Published:Updated:

57 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்... 7 பேர் கர்ப்பம் - உ.பி குழந்தைகள் நலக் காப்பகத்தில் நிகழ்ந்த அவலம்!

பாலியல் வன்கொடுமை (Representational Image)
பாலியல் வன்கொடுமை (Representational Image)

உத்தரப்பிரதேசத்தில், மாநில அரசால் நடத்தப்படும் காப்பகத்தில் 57 சிறுமிகளுக்குக் கொரோனா தொற்று இருப்பதும், ஏழு சிறுமிகள் கர்ப்பமாக இருப்பதும் கண்டறியப்பட்டிருப்பது தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவருகிறது. அங்கு கான்பூரில் அரசால் நடத்தப்படும் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த சிறுமிகளுக்கு, சமீபத்தில் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதில், அதிர்ச்சிக்குரிய வகையில் பல முடிவுகள் தெரியவந்தன. ஏழு சிறுமிகள் கர்ப்பமாக இருப்பதும், ஒரு சிறுமிக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருப்பதும், இன்னொரு சிறுமிக்கு மஞ்சள் காமாலை இருப்பதும், 57 சிறுமிகளுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது. கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் தீவிரமாக இருந்துகொண்டிருக்கும் நிலையில், பல மாநில அரசுகள் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றன. இன்னும் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று அதிகாரிகளுடனும் மருத்துவ நிபுணர்களுடனும் தீவிரமாக ஆலோசனைகள் நடத்திவருகின்றன. இந்த நிலையில், உ.பி-யில் அரசால் நடத்தப்படுகிற, சிறுமிகள் தங்கவைக்கப்பட்டுள்ள ஒரு காப்பகம் இந்தளவுக்கு அலட்சியமாக இருந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை (Representational Image)
பாலியல் வன்கொடுமை (Representational Image)

கொரோனா உறுதிசெய்யப்பட்ட சிறுமிகள் அனைவருக்கும் கான்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சர்ச்சைக்குரிய அந்தக் காப்பகம் மூடி சீல்வைக்கப்பட்டுள்ளது. அதன் பணியாளர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சிறுமிகளுக்குப் பல நாள்களாக கொரோனா தொற்று இருந்துள்ளது. கொரோனா அறிகுறிகளை வைத்து உடனடியாக அவர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மிகவும் தாமதமாகவே மருத்துவமனைக்கு அவர்கள் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவமானது, உத்தரப்பிரதேசத்தில் மாநில அரசால், அரசு நிதியுதவியுடனும், தனியாரால் நடத்தப்படுகிற பெண்கள் காப்பகங்கள், முதியோர் இல்லங்கள், இளம் குற்றவாளிகளுக்கான இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவற்றில் தங்கவைக்கப்பட்டிருப்பவர்களின் நிலை குறித்து பெரும் கவலை ஏற்படுத்துத்துகிறது. அங்கிருக்கும் சூழல் குறித்து ஏராளமான கேள்விகளும் எழுகின்றன.

கான்பூர் காப்பகம் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உ.பி மாநில அரசின் தலைமைச்செயலாளருக்கும் மாநிலக் காவல்துறை தலைவருக்கும் நோட்டீஸ்களை ஆணையம் அனுப்பியுள்ளது. ``இந்த வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து எடுத்துள்ளது. ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மையானால், பாதிக்கப்பட்ட சிறுமிகளைப் பாதுகாப்பதற்கு அரசு ஊழியர்கள் தவிறிவிட்டனர் என்று கருதுவதற்குப் போதுமான அடிப்படை இருக்கிறது. மேலும் அரசின் பாதுகாப்பில் இருக்கும்போது அந்தச் சிறுமிகளின் வாழ்க்கை, சுதந்திரம், கண்ணியம் ஆகிய உரிமைகளைப் பாதுகாக்க அரசு தவறிவிட்டது. பாதிக்கப்பட்ட அந்தக் குழந்தைகளின் உடல் நிலை குறித்தும், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மருத்துவச் சிகிச்சை மற்றும் மனநல சிகிச்சை ஆகியவை குறித்தும் ஆணையத்துக்கு அறிக்கை அறிக்க வேண்டும்” என்று தலைமைச் செயலாளருக்கு அனுப்பிய நோட்டீஸில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது.

இந்தப் பிரச்னை தொடர்பாகப் பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை மற்றும் இது தொடர்பான விசாரணையின் தற்போதைய நிலை ஆகியவை குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று உ.பி மாநில காவல்துறை தலைவருக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தலைமைச்செயலாளரும் டி.ஜி.பி-யும் ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக ஆணையம் கூறியுள்ளது. இதுதவிர, கான்பூர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த சிறுமிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் பற்றிய விவரங்களை கான்பூர் மாவட்ட நிர்வாகத்திடம் உத்தரப் பிரதேச மாநிலப் பெண்கள் ஆணையத்தின் துணைத் தலைவர் சுஷ்மா சிங் கேட்டுள்ளார்.

அரசின் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள சிறுமிகளைக்கூட ஒரு அரசால் பாதுகாக்க முடியவில்லையா என்பது போன்ற கேள்விகளைப் பல்வேறு தரப்பினரும் எழுப்புகிறார்கள். உ.பி. காப்பகத்தின் அவலங்கள் ஊடகங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டதாலும், மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதாலும், எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவிப்பதாலும் யோகி ஆதித்யநாத் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால், சில விளக்கங்களை அதிகாரிகள் அளித்துள்ளனர். ``காப்பகத்துக்கு வந்தபோதே ஏழு சிறுமிகள் கர்ப்பமாக இருந்தனர். அவர்களில் ஐந்து சிறுமிகள் ஆக்ரா, இடா, ஃபிரோஸாபாத், கான்பூர் ஆகிய குழந்தைகள் நல கமிட்டிகளின் அறிவுறுத்தலின் பேரில் காப்பகங்களுக்கு அழைத்துவரப்பட்டனர்” என்று கான்பூர் மாவட்ட ஆட்சியர் தேவ் ராம் திவாரி கூறியுள்ளார்.

