Election bannerElection banner
Published:Updated:

`ஒரே வாரத்தில் சிக்கிய 420 கிலோ கஞ்சா; தி.மு.க பிரமுகர் உட்பட 19 பேர் கைது!’ - அதிரடிகாட்டிய போலீஸ்

போலீஸார் கைப்பற்றிய கஞ்சா
போலீஸார் கைப்பற்றிய கஞ்சா ( உ.பாண்டி )

`விசாரணையைத் தொடர்ந்து ராமநாதபுரம், நேரு நகரைச் சேர்ந்த நவாஸ்கான் வீட்டில் ராமநாதபுரம் போலீஸார் சோதனை நடத்தி 260 கிலோ கஞ்சா மற்றும் பணத்தைக் கைப்பற்றினர். இதையடுத்து நவாஸ்கான், அவரது மகன் வாசிம்கானை போலீஸார் கைதுசெய்தனர்.’

ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற 420 கிலோ கஞ்சா மற்றும் 29.5 லட்சம் பணத்தை ராமநாதபுரம் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக ராமேஸ்வரம் தி.மு.க பொறுப்பாளரின் சகோதரர் உட்பட 19 பேரைக் கைதுசெய்து போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

ராமநாதபுரம்; கஞ்சா கடத்தலில் சிக்கியவர்கள்.
ராமநாதபுரம்; கஞ்சா கடத்தலில் சிக்கியவர்கள்.
உ.பாண்டி

ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளிலிருந்து இலங்கைக்குக் கடந்த சில மாதங்களாக, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள், சமையல் மஞ்சள் ஆகியவை கடத்திச் செல்லப்படுவதும், இவற்றுக்கு மாற்றாக இலங்கையிலிருந்து தங்கக்கட்டிகள் கடத்திவரப்படுவதும் தொடர்ந்துவருகிறது.

இந்தநிலையில், கடந்த வாரத்தில் மதுரை மாநகர தீவிர குற்றத் தடுப்புப் பிரிவினர் மற்றும் எஸ்.எஸ்.காலனி போலீஸார் உசிலம்பட்டியைச் சேர்ந்த செல்லத்துரை என்பவரை கஞ்சாவுடன் கைதுசெய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து ராமநாதபுரம், நேரு நகரைச் சேர்ந்த நவாஸ்கான் வீட்டில் ராமநாதபுரம் போலீஸார் சோதனை நடத்தி 260 கிலோ கஞ்சா மற்றும் பணத்தைக் கைப்பற்றினர். இதையடுத்து நவாஸ்கானையும் அவர் மகன் வாசிம்கானையும் போலீஸார் கைதுசெய்தனர்.

இவர்கள் இருவரும் ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து, சிலரின் உதவியுடன் பலமுறை இலங்கைக்குக் கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இவர்களிடமிருந்து ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தினேஷ், ராஜேஷ், ரமேஷ் ஆகியோர் கஞ்சாவை வாங்கி, இலங்கைக்குக் கடத்திவருவதும் தெரியவந்தது.

மேலும், ராமேஸ்வரம் தி.மு.க பொறுப்பாளரின் சகோதரர் நூர்முகம்மது மற்றும் கட்டி முகம்மது ஆகியோருடன் சேர்ந்து சென்னையிலிருந்து ஐஸ் எனப்படும் மெத்தாமிட்டமைன், கேட்டமைன் போன்ற போதைப்பொருள்களை வாங்கி வந்து இலங்கைக்குக் கடத்திச் சென்றதும் தெரியவந்தது.

கஞ்சா கடத்தலில் சிக்கியவர்கள்
கஞ்சா கடத்தலில் சிக்கியவர்கள்
உ.பாண்டி

இவ்வாறு கடத்திச் செல்லும் போதைப்பொருள்களுக்கான தொகையை ஹவாலா பரிவர்த்தனை மூலம் வாசிம்கான் பெற்றுவந்ததை அறிந்த போலீஸார், மதுரையைச் சேர்ந்த ராஜ்குமார், செந்தில்குமார் ஆகியோரிடமிருந்து ரூ.25 லட்சம் ஹவாலா பணத்தையும், வாசிம்கான் உள்ளிட்டவர்களிடமிருந்து ரூ 4.5 லட்சத்தையும் கைபற்றினர். இதேபோல் தனுஷ்கோடி கடலில் மிதந்த 178 கிலோ கஞ்சா பார்சல்கள் மீட்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய படகோட்டிகள் அந்தோணிசாமி, அந்தோணி தன்ராஜ் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.

ராமநாதபுரம்:`பானை இங்கே... கரண்டி எங்கே?’- பா.ஜ.க-வின் பொங்கல் விழாவில் பெண்கள் கேள்வி!

மேலும், வாசிம்கான் கொடுத்த தகவலின்படி மகேந்திரா வாகனத்தில் கடத்திவரப்பட்ட 160 கிலோ கஞ்சாவைக் கைப்பற்றிய ராமநாதபுரம் போலீஸார், இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த விஜயகுமார், பிரசாந்த், செந்தில்குமார், காக்கணன் ஆகிய நால்வரைக் கைதுசெய்தனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ராமநாதபுரம் போலீஸார் மேற்கொண்ட சோதனைகளில், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 19 பேர் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து 420 கிலோ கஞ்சா, 29.5 லட்சம் பணம், மூன்று படகுகள், மூன்று வாகனங்கள், 15 செல்போன்கள், ஜி.பி.எஸ் கருவி, எடை மெஷின்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

போலீஸார் கைபற்றிய பணம்.
போலீஸார் கைபற்றிய பணம்.
உ.பாண்டி

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதிகள் வழியாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை, இலங்கைக்குக் கடத்திவந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலைக் கண்டறிந்து கைதுசெய்த தீவிர குற்றத்தடுப்பு போலீஸார் மற்றும் ராமநாதபுரம் உட்கோட்ட போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் பாராட்டியிருக்கிறார். ஒரே வாரத்தில் பிடிபட்ட 420 கிலோ கஞ்சா, கஞ்சாவுக்காகப் பயன்படுத்திய 29.5 லட்சம் பணம் ஆகியவற்றுடன் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 19 பேர்கள் பிடிபட்டிருப்பது மாவட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு