Published:Updated:

நெல்லை : `41 கொலை வழக்கு; தொடர்புடையவர்கள் அனைவரும் கைது!’ - 2020 க்ரைம் ரிப்போர்ட்

நெல்லை மாவட்ட எஸ்.பி மணிவண்ணன்
நெல்லை மாவட்ட எஸ்.பி மணிவண்ணன்

நெல்லை மாவட்டத்தில் நடந்த குற்றச் சம்பவங்களைத் தடுக்க, மாவட்டக் காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. அதனால் 2020-ம் ஆண்டில் 122 குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் காவல்துறை அறிவித்திருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா பாதிப்பு, லாக்டெளன், புயல், வெள்ளம் என 2020-ம் ஆண்டு சேதங்களைச் சந்தித்தப்போதிலும், குற்றச் செயல்களைத் தடுக்க நெல்லை மாவட்ட காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

`அப்பாகூட உட்கார்ந்து சாப்பிடக்கூட முடியலை’ -நெல்லை காவல்துறை அதிகாரியின் மகள் உருக்கம்

ஆனாலும், கொலை, கொள்ளை, சாலை விபத்துகள் என தொடர்ந்து நடந்தன. இருப்பினும் அத்தகைய குற்றச் செயல்களைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் குற்றங்கள் குறைந்திருப்பதாக நெல்லை மாவட்ட எஸ்.பி-யான மணிவண்ணன் தெரிவித்திருக்கிறார்.

குண்டர் தடுப்புச் சட்டம்!

``நெல்லை மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 112 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. சட்டம், ஒழுங்குப் பிரச்னையில் ஈடுபட்ட 80 பேர், தொடர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட 11பேர், இரு கள்ளச்சாராயப் பேர்வழிகள், ஒன்பது பாலியல் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

கைது
கைது
representational image

அத்துடன், போதைப்பொருள், கஞ்சா விற்பனை செய்த 10 பேர், மணல் கடத்தலில் ஈடுபட்ட 10 பேர் உட்பட 122 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டனர். கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 86 பேர் குண்டர் சட்டத்தில் கைதாகியிருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த 2019-ம் ஆண்டு, நெல்லை மாவட்டத்தில் 102 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அதனால் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2020-ல் 20 பேர் கூடுதலாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு 41 கொலைச் சம்பவங்கள் நடந்த நிலையில், அவற்றில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் கைதுசெய்யப்பட்டனர்.
மணிவண்ணன், நெல்லை மாவட்ட எஸ்.பி

2020-ம் ஆண்டில் மாவட்டம் முழுவதும் 41 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. முந்தைய ஆண்டைவிடவும் ஆறு சம்பவங்கள் அதிகமாக நடந்திருக்கின்றன. இருப்பினும், அனைத்துக் கொலை வழக்குகளிலும், தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள்!

கூட்டுக்கொள்ளை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு ஆகியவை தொடர்பாக 345 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. அவற்றில், 205 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து ரூ.79,00,000/- மதிப்பிலான நகை மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

எஸ்.பி அலுவலகம்
எஸ்.பி அலுவலகம்

நெல்லை மாவட்டம் முழுவதும் நிலுவையிலிருந்த ஒன்பது பழைய சொத்து வழக்குகள் விசாரணைக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.5,29,000 மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டன. அதனால் மாவட்டம் முழுவதும் 84 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, பணம் உள்ளிட்ட சொத்துகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் போதை தடுப்பு குற்றம் தொடர்பாக 167 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. அவற்றின் மூலம் நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான 75 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

நெல்லை: `தந்தையின் மரணம்; கடமை முக்கியம்!’ - அணிவகுப்பை ஏற்று நடத்திய பெண் காவல் ஆய்வாளர்

அத்துடன், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், கடத்தி வந்து விற்பனை செய்தவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 769 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு 896 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மணல் திருட்டு!

2020-ம் ஆண்டு, சட்ட விரோதமாக ஆற்று மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மணல் கடத்தல் தொடர்பாக 347 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மணல் கடத்தலில் ஈடுபட்ட 527 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

ஆற்று மணல் கடத்தலில் ஈடுபட்ட கடத்தல்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
மணிவண்ணன், நெல்லை மாவட்ட எஸ்.பி

கடத்தலுக்குத் துணையாக இருந்த 405 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மணல் கடத்தல் தொடர்பாக 10 பேர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டனர். முந்தைய ஆண்டில் மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையைவிடவும் கூடுதலாக 163 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

2020-ம் ஆண்டு, நெல்லை மாவட்டத்தில் 720 சாலை விபத்துகள் நடந்திருக்கின்றன. இந்த விபத்துகளில் 147 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். 2019-ம் ஆண்டில் 851 சாலை விபத்துகளும், 203 மரணங்களும் நிகழ்ந்த நிலையில், கடந்த ஆண்டு 27.5 சதவிகித சாலை விபத்து உயிரிழப்புகள் குறைந்திருந்தன.

காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன்
காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன்

இந்த ஆண்டிலும் நெல்லை மாவட்ட காவல்துறை விவேகமாகவும் துரிதமாகவும் செயல்பட்டு குற்றம் மற்றும் சாலை விபத்துகள் நடவாமல் தடுப்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் தெரிவித்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு