Published:Updated:

நாளொன்றுக்கு சராசரியாக 4 பேர் ஆணவக்கொலை... அதிர்ச்சியளிக்கும் என்.சி.ஆர்.பி ரிப்போர்ட்!

காதல் படுகொலைகள்
News
காதல் படுகொலைகள்

2018-ம் ஆண்டின் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் பதிவுகளின்படி, இந்தியாவில், காதலித்ததற்காக ஒரு நாளில் சராசரியாக 4 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எல்லா துறையிலும் வளர்ச்சி கண்டுவிட்டதாகப் பெருமிதம்கொள்ளும் இந்த நூற்றாண்டில்கூட, காதல் செய்வதற்கு சாதி தடையாகவே இருக்கிறது.

நேற்றுதான் முடிந்தது காதலர் தினம். உலகம் முழுவதும் காதலர்கள் காதலில் திளைத்து, இந்த தினத்தைக் கொண்டாடும் போது, பிற்போக்கான சமூகங்களில், காதல் இன்றும் விலக்கப்பட்ட ஒன்றாகவே அணுகப்படுகிறது. இந்தியாவும் அத்தகைய சமூகங்களுள் ஒன்று. தமிழ்நாட்டின் நாட்டார் கதைகள் உயர்சாதியில் பிறந்த பெண்களைக் காதலித்ததால், கொல்லப்பட்ட மதுரை வீரன், காத்தவராயன் முதலானோரின் ஆணவக்கொலைகளின் பதிவுகளாக அமைந்துள்ளன. நூற்றாண்டுகளாகத் தொடரும் துயரமாக, காதலர்களை வதைக்கிறது சாதி. சாதியுடன் மதம், மொழி, நிறம், வர்க்க வேறுபாடுகள் முதலானவையும் காதலுக்கும், அவற்றைக் கடந்து காதலிப்பவர்களுக்கும் முதன்மை எதிரிகள்.

சம்பவம் -1:

நந்தீஷ் - சுவாதி படுகொலை...
நந்தீஷ் - சுவாதி படுகொலை...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கடந்த 2018 -ம் ஆண்டு, `காதல்' பட பாணியில் நடந்த நந்தீஷ், ஸ்வாதி ஆணவக்கொலை தமிழ்நாட்டையே உலுக்கியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தலித் சமூகத்தைச் சேர்ந்த நந்தீஷ், அதே ஊரில் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஸ்வாதியைக் காதலித்து, இருவரும் திருமணம் செய்துகொண்டனர். சாதியைக் காரணம் காட்டி, ஸ்வாதி வீட்டில் நந்தீஷை ஏற்கவில்லை. இதனால் அவர்கள் இருவரும் ஓசூரில் வாழ்ந்துவந்தனர். இந்நிலையில், ஸ்வாதி கர்ப்பிணியாக இருப்பதை அவரது வீட்டில் தெரிவிக்க, முதலில் சரியாகப் பேசாத ஸ்வாதியின் பெற்றோர், அதன்பின் பாசமாகப் பேசியுள்ளனர். ஸ்வாதியின் உறவினர்கள் ஓசூரிலிருந்து தம்பதியை அழைத்து வரும்வழியில், இருவரையும் மாறிமாறித் தாக்கியுள்ளனர். பின்னர், கர்நாடகாவில் உள்ள காவிரி ஆற்றில் கைகள், கால்களைக் கட்டியபடி, இருவரையும் வீசினர். நெஞ்சை உறையவைக்கும் இந்தப் படுகொலை, காதலுக்கு எதிரான சாதியின் பெயரால் நிகழ்ந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சம்பவம் - 2:

