Published:Updated:

`அமைச்சர்கள் முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வரை..!' - மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய 5 பெண்கள்

arrested women
arrested women

மத்தியப் பிரதேச மாநிலத்தை அதிரவைத்தது வருகிறது பாலியல் மிரட்டல் வழக்கு ஒன்று.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த கார்ப்பரேஷன் அதிகாரி ஹர்பஜன் சிங். இவர் பலசியா காவல்நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை புகார் ஒன்றை அளித்தார். அதில், ``ஷிவானி மற்றும் ப்ரீத்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்கள் என்னுடன் உறவு வைத்துக்கொண்டனர். அதை வீடியோவாக எடுத்து என்னை மிரட்டி வருகின்றனர். பல முறை அவர்களுக்கு பணம் கொடுத்துவிட்டேன். இப்போது 3 கோடி ரூபாய் கேட்டு மிரட்டுகிறார்கள். அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்'' எனப் புகார் கொடுத்தார். இதைப் பெற்றுக்கொண்ட போலீஸார் முதல்கட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, ஹர்பஜன் மூலமாகவே ``ரூ.3 கோடி கேட்டதற்கு முதல் தவணையாக 50 லட்சம் தருகிறேன். விஜய் நகர் வந்து பெற்றுக்கொள்ளுங்கள்'' எனக் கூற வைத்துள்ளனர்.

arrested women
arrested women

அதன்படி ஷிவானி, ப்ரீத்தி இருவரும் சொகுசுக் காரில் விஜய் நகர் வர அங்கு தயாராக இருந்த போலீஸார் இருவரையும், அவருடன் இருந்த கார் டிரைவரையும் கைது செய்தனர். சம்பந்தப்பட்ட இரண்டு பெண்கள் அளித்த வாக்குமூலத்தின்படி போபால், இந்தூரைச் சேர்ந்த மேலும் மூன்று பெண்களையும் கைது செய்தனர் போலீஸார். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மாநிலத்தையே உலுக்கும் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின. அந்த ஐந்து பேரின் செல்போன் மற்றும் லேப்டாப்பில் இருந்த காட்சிகள்தான் இந்த அதிர்ச்சிக்குக் காரணம்.

இந்த ஐந்து பெண்களும் தோழிகளாக இருந்துள்ளனர். இவர்களின் பழக்க, வழக்கம் எல்லாம் மேலிடம்தான். அமைச்சர்கள் முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வரை இவர்களுக்குப் பழக்கம் இருந்திருக்கிறது. அவர்களுக்கு விலை மாதர்களை அனுப்பி வந்துள்ளனர். அப்படி அனுப்பி வைக்கும்போது அவர்களுக்குத் தெரியாமலேயே அங்கு நடப்பதை வீடியோவாக செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளனர். பின்னர், இதை வைத்து அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை பலரையும் மிரட்டி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். அந்த வீடியோக்களில் முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட பலரும் இருப்பதால் இந்த விவகாரம் பூதாரகமாக வெடித்துள்ளது. நிலைமை விபரீதம் அடைய க்ரைம் பிரிவு போலீஸாரிடம் இருந்த இந்த வழக்கு தற்போது ஏடிஎஸ் எனப்படும் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. பாலியல் வழக்கை தீவிரவாத தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் என்ன. எதோ நடக்கிறது அம்மாநிலக் கட்சிகள் முதல் மக்கள் வரை குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

arrested woman
arrested woman

இந்நிலையில், கைது செய்யப்பட்ட பெண்கள் குறித்த விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளன. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``அவர்கள் 5 பேரும் வெவ்வேறு இடங்களைச் சேர்ந்தவர்கள். எனினும், இதற்கு மூளையாகச் செயல்பட்டவர்கள் இரண்டு, மூன்று பேர்தான். அவர்களில் முக்கியமானவர் ஷிவானி. ஷிவானி போபாலைச் சேர்ந்தவர். தன் கணவர் மூலமாகத்தான் ஹர்பஜனுடன் பழக்கமாகியுளார். பின்னர், சிறிது நாளில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகக் கணவர்மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையே, ஹர்பஜன் உடன் நெருங்கிப் பழகியுள்ளார் ஷிவானி. அவ்வப்போது இருவரும் தனிமையில் சந்தித்துள்ளனர். அப்போது இருவரும் உறவு வைத்துள்ளனர்.

