Published:Updated:

உண்மையில் இந்திய எல்லை பாதுகாப்பாக இருக்கிறதா?

Vikatan Correspondent
உண்மையில் இந்திய எல்லை பாதுகாப்பாக இருக்கிறதா?
உண்மையில் இந்திய எல்லை பாதுகாப்பாக இருக்கிறதா?

ந்தத் தலைப்பைப் படித்த பிறகு உங்களுக்குக் கோபம் வரலாம்; சந்தேகம் வரலாம்; இன்னும் பல கேள்விகள் எழலாம். அதற்கு எல்லாம் இந்தக் கட்டுரையைப் படித்து முடிக்கும்போது ஒரு பதில் கிடைக்கும். பாகிஸ்தான் நம்மிடம் வாலாட்டி வருகிறது. அதற்கு கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்தோம். பிறகு, ‘சர்ஜிக்கல் அட்டாக்’ என்கிற பெயரில் நாமும் திருப்பி அடித்தாகிவிட்டது. இது நடந்து பல நாட்கள் ஆகிவிட்டன. ஆனால், நம் அரசியல்வாதிகள் அப்படி ஒரு தாக்குதல் நடந்ததா... அதற்கு ஆதாரம் இருக்கிறதா... எப்போது வீடியோ வெளியிடுவீர்கள் என்று அதைவைத்து அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்? எல்லாம் சரி. ஆனால், சர்ஜிக்கல் அட்டாக்குக்குப் பிறகு இந்தியா பாதுகாப்பாக இருக்கிறதா?

இந்தியா - பாகிஸ்தான் சண்டையைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் ஒரு விஷயத்தில் தெளிவுபெற முடியும். நவம்பர், டிசம்பர் மாதங்களில்தான் அவர்கள் கை கொஞ்சம் அதிகமாக ஓங்கி இருக்கும். உதாரணமாக மும்பைத் தாக்குதல் 26 நவம்பர் 2008, நாடாளுமன்றத் தாக்குதல் 13 டிசம்பர் 2001, விமானக் கடத்தல் 24 டிசம்பர் 1999. ‘‘பொதுவாக இந்த மாதங்களில் உடலை உறையவைக்கும் குளிர், காஷ்மீர் மற்றும் எல்லைப் பிரதேசங்களில் அரசியல் மற்றும் ராணுவ நடவடிக்கைகளை சற்றே மட்டுப்படுத்திவைத்திருக்கும். இன்னும் ஒரு காரணம், இந்த இரண்டு மாதங்களும் தொடர் பண்டிகைகள் வருவது’’ என்கிறார் ஸ்டீவ் ஹாரிஸ். இவர், காஷ்மீர் பகுதியில் நடக்கும் தீவிரவாதச் செயல்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டவர். சர்ஜிக்கல் அட்டாக்குக்குப் பிறகு, இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இருக்கிறது என்பதையும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்தியா தீவிரவாதத்தையோ, தாக்குதல்களையோ ஆதரிக்காத ஒரு நாடு. ஆனால், பாகிஸ்தான் அப்படி இல்லை; ராணுவ நடவடிக்கையோடு தீவிரவாத நடவடிக்கைகளையும் அதுவும், குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்தைக் கூர்தீட்டி வைத்திருப்பதில் ஆர்வமான நாடு. சர்ஜிக்கல் அட்டாக் அவர்களை நிலைகுலைய வைத்திருப்பதோடு அதீத கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.அதன் விளைவாகத்தான், சர்ஜிக்கல் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் தீவிரவாதிகள் நம்மை மூன்றுமுறை தாக்கி இருக்கிறார்கள், அதுவும் 10 நாட்களுக்குள்ளாக. ஆனால் நாம், இன்னும் தாக்குதல் நடந்ததா; வீடியோ இருக்கிறதா; போர் வருமா; மோடி உண்மையைச் சொல்கிறாரா என்று மட்டும்தான் பேசிக்கொண்டே இருக்கிறோம்.