Abuse (Representational Image)
Abuse (Representational Image)

உ.பி-யில் உள்ள பெண்கள் காப்பகங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், சிறார் இல்லங்கள், முதியோர் இல்லங்களில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டல்கள் குறித்து அவசர அவசரமாக மாநில அரசு சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இத்தகைய காப்பகங்களில் கொரோனா பரவல் இருக்கிறா என்பதைச் சோதிப்பதற்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைளையும் எடுக்குமாறு உ.பி தலைமைச் செயலாளர் ராஜேந்திர குமார் திவாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பெண்கள் காப்பகங்கள், குழந்தைகள் காப்பகங்களில் ஊழியர்களின் உடல் வெப்பத்தைப் பரிசோதிப்பதற்கு தெர்மா மீட்டர்கள் இருக்க வேண்டும், சளி, இருமல், காய்ச்சல் இருப்பவர்களைக் காப்பகங்களுக்குள் அனுமதிக்கக் கூடாது. அங்கு கிருமிநாசினி வழங்கப்பட வேண்டும். காப்பகத்தில் தங்கியுள்ளவர்களுக்கு முகக்கவசங்கள் மற்றும் கைக்குட்டைகளை வழங்க வேண்டும், தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளைக் கறாராகப் பின்பற்றுமாறு சமூகநலத்துறை மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி வதேரா, உ.பி முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க் கட்சித் தலைவர்கள் இந்தச் சம்பவத்துக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். ``அரசுக் காப்பகத்திலேயே இத்தகைய மனிதத்தன்மையற்ற செயல்கள் நிகழ்கின்றன” என்று கவலை தெரிவித்துள்ள அகிலேஷ்யாதவ்,. சில ஆண்டுகளுக்கு முன்பு முஸாபர்பூரில் ஒரு காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமைகள் இழைக்கப்பட்ட சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார். இதுபோன்ற கொடுமைகள் விசாரணை என்ற பெயரில் அப்படியே அமுக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

பீகார் மாநிலம் முஸாபர்பூரில் அரசு நிதியுதவியுடன் நடத்தப்பட்ட காப்பகத்தில் 30 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமை 2018-ம் ஆண்டு வெளிச்சத்து வந்தது. அது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முஸாபர்பூர் காப்பகத்தில் 40 சிறுமிகளும் பெண்களும் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 30 பேர் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளானதாக செய்திகள் வெளியாகின. ஒரு பெண் அடித்துக்கொல்லப்பட்டு, அந்தக் காப்பகத்துக்கு உள்ளேயே புதைக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நடத்தப்பட்ட உடல் பரிசோதனையில் காப்பகத்தில் பணியாற்றிய 11 ஊழியர்களால் அவர்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளானது தெரியவந்தது.

தமிழகத்திலும் இதுபோன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அரசு மற்றும் தனியார்க் காப்பகங்களில் தங்கியிருந்த பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர். இதுபோன்ற கொடுமைகள் பல முறை வெளிச்சத்துக்கு வந்துள்ளன. 2014-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயத்தில், பொள்ளாச்சியில் மாணவியர் விடுதி ஒன்றில் இரண்டு சிறுமிகள் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அது தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அன்றைய தி.மு.க தலைவர் கருணாநிதி உட்பட எதிர்க் கட்சித் தலைவர்கள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டனர். அந்த சமயத்தில் தமிழகம் முழுவதும் நடைபெற்றிருந்த பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், பாலியல் கொலைகளைப் பட்டியலிட்டு, ``ஜெயலலிதா ஆட்சியில் பெண்களைப் போற்றிடும் லட்சணமா இது?’ என்று கருணாநிதி நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

போலி இ-பாஸ்: 5 பேர் கைது! - பின்னணி என்ன?

அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கடுமையான நடவடிக்கைகளை ஜெயலலிதா மேற்கொண்டார். உயர் அதிகாரிகளுடன் உடனடியாக ஆலோசனை நடத்திய ஜெயலலிதா, பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்டு, அவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அளித்ததுடன், விடுதிகளில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

பாலியல் வன்கொடுமை (Representational Image)
பாலியல் வன்கொடுமை (Representational Image)

இந்தக் கொரோனா காலத்தில் உ.பி-யைப் போலவே தமிழகத்திலும் சிறுவர் காப்பகத்தில் அலட்சியம் நடந்துள்ளது. ராயபுரத்தில் தமிழக அரசின் சமூகப்பாதுகாப்பு இயக்குநரகத்தால் நடத்தப்படும் இல்லத்தில் தங்கியுள்ள சிறுவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் ஆரம்பத்திலிருந்தே அதிகமான கொரோனா தாக்கம் கொண்ட மண்டலமாக ராயபுரம் இருந்துவரும் நிலையில், சிறுவர் இல்லத்தை மிகவும் கவனமாகப் பாதுகாத்திருக்க வேண்டும். ஆனால், அங்கு அலட்சியம் காட்டியதால் 43 சிறுவர்கள் உட்பட 50 பேருக்கு அந்தக் காப்பகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு