Published:Updated:

காரில் கஞ்சா கடத்திய கும்பல்! - பெரம்பலூர் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தி மடக்கிய போலீஸ்

எம்.திலீபன்

கஞ்சா கடத்திய கும்பல் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களைக் கைது செய்தனர்.

கஞ்சா
கஞ்சா

கஞ்சா கடத்திய கும்பல் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி குற்றவாளிகளைக் கைது செய்த சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களிடமிருந்து 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பெரம்பலூர் அருகே திருச்சி டூ சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை என்ற இடத்தில் டோல்பிளாசா உள்ளது. இங்கு இன்று மதியம் 1.30 மணியளவில் மதுரை பதிவு எண் கொண்ட கார் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.அந்த கார் நிலைதடுமாறி ஒரு மரத்தின் மீது மோதி நிறுத்தப்பட்டது அதிலிருந்தவர்களை போலீஸார் வேக வேகமாகச் சென்று மடக்கிப் பிடித்தனர். இது அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியது.

கஞ்சா பொட்டலம்
கஞ்சா பொட்டலம்

பின்பு காவல்துறை விசாரணையில் வாகனத்தில் வந்தவர்கள் மதுரையைச் சேர்ந்த வழிவிடு முருகன், படமுனியசாமி என்ற கஞ்சா வியாபாரிகள் என்பதும், அவர்கள் ஆந்திராவிலிருந்து காரில் கஞ்சா கடத்தி வருவதாக மதுரை காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த காரை அவர்கள் பின் தொடர்ந்து வந்திருக்கின்றனர்.

திருமாந்துறை சுங்கச்சாவடியில் காரை மறித்தபோது நிற்காமல் சென்றது. இதையடுத்து போலீசார் கார் டயர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து கார் நிறுத்தப்பட்டு அதிலிருந்தவர்கள் கைது செய்யப்பட்டது தெரிய வந்தது. காரில் 200 கிலோ கஞ்சா மூட்டைகள் இருந்தது.

கஞ்சா
கஞ்சா

இதுகுறித்து போலீஸார் தரப்பில் பேசினோம்.``இச்சம்பத்தில் பெரும் தலைகள் தலையிட்டிருப்பதாகவும் தகவல் வருகிறது. தற்பொழுது தான் விசாரணையைத் தொடங்கியிருக்கிறோம். பிறகு பேசுகிறோம்'' என முடித்துக்கொண்டார்கள்.