சர்ஜிக்கல் அட்டாக் நடந்து நான்கு நாட்களுக்குப் பிறகு, பாரமுல்லாவில் தாக்குதல் நடத்தி ஒரு ராணுவ வீரரைக் கொன்றிருக்கிறார்கள். அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, அக்டோபர் 6-ம் தேதி, குப்வாராவில் இருக்கும் ராணுவ முகாம் மீது துப்பாக்கிச் சூடு நடைபெற்று இருக்கிறது. அக்டோபர் 8-ம் தேதி சோபியன் நகரில் ஒரு காவல் துறை அதிகாரியைக் கொன்றுவிட்டு தப்பி இருக்கிறார்கள். இதற்குப் பிறகும் இன்னமும் சர்ஜிக்கல் அட்டாக்கை மட்டும் கொண்டாடிக்கொண்டே, பேசிக்கொண்டே இருக்கப்போகிறோமா? அந்தத் தாக்குதல், உரியில் வேண்டுமானால் பதற்றத்தைத் தவிர்க்க உதவி இருக்கலாமே தவிர, ஒட்டுமொத்த காஷ்மீரில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினம்தினம் தாக்குதல் நடக்கும் எல்லையில் ஏன் ஒரு சில தாக்குதல்கள் மட்டும் பெரிதாகப் பேசப்படுகின்றன? அதற்குக் காரணம் அதிக எண்ணிக்கையிலான உயிர் பலிதான். ஆனால், இது எல்லாம் பாகிஸ்தானின் துல்லியமான திட்டங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அடிப்பது, அசந்த நேரத்தில் மொத்தமாக அடித்து ஆடுவது. 2015-க்குப் பிறகான தாக்குதல்களில் இதை நாம் ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும். கொரில்லாத் தாக்குதல்களை அவர்கள் அதிகப்படுத்தி இருக்கிறார்கள். அதனால்தான் உரி ராணுவ முகாமில் உள்ளே நுழைந்து, சமையலறை வரை சென்று நம் வீரர்களைக் கொல்ல முடிந்திருக்கிறது.

ஒருபக்கம், போர் வேண்டாம் என்பது... மறுபக்கம், சீனாவை கைக்குள் வைத்துக்கொள்வது. இதுபோதாது என்று அடிக்கடி தீவிரவாதிகளை அனுப்பி இந்திய எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தி ‘பல்ஸ்’ பார்ப்பது. இது மட்டும்தான் பாகிஸ்தானின் முக்கிய வேலை. பாகிஸ்தானின் ராணுவக் கட்டமைப்பைவிட, தீவிரவாதக் கட்டமைப்பு பயங்கரமானது; தெளிவானது; வலுவானது. ராணுவத்தைக் காட்டிலும் தீவிரவாதத்தை மிகவும் நம்புகிறார்கள். லக்ஷர்-இ-தொய்பாவும், ஜெய்ஸ்-இ-முகமதுவும் வேலைக்கு ஆள் எடுப்பதைப்போல, பல இளைஞர்களை இதற்காக உருவாக்கிவைத்திருக்கிறார்கள். அதைத் தடுப்பதற்காக எல்லா வேலைகளையும் நாம் முன்னெடுத்தாக வேண்டி இருக்கிறது.


இந்திய ராணுவம் பலம் பொருந்தியதுதான்... சந்தேகமே இல்லை. பாகிஸ்தானை மொத்தமாக ஒரு மணி நேரத்தில் காலி செய்துவிட முடியும். ஆனால், அது நேரடியான போரில் மட்டும்தான். கொல்லைப்புறமாகப் புகுந்துவரும் தாக்குதல்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறித்தான் நமது பகுதிகளை அவர்கள் வென்றிருக்கிறார்கள். இந்த நேரத்தில் இந்தியப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது அரசின் கடமை. தேவையில்லாத விவாதங்களில் கவனம் செலுத்துவதைவிடுத்து, அடுத்து என்ன செய்யலாம் என்பதை கவனமாகத் திட்டமிட வேண்டும். அதுவரை எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்வி, ‘இந்தியா பாதுகாப்பாக இருக்கிறதா’ என்பதுதான்.

- மா.அ.மோகன் பிரபாகரன்