Published:Updated:

போலி இ-பாஸ்: 5 பேர் கைது! - பின்னணி என்ன?

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

போலி இ-பாஸ் தயாரித்துக் கொடுத்த வழக்கில், 5 பேர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதும் மக்கள் அதிகம் உச்சரிக்கத் தொடங்கிய வார்த்தையாக `லாக் டெளன்’ மாறியது. சென்னையில் பாதிப்பு உச்சம் பெறத் தொடங்கியதும், `இ-பாஸ்’ என்ற வார்த்தையை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கினர். ஏதாவது காரணங்களைச் சொல்லி இ-பாஸ் வாங்கி சொந்த ஊர் பக்கம் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் வந்திருக்கும்.

போலி இ-பாஸ்
போலி இ-பாஸ்
Representational image

ஆனால், உரிய காரணங்களின்றி இ-பாஸ் கிடைப்பது எளிதான காரியமாக இல்லை. இதனால், மக்கள் பலர் குறுக்குவழிகளைப் பின்பற்றத் தொடங்கினர். அவர்களுக்கு உதவ, சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் சட்டவிரோதமாக சில குழுக்கள் இயங்கத் தொடங்கின. பல மாவட்ட எல்லைகளில் போலி இ-பாஸ் மூலம் பயணம்செய்த பலரும் சிக்கும் தகவல்கள் வந்தவண்ணமே இருந்தது.

இந்தநிலையில், இன்று சென்னையில் போலி இ-பாஸ் தயாரித்துக் கொடுத்த வழக்கில், 5 பேர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சென்னை மாநகராட்சி ஊழியர், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர் என அரசு அதிகாரிகளை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்துள்ளனர். இந்த வழக்கில் போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இ-பாஸ் விண்ணப்பம்
இ-பாஸ் விண்ணப்பம்

இந்த விசாரணையில், ஒரு நபருக்கு போலி இ-பாஸ் தயாரித்து வழங்க இவர்கள் 3,000 முதல் 5,000 ரூபாய் வரை பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த விசாரணையில் பல அரசு அலுவலக ஊழியர்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்களும் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.

முன்னதாக போலியான இ-பாஸ்களைத் தயாரித்து, அவற்றை பணத்துக்கு விற்கும் கும்பல் தொடர்பான தகவல்களை ஜூனியர் விகடன் சார்பில் சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பார்வைக்கு புகாராகக் கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு காவல் கூடுதல் துணை ஆணையர் சரவணகுமார் தலைமையில் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் மனோஜ் என்பவர் கைதுசெய்யப்பட்டார்.

இ-பாஸ்
இ-பாஸ்

மனோஜிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. கிட்டத்தட்ட 2,500 ஓட்டுநர்கள், 30-க்கும் மேற்பட்ட இடைத்தரகர்கள் மற்றும் பல அரசு அதிகாரிகள் கொண்ட ஒரு பெரிய குழுவே இதற்காக இயங்கியது தெரியவந்துள்ளது. இதில், இன்று அரசு அதிகாரிகள் உட்பட 6 நபர்கள் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்கள். இதன் தொடர்ச்சியாகவே, இன்று அரசு அதிகாரிகளின் கைது சம்பவமும் நடைபெற்றுள்ளது என்கிறார்கள்.

E Pass இருந்தால்தான் சென்னையிலிருந்து பிற ஊர்களுக்குச் செல்ல முடியும் என்ற சூழலில், போலி ஆவணங்கள் மூலம் E Pass பெற்றுத்தரும் கும்பல் பற்றிய தகவல் ஜுனியர் விகடனுக்குக் கிடைத்தது. அப்படி கும்பல் சிக்கியதன் முழு விவரங்களைக் கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்தால் தெரிந்துகொள்ளலாம்.

E Pass: களத்தில் இறங்கிய ஜூனியர் விகடன்; சிக்கிய போலி E Pass கும்பல்! #VikatanExclusive
அடுத்த கட்டுரைக்கு