Published:Updated:

'வன்முறையைத் தூண்டவா சமூக ஊடகங்கள்...?’ - கன்னட தமிழ் சங்கத்தின் ஆதங்கம்

'வன்முறையைத் தூண்டவா சமூக ஊடகங்கள்...?’ - கன்னட தமிழ் சங்கத்தின் ஆதங்கம்
'வன்முறையைத் தூண்டவா சமூக ஊடகங்கள்...?’ - கன்னட தமிழ் சங்கத்தின் ஆதங்கம்

சோஷியல் மீடியா மற்றும் ஊடகப் புலிகளே... பெங்களூருவில் அங்கொன்றும் இங்கொன்றும் நடப்பதைக் கேள்விப்பட்டுச் சும்மா கிளப்பிவிடாதீர்கள். பற்றவைத்து பரபரப்பு ஏற்படுத்துவது எளிது. அணைப்பதுதான் வெகு சிரமம். Please be responsible’’ - என பெங்களூருவில் வசிக்கும் எழுத்தாளர் வா.மணிகண்டன் தனது ஃபேஸ்புக்கில் கொதித்திருந்தார். அவர் மட்டுமல்ல... கர்நாடகாவில் வசிக்கும் பெரும்பாலான  தமிழர்கள் சோஷியல் மீடியாவும், ஊடகங்களும்தான் இந்தக் கலவரங்களுக்கு பெட்ரோல் ஊற்றியுள்ளன நினைக்கின்றனர்.

கர்நாடகாவில் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளுக்கு யார் காரணம்? இதன் பின்னணி பற்றி மைசூர் தமிழ்ச் சங்கத் தலைவர் கு.புகழேந்தி, ‘‘பெங்களூருவில் வசிக்கும் தமிழ் இளைஞர் ஒருவர், கன்னட சினிமா ஹீரோக்களை கிண்டல் செய்து மீம்ஸ் போட்டிருந்தார். இது தவறு என்றால், சைபர் க்ரைம்மில் புகார் அளித்திருக்கலாம். ஆனால், சில கன்னட அமைப்பினர் அந்த இளைஞரை அடித்ததுடன், அதனை வீடியோவும் எடுத்துள்ளர். இந்த வீடியோ மீடியாவிலும், சமூக வலைதளங்களிலும் பரவிட்டது முதல் தவறு. இதைப் பார்த்துவிட்டு, ரமேஸ்வரத்தில் கர்நாடக டிரைவர் ஒருவரை தமிழ் அமைப்பினர் தாக்கியுள்ளனர். இதையும் வீடியோ எடுத்து பரவவிட்டு உள்ளனர். கன்னட இளைஞர் தாக்கப்படும் வீடியோவை பல கன்னட டி.வி சேனல்கள் திரும்பத்திரும்பப் போட்டுக் காண்பித்தன. இதன்பிறகுதான் போராட்டம் கலவரமாகத் திசை மாறியது.

காங்கிரஸ், பா.ஜ.க போன்ற அரசியல் கட்சிகள் யாரும் களத்தில் இறங்கிப் போராட்டம் நடத்தவில்லை. கன்னட மொழியைச் சார்ந்த மூன்று, நான்கு அமைப்புகள்தான் போராட்டங்களைத் தூண்டிவிட்டன. அதன்பிறகு கூட்டம் சேரவே, நோட்டில் சும்மா நடந்துசென்றவர்கள்கூடப் போராட்டக்காரர்களுடன் சேர்ந்துகொண்டனர். கடைகளும், வாகனங்களும் தாக்கப்பட்டதே தவிர, பெங்களூருவில் வசிக்கும் தமிழர்கள் யாரும் தாக்கப்படவில்லை. மேலும் பெங்களூரு உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே காவிரிப் பிரச்னை பற்றி எரிகிறது. மைசூரு, சாம்ராஜ் போன்ற பகுதிகளில் எந்தப் பிரச்னையும் இல்லை. மீடியாவில் வருவதுபோல கர்நாடகா முழுக்க எந்தப் பிரச்னையும் இல்லை. வீண்வதந்திகளைத் தமிழர்கள் நம்ப வேண்டாம். முடிந்தவரை தமிழர்களோ, கன்னடர்களோ தாக்கப்படும் வீடியோ வந்தால் மற்றவர்களுக்கு அனுப்பாமல் இருங்கள்.

ஐ.டி சிட்டியான பெங்களூருவில், தங்களது வேலைவாய்ப்புகளைத் தமிழர்கள் பறித்துக்கொண்டனர் என்ற காழ்ப்புணர்ச்சி பல கன்னடர்களுக்கு இருக்கிறது. இதை வெளிக்காட்ட காவிரிப் பிரச்னையைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். ‘எங்கள் மாநிலத்தில் தண்ணீர் உற்பத்தி ஆகிகிறது... நாங்கள் ஏன் தமிழகத்துக்குத் தர வேண்டும்’ என்கிற நிலை கன்னடர்கள் மத்தியில் பொதுவாக இருக்கிறது. காவிரி மீது தமிழகத்துக்கு உள்ள உரிமை பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. அதனால்தான் கண்மூடித்தனமாகப் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். தற்போது இரு மாநில மக்களுக்கும் தேவை அமைதி மட்டுமே'' என்றார்.

 சோஷியல் மீடியா புலிகள் சற்று பதுங்கவும்..

- ஆ.நந்தகுமார்