இந்தச் சமயத்தில்தான் ஹர்பஜன் மூலமாகவே ப்ரீத்தியிடம் பழகியுள்ளார் ஷிவானி. ப்ரீத்தி பி.எஸ்ஸி பட்டப் படிப்பு முடித்தவர். வேலை விஷயமாக ஹர்பஜனிடம் வரும்போது ஷிவானிக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னாளில் ஷிவானியுடன் சேர்ந்து ஹர்பஜனை மிரட்டி வந்துள்ளார். ஷிவானி, வித்யா, சோனியா (அனைவரின் பெயரும் மாற்றப்பட்டுள்ளன) ஆகியவர்கள்தாம் இந்த விவகாரத்துக்கு மூலகாரணம். போபால் மற்றும் இந்தூர் பகுதியில் உள்ள அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை அனைவருக்கும் பெண்களை அனுப்பி வைப்பதும் இவர்கள்தாம்.

Seized luxury cars
Seized luxury cars

அப்போது நடப்பதை வீடியோவாக எடுத்து அதை வைத்து மிரட்டி பணம் பறித்துள்ளனர். கிடைக்கும் பணத்தில் ஆடி, பென்ஸ் கார், பப், சொகுசு வீடு என காஸ்ட்லியாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களின் மிரட்டலால் முன்னாள் எம்.பி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் நடந்துள்ளது. 13-க்கும் மேற்பட்ட வீடியோக்களை அவர்களிடமிருந்து கைப்பற்றியுள்ளோம். அனைத்து விஷயங்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் உண்மையை வெளிக்கொண்டு வருவோம்'' எனக் கூறியுள்ள வேளையில் பிடிபட்ட பெண்களிடமிருந்து பென்ஸ், ஆடி கார்கள் மற்றும் 14.17 லட்ச ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.

பாஜக - காங்கிரஸ் சர்ச்சை!

இந்தப் பெண்கள் அனைவரும் மாநிலத்தின் பெரிய கட்சிகளான பா.ஜ.க - காங்கிரஸின் பல செல்வாக்கு மிக்க தலைவர்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் தலைவர்களின் அலுவலகங்களுக்கு எந்தவித அனுமதியும் இல்லாமல் சென்று வந்துள்ளார்கள் என அம்மாநிலப் பத்திரிகைகள் கூறிவருகின்றனர். இதற்கிடையே இந்த ஐந்து பெண்களில் ஒருவர் பன்னாவில் உள்ள பா.ஜ.க எம்.எல்.ஏ பங்களாவில் சில காலம் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பேசியுள்ள பா.ஜ.க எம்.எல்.ஏ, ``நான் அந்த பங்களாவை புரோக்கர் மூலம் வாடகைக்குத்தான் விட்டிருந்தேன். அதுவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் அது. அவர் தற்போது காலி செய்துவிட்டுச் சென்றுவிட்டார்'' எனக் கூறியுள்ளார். இந்த பங்களாவில் தான் பிரக்யா சாத்வி தற்போது தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

home minister bala bachchan
home minister bala bachchan

யாரும் தப்பிக்க முடியாது!

மாநிலத்தையே உலுக்கியுள்ள இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள அம்மாநில உள்துறை அமைச்சர் பாலா பச்சன்,``இது ஒரு மிகப்பெரிய நடவடிக்கை. இந்த விவகாரம் குறித்து விரிவான மற்றும் ஆழமான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட யாரும் வழக்கில் இருந்து தப்பிக்க முடியாது. அது அரசியல்வாதியாக இருந்தாலும், அதிகாரியாக இருந்தாலும் நடவடிக்கை உறுதி. தங்கள் பிளான் மூலம் மக்களை குற்றவாளிகளாக ஆக்கியுள்ளனர் அந்தப் பெண்கள். போபால், இந்தூர் போலீஸார் இணைந்து வழக்கை விசாரிப்பர். விரிவான விசாரணைக்குப் பின்னர் மட்டுமே, முழுமையான தகவல்கள் வழங்கப்படும்" எனக் கூறியுள்ளார்.

News & photo credit - bhaskar.com

அடுத்த கட்டுரைக்கு