மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவர் வீட்டில் சாராய கேன்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக மத்திய நுண்ணறிவுப்பிரிவு போலீஸார் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, மதுவிலக்குப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் கலை அதிரவன், சீர்காழி மதுவிலக்கு ஆய்வாளர் செல்வி தலைமையில் போலீஸார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் வீட்டின் பின்புறம் புதைத்துவைக்கப்பட்டிருந்த 23 கேன்கள் சாராயம், சாராய பாக்கெட்டுகளைக் கைப்பற்றி லட்சுமி மற்றும் பாரதி உள்ளிட்ட இரண்டு பேரை கைதுசெய்தனர்.
தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், 23 கேன்களில் 805 லிட்டர் தண்ணீர் கலக்கப்படாத பாண்டிச்சேரி சாராயம், 1,125 சாராய பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது வீட்டின் உரிமையாளர் லட்சுமி என்றும், சாராயம் விற்பனையில் ஈடுபட்டது பாரதி என்பதும் தெரியவந்தது

இதையடுத்து, பாண்டிச்சேரி சாராயம் மற்றும் சாராய பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்து இரண்டு பேரையும் போலீஸார் கைதுசெய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ. 3 லட்சம் என கணக்கிடப்பட்டிருக்கிறது.