Published:Updated:

விருதுநகர்: மனைவியின் தோட்டத்தில் சந்தனக்கட்டைகளைப் பதுக்கிய வன அலுவலர்!-கடத்தல் கும்பலுடன் தொடர்பா?

பறிமுதல் செய்யப்பட்ட 327 கிலோ சந்தனக்கட்டைகள்
பறிமுதல் செய்யப்பட்ட 327 கிலோ சந்தனக்கட்டைகள்

விருதுநகரில், கோவையில் பணிபுரிந்துவரும் வன அலுவலருக்குச் சொந்தமான தோட்டத்தில் 327 கிலோ சந்தன மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் உள்ளது பந்தப்பாறை. இங்கு, கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகத்தில் வன அலுவலராகப் பணிபுரிந்துவரும் ஆரோக்கியசாமி என்பவருக்குச் சொந்தமான தோட்டம் இருக்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூர்தான் இவரது சொந்த ஊர். இவரது தோட்டத்தில் சந்தனமரக் கட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, மாவட்ட வன உதவி அலுவலர் அல்லிராஜ், வனச்சரகர் அன்னக்கொடி தலைமையிலான வனத்துறையினர் 15 பேர், அந்தத் தோட்டத்தில் சோதனையிட்டனர்.

ஆரோக்கியசாமிக்கு சொந்தமான தோட்டம்
ஆரோக்கியசாமிக்கு சொந்தமான தோட்டம்

தோட்டம் முழுவதும் சுற்றித் திரிந்த மோப்ப நாய் `சிமி’, தோட்டத்திலுள்ள வீட்டுக்குள் சீறிப்பாய்ந்தது. அங்கு, கோணிப் பைகளால் மூடிவைக்கப்பட்டிருந்த சந்தனமரக் கட்டைகளை அடையாளம் காட்டியது. அதில், அடுக்கிவைக்கப்பட்டிருந்த 327 கிலோ சந்தனக்கட்டைகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த வீட்டைச் சுற்றி பலவகை மரக்கட்டைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஆரோக்கியசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இந்தத் தோட்டம் ஆரோக்கியசாமியின் மனைவி கலைவாணி பெயரில் இருப்பதால், அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆரோக்கியசாமியிடம், மாவட்ட வன அலுவலர் முகம்மது சபாப் தலைமையிலான அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இது குறித்து வனத்துறையினர் சிலரிடம் பேசினோம், ``வன அலுவலர் ஆரோக்கியசாமி பணிபுரியும் போளுவாம்பட்டி வனச்சரகத்தில் சந்தனமரக் கடத்தல் அதிமாக நடந்துவருகிறது. அதே சரகத்துக்குட்பட்ட முள்ளாங்காடு, போராத்தி ஆகிய இடங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தனமரங்கள் வெட்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. விசாரணையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆரோக்கியசாமி அடிக்கடி ஸ்ரீவில்லிபுத்தரிலுள்ள இந்தத் தோட்டத்துக்கு வந்து சென்றிருக்கிறார். வேட்டைத் தடுப்பு காவலர் இருவர் ஆரோக்கியசாமி வந்து சென்ற காரை ஓட்டி வந்திருக்கிறார்கள். இதில், ஒரு வேட்டைத் தடுப்புக் காவலர் போலி பில் மோசடியில் ஏற்கெனவே சிக்கியவர்.

பறிமுதல் செய்யப்பட்ட சந்தனமரக் கட்டைகள்
பறிமுதல் செய்யப்பட்ட சந்தனமரக் கட்டைகள்

ஆரோக்கியசாமி, இதற்கு முன்பு குற்றாலம், முதுமலை வனச்சரகத்திலும் பணியாற்றியிருக்கிறார். அவருடைய மகனும் மகளும் பிலிப்பைன்ஸில் மருத்துவம் படித்துவருவதாகச் சொல்கிறார்கள். அவர் மட்டுமல்லாமல், அவருடன் பணிபுரியும் அதிகாரிகளையும் விசாரிக்கத் திட்டமிட்டிருக்கிறது வனத்துறை. அவரது செல்போன் அழைப்புகளைவைத்தும் விசாரணை நடத்தப்படவிருக்கிறது. சந்தனமரக் கடத்தல் கும்பல்களுடன் ஆரோக்கியசாமிக்கு ஏதும் தொடர்பு உள்ளதா, ஆரோக்கியசாமியின் பின்புலத்தில் இருப்பது யார் ஆகியவை குறித்தும் விசாரணை செய்துவருகிறார்கள்” என்றனர்.

``ஆரோக்கியசாமி, அவருடைய மனைவி கலைவாணியிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். அந்த விசாரணை அறிக்கை, மாநில வனத்துறைக்கு சமர்ப்பிக்கப்பட்டதும் ஆரோக்கியசாமி மீது வழக்கு பதிவு செய்யப்படும்” என்றனர் வனத்துறை அதிகாரிகள். வனத்துறை அதிகாரிக்குச் சொந்தமான தோட்டத்தில் சந்தனமரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

சந்தனக்கட்டைகள் கடத்தல் தடுப்பு குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலரிடம் பேசினோம். ``மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் மற்றும் கேரள மாநிலம் சின்னாறு, மறையூர் வனச்சரகப் பகுதிகளில் சந்தன மரங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. வனத்தில் காணப்படும் முதிர்ச்சியடைந்த மரங்கள், பட்டுப்போகும் மரங்கள் வனத்திலிருந்து அகற்றப்பட்டு ஏலம் விடப்பட்டுவருகின்றன. இம்முறையில் குறைந்த அளவு சந்தனக்கட்டைகளே ஏலம் விடப்படுவதால் வெளிச்சந்தைகளில் சந்தனக்கட்டைகளில் இதன் தேவை அதிகமாகிறது. இதனால், சந்தனமரங்கள் அதிகம் வளரும் மேற்குத் தொடர்ச்சி மலை, சந்தனக்கட்டை கடத்தல் கும்பல்களின் மையமாக இருக்கிறது. கண்காணிப்பு இல்லாத நேரங்களில் கடத்துகின்றனர். இதில், சின்னாறு வனச்சரகம், தமிழக-கேரள எல்லைப்பகுதியில் இருக்கிறது. இங்கு கடத்தல் கும்பல்கள் சந்தன மரங்களை வெட்டி பல வழித்தடங்களில் கடத்துகின்றனர். கண்காணிப்பு இல்லாத வழிப்பாதையிலேயே இந்தக் கும்பல்கள் கடத்திச் செல்கின்றன.

ஆரோக்கிய சாமியின் தோட்டம்
ஆரோக்கிய சாமியின் தோட்டம்

இவர்கள், அடிக்கடி வழிப்பாதையை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். வனத்துக்குள் இந்தக் கும்பலின் ஆதிக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில்கூட கடத்தல் கும்பலால் ஒரு பெண் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். பணியாளர்கள் பற்றாக்குறையாலும், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததாலும் வனத்துறையினர் திணறிவருகிறார்கள். இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக சந்தனமரங்களைப் பாதுகாப்பதற்காக மட்டும் தனிச்சரகம் அமைத்து பணியாளர்களை நியமிக்க வேண்டும். இதனால், சந்தன மரங்களைப் பாதுகாப்பதுடன் கடத்தல்களையும் தடுக்க முடியும். வனத்தின் பாதுகாப்பு கருதி அரசு புதிய சரகத்தை உருவாக்கிட வேண்டும்” என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு