Published:Updated:

காஷ்மீரில் வன்முறையை தூண்டுகிறது பாகிஸ்தான்! - மெகபூபா முஃப்தி குற்றச்சாட்டு

விகடன் விமர்சனக்குழு
காஷ்மீரில் வன்முறையை தூண்டுகிறது பாகிஸ்தான்! - மெகபூபா முஃப்தி குற்றச்சாட்டு
காஷ்மீரில் வன்முறையை தூண்டுகிறது பாகிஸ்தான்! - மெகபூபா முஃப்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: காஷ்மீர் மாநிலத்தில் வன்முறையை தூண்டி விடுகிறது பாகிஸ்தான் என்று முதல்வர் மெகபூபா முஃப்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் ஹிஸ்புல் பயங்கரவாதி பர்ஹான் வானியை பாதுகாப்புப் படையினர் கடந்த மாதம் சுட்டுக் கொன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 9–ம் தேதி முதல் தொடர் போராட்டங்களும், வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. சுமார் 50 நாட்களாக நடந்து வரும் இந்த வன்முறை சம்பவங்களுக்கு, இதுவரை 68 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்..

இந்த போராட்டம் மற்றும் வன்முறை காரணமாக, மாநிலத்தின் பல பகுதிகளில் ஊரடங்கும், முழு அடைப்பும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. அதனால், அங்கு அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய–மாநில அரசுகளுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்த பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக பிரதமர் மோடியை இன்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முஃப்தி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்புக்கு பின் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் சூழல் குறித்து பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்தார். காஷ்மீரில், பாகிஸ்தான் வன்முறையை தூண்டி விடுகிறது. காஷ்மீரில் நிலவும் பதற்றத்தை தணிக்க ஊடகங்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வீதிகளில் இறங்கி போராடுபவர்களுக்கு நான் ஒரே ஒரு கோரிக்கையை வைக்கிறேன். என் மீது உங்களுக்கு கோபம் இருக்கலாம். ஆனால், எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள்.

காஷ்மீர் பிரச்னையை தீர்க்கவும், பேச்சுவார்த்தை நடத்தவும் உருவாகி வரும் வாய்ப்புக்களை பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் வீணடித்து வருவது வேதனை அளிக்கிறது. வன்முறையை தூண்டிவிடுபவர்கள் பேச்சுவார்த்தையை விரும்பவில்லை. காஷ்மீரில் அமைதியை பாகிஸ்தான் விரும்பினால், அதற்குறிய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய தருணம் இதுதான். மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் காஷ்மீர் வந்தபோது, பேச்சுவார்த்தைக்கு அவர் விடுத்த வாய்ப்பை பாகிஸ்தான் வீணாக்கி விட்டது. ” இவ்வாறு அவர் கூறினார்.