Published:Updated:

வசூல்மழை முதல் ஏ.டி.ஜி.பி. டிரான்ஸ்ஃபர் வரை... நச்சுன்னு நாலு போலீஸ் செய்திகள்!

இந்த வாரம் சென்னை போலீஸார் மத்தியில் ரவுண்ட் அடித்த நான்கு போலீஸ் செய்திகளின் தொகுப்பு.

போலீஸ்
போலீஸ்

1. தீயணைப்புத் துறையில் கொழிக்கும் உயரதிகாரி

தீயணைப்புத்துறையில விரைவில் ஓய்வுபெறப் போகிற காவல்துறை உயரதிகாரி ஒருவர் வசூல்மழையில் கொழிக்கிறாராம். சென்னை மாநகருக்குள் இருக்கும் தீயணைப்பு அதிகாரிகள் பலரும், சொந்த ஊரில் செட்டில் ஆவதையே விரும்புகிறார்கள். இதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும் அந்த உயரதிகாரி, ஒரு டிரான்ஸ்ஃபருக்கு இரண்டு லட்ச ரூபாய் வரைக்கும் கறந்துவிடுகிறாராம். அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனை, வணிக வளாகம் என ஆகிய எல்லாவற்றிற்கும் `ஃபயர் டிபார்ட்மென்ட்’ அனுமதி வேண்டும். அதிலும் மனிதர் புகுந்து விளையாடுவதாகச் செய்திகள் உலாவருகின்றன.

தீயணைப்புத்துறை வாகனம்
தீயணைப்புத்துறை வாகனம்

2. தேனாம்பேட்டை ஸ்டேஷன் மீது கமிஷனர் கடுப்பு!

தேனாம்பேட்டையில் வருமானவரித்துறை உயரதிகாரியின் மகன் ஒருவர், மேம்பாலம் அருகில் உள்ள புகழ்பெற்ற ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு இரண்டு வாரத்துக்கு முன்பு சென்றிருக்கிறார். உள்ளே பாரில் பானத்தோடு இருந்தவரிடம் நைஸாகப் பேச்சுக் கொடுத்த ஒருவர் `போனைக் கொடுங்க. என் போன் ஆஃப் ஆகிடுச்சு’ என்று பேசி யாரையோ அழைப்பதுபோல பேசிக்கொண்டே நடந்து வெளியே சென்றிருக்கிறார். சில நிமிடங்களில் அருகில் போனை வாங்கிய நபர் இல்லாததைக் கண்டதும் இவர் ஷாக் ஆகித் தேடியிருக்கிறார். உள்ளே எங்கும் இல்லை. இவர் உடனே வெளியில் வந்து தேடியிருக்கிறார். வெளியிலும் இல்லை. அதன் பிறகு அடுத்த அதிர்ச்சி.

லட்ச ரூபாய் அலைபேசி திருட்டுப் போன அதிர்ச்சியில் கடுப்பாக உள்ளே நடந்தவரை ஹோட்டலின் பவுன்ஸர்ஸ் தடுத்திருக்கிறார்கள். இவர் யார் என்ன என்று சொல்ல முயன்று, செல்போன் வேறு தொலைந்த கடுப்பில் கைகலப்பாகியிருக்கிறது. அதில் அந்த பவுன்ஸர்ஸ் இவரை அடித்தும்விட்டார்கள். விஷயம் தேனாம்பேட்டை காவல்நிலையத்துக்குச் சென்றது. உடனே சி.எஸ்.ஆர் மட்டும் ஃபைல் செய்து அப்போதைக்கு அனுப்பிவிட்டார்கள்.

மகன் அடிவாங்கியதால் கடுப்பான வருமானவரித்துறை உயரதிகாரி, போலீஸ் கமிஷனரிடம் நேரடியாகப் புகார் செய்திருக்கிறார். கமிஷனரும் தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்து நடவடிக்கை எடுக்கச் சொல்லியிருக்கிறார். அதன் பிறகும் அங்கிருந்து எந்த ரியாக்‌ஷனும் இல்லை. மீண்டும் விவகாரம் கமிஷனர் ஆஃபீஸுக்குப் போய் பஞ்சாயத்து ஆகியிருக்கிறது.

