Published:Updated:

`பறிமுதல் செய்த வாகனங்களில் பெட்ரோல் திருட்டு!' -ஊர்க்காவல் படை கைவரிசையால் மிரண்ட பரமக்குடி போலீஸ்

பரமக்குடி காவல் நிலையம்
பரமக்குடி காவல் நிலையம்

பரமக்குடி நகர் மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் சில வாகனங்களில் பெட்ரோல் சப்ளையாகும் பகுதிகள் சேதமடைந்து காணப்பட்டன.

ஊரடங்கை மீறியதால் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களிலிருந்து பெட்ரோலைத் திருடிய ஊர்க்காவல் படையைச் சேர்ந்த நால்வரை போலீஸார் கைது செய்தனர். பரமக்குடி காவல் நிலையத்தில் நடந்த இந்தச் சம்பவம் ஊர்க்காவல் படையினரின் சேவையைக் கேள்விக்குறியாக்கி உள்ளது.

பரமக்குடி நகராட்சியில் கொரோனா  தடுப்புப் பணி
பரமக்குடி நகராட்சியில் கொரோனா தடுப்புப் பணி

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக நாடு முழுவதும் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நேற்றுடன் முடிவடைய இருந்த இந்த ஊரடங்கு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நேரங்களில் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கின் போது தேவையின்றி இரு சக்கர வாகனங்களில் சுற்றுபவர்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் அதை மீறுபவர்களுக்குப் பல்வேறு விநோதத் தண்டனைகளை போலீஸார் வழங்கி வருகின்றனர்.

வாகன சோதனை
வாகன சோதனை

ஆனாலும் ஊரடங்கினை மீறி இரு சக்கர வாகனங்களில் பயணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் அபராதம் விதிப்பு, வழக்குப் பதிவு, வாகனங்களைப் பறிமுதல் செய்வது எனப் பல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் இரு சக்கர வாகனங்கள் அந்தந்த ஊரில் உள்ள காவல் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி நகராட்சிப் பகுதியிலும் போலீஸார் வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பரமக்குடி நகர் மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதில் தாலுகா காவல் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சில வாகனங்களில் பெட்ரோல் சப்ளையாகும் பகுதிகள் சேதமடைந்து காணப்பட்டன.

பரமக்குடி காவல் நிலையத்தில் பறிமுதல் வாகனங்கள்
பரமக்குடி காவல் நிலையத்தில் பறிமுதல் வாகனங்கள்

இதையடுத்து காவல் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து பார்த்த போது அதிர்ச்சிக்குள்ளாகினர். அந்த அதிர்ச்சிக்குக் காரணம், வாகனங்களைச் சேதப்படுத்தியவர்கள் இரவு நேர ஊரடங்குப் பணியில் ஈடுபட்ட ஊர்க்காவல் படையினர் எனத் தெரியவந்ததுதான். பகல் நேரங்களில் ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு ஓய்வு கொடுக்கும்விதமாக இரவு நேரங்களில் ஊர்க்காவல் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களில் மேலாய்க்குடி துரைப்பாண்டி, காஞ்சியேந்தல் தியாகராஜன், எம்.நெடுங்குளம் சக்தி மோகன், பொதுவக்குடி விக்னேஷ்குமார் ஆகியோர் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களைச் சேதப்படுத்தி பெட்ரோல் திருடியுள்ளனர். இதையடுத்து இவர்களை பரமக்குடி போலீஸார் கைது செய்தனர். காவலுக்கு வந்தவர்களே பொதுமக்களின் வாகனங்களில் இருந்து பெட்ரோலைத் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு