Published:Updated:

உ.பி: போலீஸார் கொலை; அதிகாரிகள் தொடர்பு? -ரௌடியைத் தேடும் பணியில் 3000 காவலர்கள்

விகாஸ் தூபே
விகாஸ் தூபே ( ANI )

``விசாரணையில், தூபேவுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் மூன்று காவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இரண்டு துணை ஆய்வாளர்களும் ஒரு கான்ஸ்டபிளும் அடங்குவர்.”

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிக்ரூ என்ற கிராமத்தில், கடந்த சில நாள்களுக்கு முன்பு விகாஸ் தூபே என்ற ரவுடி எட்டு காவலர்களை சுட்டுக்கொன்றார். இதனையடுத்து, அங்கிருந்து தப்பி ஓடிய அவரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர். இரவுபகலாகப் பல மாநிலங்களின் எல்லைப் பகுதிகளிலும் காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர். எனினும், தூபேவைப் பிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறிவருகின்றனர். இந்த நிலையில், விகாஸ் தூபே இருக்கும் இடம் பற்றிய தகவல்களைத் தருபவர்களுக்கு 50,000 சன்மானம் வழங்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர், இந்த சன்மானம் ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டது. தற்போது, அதிகாரிகள் இந்த ஒரு லட்சம் சன்மானத்தை 2.5 லட்சமாக உயர்த்தி அறிவித்துள்ளனர்.

உ.பி காவலர்கள்
உ.பி காவலர்கள்
ANI

அம்மாநிலத்தின் டிஜிபி ஹிடேஷ் சந்திரா, இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மாநிலம் முழுவதும் 3000-க்கும் மேற்பட்ட காவலர்கள் சுமார் 50 குழுக்களாகப் பிரிந்து, தூபேவைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி அவஸ்தி, ``மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களிலும் தூபேவைக் கைதுசெய்வது தொடர்பான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. அவர்களைத் தேடும்பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது” என்று கூறியுள்ளார். ரவுடி தூபேவின் புகைப்படம் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரிகள், தூபேயின் வீட்டை இடித்துத் தரைமட்டமாக்கினர். அப்போது, அதிக அளவில் ஆயுதங்களும் வெடிமருந்துகளும் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உ.பி காவலர்கள்
உ.பி காவலர்கள்
ANI

காவல்துறையினர் தூபேவை கைதுசெய்யச் சென்றபோதுதான் காவலர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. எனவே, தூபேவுக்கு காவலர்கள் வருகை குறித்து ஏற்கெனவே தகவல் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தகவலை தூபேவுக்கு யார் அளித்திருப்பார்கள் என்று காவலர்களிடமும் விசாரணை நடைபெற்றுவருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ரவுடிகளுடனான தொடர்புகுறித்து சுமார் 30 காவலர்களிடம் விசாரணை நடந்துவருவதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, விசாரணையில் தூபேவுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் மூன்று அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இரண்டு துணை ஆய்வாளர்களும் ஒரு கான்ஸ்டபிளும் அடங்குவர். இந்தச் சம்பவத்தில், அவர்களின் தொடர்பு உறுதிபடுத்தப்பட்டால், அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பும் ஒரு காவலர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உ.பி போலீஸார் கொலை: `ரவுடிக்கு வந்த போன்கால்’ - அதிர்ச்சி கொடுத்த வாக்குமூலம்
அடுத்த கட்டுரைக்கு