தேனாம்பேட்டை காவல் நிலையம்
தேனாம்பேட்டை காவல் நிலையம்

நடவடிக்கை எடுக்க மெத்தனம் காட்டுவதன் காரணம் இதுதான். தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் லிமிட்டில் நட்சத்திர ஹோட்டல்கள் மட்டும் ஏழு இருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் லட்ச ரூபாய்க்கு மேல் ஏரியா மேலதிகாரிக்கு ஒவ்வொரு ஹோட்டலும் படியளக்கின்றன. அதிலும் குறிப்பிட்ட மேம்பால ஹோட்டல் இலவச அறைகளெல்லாம் கொடுத்து கவனிக்கிறதாம். அதனால்தான் நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம் என்கிறது காக்கிச் சட்டை வட்டாரம்!

3. ரெடியாகுது ஏ.டி.ஜி.பி டிரான்ஸ்ஃபர்!

இரண்டரை வருடத்துக்கும் மேலாக சென்னை போலீஸ் கமிஷனராக இருப்பதால், கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை மாற்றப்போவதாகக் காவல்துறைக்குள் பலமாகப் பேச்சு உலவுகிறது. ஆனால், டி.ஜி.பி அலுவலக முக்கிய அதிகாரிகள் இச்செய்தியை மறுக்கிறார்கள். `முதல்வருக்கும் கமிஷனருக்கும் நல்ல சுமுகமான ரிலேஷன்ஷிப் இப்ப இருக்கு. சர்ச்சைக்கு பெயரெடுத்த மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர்தான் கமிஷனர் பதவிக்கு முட்டி மோதினாரு. ஏ.கே.வி என்ன லேசுப்பட்டவரா? பேசியே எல்லாத்தையும் ஊதித்தள்ளிட்டார்’ என்று பேசிக்கொள்கிறார்கள். `பெரிய அளவுல ஐ.பி.எஸ் டிரான்ஸ்ஃபர் ரெடியாகுது. விரைவிலேயே ஏ.டி.ஜி.பி பலபேருக்கு இடமாறுதல் இருக்கலாம்’ என்றும் பேச்சுகள் அடிபடுகின்றன.

4. தி.மு.க குடும்பத்தால் உயரதிகாரி அதிருப்தி!

மறைந்த தி.மு.க தலைவர் மு.கருணாநிதியின் மகள் செல்வியின் ஒரே மகள் டாக்டர்.எழிலரசி. இவரின் கணவர் டாக்டர்.ஜோதிமணி சமீபத்தில் பணமோசடி புகாரில் சிக்கி, சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு அழைத்துவரப்பட்டார். விடிய விடிய நடந்த பஞ்சாயத்தில், புகாரளித்த பார்ட்டிக்கு பணம் செட்டில் செய்யப்பட்டு, ஜோதிமணி விடுவிக்கப்பட்டார். விவகாரம் பெரிதானவுடன், ஜோதிமணிக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனச் செல்வி குடும்பம் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தது தனிக்கதை.

டாக்டர். ஜோதிமணி
டாக்டர். ஜோதிமணி
ஒரே மகளின் கணவரை உதறிய செல்வி குடும்பம்! யார் இந்த ஜோதிமணி?

இவ்விவகாரத்தில், மத்திய குற்றப்பிரிவின் மிக நேர்மையான உயரதிகாரி ஒருவர் ஏக அப்செட். உரிய நடவடிக்கை எடுக்க விடாமல், பஞ்சாயத்து செய்து விவகாரத்தை முடிக்கும்படி மேலிடம் உத்தரவிட்டதால் கடுப்பானவர், தனக்குக் கீழுள்ள அதிகாரிகளிடம் `நீங்களே பார்த்துக்கங்கப்பா’ எனக் கோபமாகச் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாராம். `மத்திய குற்றப்பிரிவுன்னாலே பஞ்சாயத்து மேடைதானே, இதுக்கா இவ்வளவு கோபப்படுறாரு? எப்படித் தாக்குப்பிடிக்கப் போறாரோ?’ என `உச்' கொட்டுகிறது காக்கிகள் வட்டாரம்.