அம்ருதா பிரணாய்
அம்ருதா பிரணாய்

தெலங்கானா மாநிலத்தில்,ஆதிக்க சாதி சமூகத்தைச் சேர்ந்த அம்ருதா, தலித் சமூகத்தைச் சேர்ந்த பிரணாயைக் காதலித்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். செப்டம்பர் 2018-ல், மருத்துவப் பரிசோதனைக்குப் பின் வீடு திரும்பும்போது, பிரணாய் தனது கர்ப்பிணி மனைவியின் கண் முன்னால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தக் கொடூரமான கொலைக்குக் காரணமாக, `பிரணாயின் சாதி மற்றும் அவரின் செல்வாக்கை ஏற்க முடியவில்லை' என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் அம்ருதாவின் தந்தை மாருதி ராவ். தற்போது பிரணாயின் படங்களைப் பார்த்து, அப்பாவைத் தேடிக் கொண்டிருக்கிறது பிரணாய் - அம்ருதா தம்பதியின் ஒரு வயது குழந்தை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுபோன்ற எத்தனையோ சாதி ஆணவக் கொலைகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன. உதாரணங்களாக சொல்லப்பட்டவைகளில் எஞ்சியிருக்கும் கொடூரத்தையே நம்மால் எளிதில் கடந்துவிட முடிவதில்லை. 2018-ம் ஆண்டின் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் பதிவுகளின்படி, இந்தியாவில், ஒரு நாளில் சராசரியாக 4 பேர் காதலித்ததற்காகக் கொல்லப்பட்டிருக்கின்றனர். எல்லா துறைகளிலும் வளர்ச்சி கண்டுவிட்டதாகப் பெருமிதம்கொள்ளும் இந்த நூற்றாண்டில் கூட, சாதி ஒரு பிரச்னையாகத்தான் இருக்கிறது. இதற்கு எவ்வித சட்டமும் கடுமையானதாக இல்லை. உயர்சாதி வாக்குகளை இழக்க விரும்பாத எந்தக் கட்சியும் இப்படியான சட்டத்தைக் கொண்டுவர விரும்புவதும் இல்லை. மேலும், இவற்றில் பெரும்பாலான விவகாரங்கள் வெளியில் தெரிவதும் இல்லை; தெரியவரும் விவகாரங்களும், வெவ்வேறு வழக்குகளாகப் பதிவாகிவிடுகின்றன.

காதல் படுகொலைகள்
காதல் படுகொலைகள்
Vikatan Infographics

2019 -ம் ஆண்டு, மக்களவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் எம்.பி-யுமான தொல்.திருமாவளவன் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் நடந்துவரும் ஆணவக் கொலைகள்குறித்து கேள்வியெழுப்பினார். அதற்கு உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய், ``ஆணவக் கொலைகளைத் தடுப்பது மற்றும் தீர்வுகாண்பது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்க, அந்தந்த மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த ஆணவக் கொலைகளை மாவட்ட வாரியாகக் கணக்கெடுத்து, மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க விழிப்புணர்வு அளிக்கவும், இச்சம்பவங்களைப் பற்றி புகாரளிக்க 24 மணிநேரமும் செயல்படும்-வண்ணம் ஒரு தனிப்படை அமைக்கவும் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது" என்றார். எனினும் ஆணவக் கொலைகளின் அடிப்படையை ஆராயவில்லை அந்த விவாதம்.

தமிழக அரசு, ஆணவக் கொலைகளுக்கு எதிரான எந்த சட்டத்தையும் அமல்படுத்தவில்லை. கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 9 -ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றம் தாமாகவே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது, இந்த சம்பவங்களுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக தமிழக அரசு சார்பில் எடுத்த நடவடிக்கைள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அந்த அறிக்கையில், ``சமூக நலத்துறையின் கீழ் அனைத்துக் காவல்நிலையங்களிலும் சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது" என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. அவற்றை ஆய்வுசெய்த நீதிபதிகள், ``தமிழகம் முழுவதும் சுமார் 1,300 காவல் நிலையங்கள் இருப்பதாகவும், அனைத்துக் காவல் நிலையங்களிலும் சிறப்புப் பிரிவு அமைப்பது என்பது சாத்தியமில்லை. ஆணவக்கொலை தொடர்பான தமிழக அரசின் அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என்றும், மேலும் ஆணவக்கொலையைத் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் உத்தரவிட்டது. அதன்பிறகு, அந்த உத்தரவு கிடப்பில் போடப்பட்டது.

