவந்தது. அதையடுத்து 20 பேரையும் அதிரடியாகக் கைது செய்திருக்கிறது காவல்துறை.

அடுத்த கட்டுரைக்கு