திருமாவளவன்
திருமாவளவன்

கொலைகளைச் செய்பவர்கள் பற்றி புகார் பதிவு செய்யவேண்டிய காவல்துறையினரே இக்குற்றங்களுக்குத் துணையாக நின்றிருக்கிறார்கள் என்பது வரலாறு. உசிலம்பட்டியைச் சேர்ந்த விமலாதேவி மற்றும் திலீப்குமார், சாதியை மீறி காதலித்து திருமணம் செய்து, கேரளாவில் வாழ்ந்துவந்தனர். உசிலம்பட்டி போலீஸ் கேரளாவுக்கு வந்து, ``குடும்பத்துடன் ஒண்ணா சேர்த்துவைக்கிறோம்" என்று அழைத்துவந்தது. காவல்துறையை நம்பி ஊருக்கு வந்த இருவரும் எரித்துக் கொல்லப்பட்டனர்.

ஆணவப் படுகொலைகள் குறித்து, களத்தில் தொடர்ந்து பணியாற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின் பொதுச்செயலாளரான சாமுவேல்ராஜிடம் பேசினோம். ``நாட்டில் ஆணவக் கொலையைக் கையாள்வதற்கு எந்தவொரு பிரத்யேகச் சட்டமும் இல்லை; பிரிவு 302 (கொலை) மற்றும் பிரிவு 299 (குற்றவாளி படுகொலை) ஆகியவற்றின்கீழ் மட்டுமே. காவல்துறையினர் வழக்குகளைப் பதிவுசெய்கிறார்கள். ஆணும், பெண்ணும் காதலிப்பது இயல்புதான். ஆனால், சாதிவெறியாலும் தன் குடும்ப கௌரவத்துக்காகவும் காதலர்கள் கொல்லப்படுகிறார்கள். இதைத் தடுக்க பல்வேறு கோரிக்கைகளை வைத்தும், தமிழக அரசு எந்தச் சட்டமும் கொண்டு வரவில்லை. ஏனென்றால், இங்கு ஜனநாயகம், ஜாதி நாயகமாக இருக்கிறது. ஆதிக்க ஜாதி வாக்குகளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள், ஆதிக்க ஜாதி மக்களின் மனது கோணாமல் இருக்க எந்தச் சட்டத்தையும் கொண்டு வருவதில்லை. இதுபோன்ற தம்பதியினருக்கு எங்களால் முடிந்த அளவுக்கு உதவி செய்கிறோம். ஆனால், அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்தப் படுகொலைகளைத் தவிர்க்க முடியும். சாதியைப் பற்றி கல்வி இயக்கங்களுக்கும், ஊடகங்களுக்கும் அரசாங்கத்துடன் சேர்ந்து சமூகத்துக்கும் விழிப்புணர்வு வேண்டும்" என்று தன் வேதனையைப் பகிர்ந்து கொண்டார்.

சாமுவேல்ராஜ்
சாமுவேல்ராஜ்

காதல் என்பது இயற்கையானது. இயற்கையான காதலுக்கு எதிராக மனிதன் உருவாக்கிய சாதி, மதம், இனம், மொழி, வர்க்கம் முதலானவை பயன்படுத்தப்படுகின்றன. மேலும், சாதிய ஆணவக்கொலைகள் மூலம், `பெண் என்பவள் ஒரு சாதியின் தனிச்சொத்து' என்ற கருத்தையும் அமல்படுத்துகின்றனர் சாதிவெறியர்கள். சாதி மீதான அதீதப் பற்று, தான் பெற்ற பிள்ளைகள் என்று பார்க்காமல் அவர்களைக் கொலை செய்யத் தூண்டுகிறது. சாதி என்ற மனித விரோதத்தை வெறும் சட்டங்களால் மட்டுமே ஒழித்துவிட முடியாது. சாதியை ஒழிப்பது என்பது மக்களின் மனநிலை மாற்றத்திலிருந்து தொடங்குகிறது. சாதி, மத பேதங்களிடம் ஒருபோதும் தோற்கக் கூடாதது, காதல்!

- கௌசிகா இளங்கோவன்.