Published:Updated:

'எனக்கு யாரும் லவ்வர் கிடையாது... எல்லோருமே நண்பர்கள்தான்!'

மனம் திறக்கும் திண்டுக்கல் சிபி

பிரீமியம் ஸ்டோரி

திண்டுக்கல் சிபியை நினைவு இருக்கும்....

''27 சின்னப் பொண்ணுங்களோட வாழ்க்கையை சீரழிச்சுருக்கான். என் வாழ்க்கையையும் நாசமாக்கிட்டான். அவன் பொண்ணுங்களைக் கடத்தி வித்துட்டுருக்கான்'' என்று சிபி மீது அவரது மனைவி ரெஜினா கொடுத்த புகார் பற்றி கடந்த 18.06.14 தேதியிட்ட ஜூ.வி-யில் எழுதியிருந்தோம்.

தலைமறைவான சிபியை கரூர் ரயில் நிலையத்தில் வைத்துக் கைதுசெய்தது போலீஸ். சிபியிடம் வழக்கறிஞர் சிவக்குமார் மூலமாகப் பேசினோம்.

''எல்லா உண்மைகளையும் சொல்ல வேண்டும். அந்தப் பெண் சொல்வதையும் போலீஸ் சொல்வதையும் மட்டுமே கேட்டுகிட்டு எல்லோரும் என்னைப் பத்தி தப்பு தப்பா எழுதிட்டு இருக்காங்க. யாராவது என்னைப் பார்த்து நீ இப்படி செஞ்சியான்னு கேட்டாங்களா? எந்த சேனலைத் திருப்பினாலும் என்னைப் பத்திதான் பேசுறாங்க. என் வாழ்க்கையே நாசமாகிடுச்சு. நான் இன்ஜினீயரிங் மூணாவது வருஷம் படிச்சிட்டு இருக்கேன். படிப்பு முடிச்சதும் வெளிநாட்டுக்கு வேலைக்குப் போகணும்னு நினைச்சிருந்​தேன். எல்லாமே போச்சு...'' என்று எடுத்த எடுப்பிலேயே ரொம்பவும் ஆதங்கப்பட்டிருக்கிறார் சிபி.

'எனக்கு யாரும் லவ்வர் கிடையாது... எல்லோருமே நண்பர்கள்தான்!'

''ரெஜினா உங்கள் மீது சொல்லும் குற்றச்சாட்டுக்களுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?''

'அந்தச் சம்பவம் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி நடந்தது. அதுவரைக்கும் ரெஜினாவை யார் என்றே எனக்குத் தெரியாது. அதுக்கு முன்னாடி நியூ இயர் சமயத்துல சர்ச்ல ஒருநாள் அவங்க என்னைப் பார்த்தாங்க. அப்போ நான் ஒரு புது மொபைல் வாங்கியிருந்தேன். அதை சர்ச்ல எல்லோரும் வாங்கிப் பார்த்துட்டு இருந்தாங்க. அப்போ என்னோட நம்பரை எப்படியோ ரெஜினா எடுத்துகிட்டாங்க. அவங்கதான் எனக்கு முதல்ல போன் பண்ணினாங்க. தொடர்ந்து போன் பண்ண ஆரம்பிச்சாங்க. நானும் முடிஞ்சவரைக்கும் அவங்களோட பேசுறதைத் தவிர்த்துட்டே இருந்தேன்.

ஒருநாள் திண்டுக்கல் மகளிர் காவல் நிலையத்தில் என்னைக் கூப்பிட்டாங்க. 'ரெஜினா என்பவர் உங்க மீது புகார் கொடுத்திருக்காங்க. விசாரிக்கணும்’னு சொன்னாங்க. அங்கே போனதும், 'அந்த பெண்ணை நீங்க கல்யாணம் பண்ணலைன்னா உள்ளே போக வேண்டியிருக்கும்’னு மிரட்டி​னாங்க. நான் முடியாதுன்னு சொன்னேன். 'இப்போ நீ தப்பிக்கணும்னா அந்தப் பொண்ணு கழுத்துல தாலி கட்டுற மாதிரி போட்டோவுக்கு போஸ் கொடு... மற்றதை அப்புறம் பார்த்துக்கலாம்’னு என் நண்பர்கள் சொன்னாங்க. நானும் அப்படியே செய்தேன்.

அதுக்கப்புறம் அந்தப் பெண் எங்கே போனாருன்னே தெரியலை. ரெண்டு வாரத்துக்குப் பிறகு அவரது நகைகளை நான் வித்துட்டதா புகார் செய்தார். போலீஸ் என்னை விசாரிச்சாங்க. நான் போட்டு

'எனக்கு யாரும் லவ்வர் கிடையாது... எல்லோருமே நண்பர்கள்தான்!'

இருக்கும் செருப்பு 4,500 ரூபாய். என் வாட்ச் 7,000 ரூபாய். நான் எதுக்கு சார் அவங்க நகையை விற்கப்போறேன் என்று போலீஸாரிடம் கேட்டேன். ஆனாலும் போலீஸ் என்னை நம்பலை.''

''ரெஜினாவுடன் நீங்க குடும்பம் நடத்தியதாகவும், அதில் அவர் கர்ப்பமாகி, நீங்கள் அடித்ததால்  அந்தக் கரு கலைந்துவிட்டதாகவும் சொல்கிறாரே?''

'அப்படி எல்லாம் எதுவுமே இல்லை. நான் அந்தப் பொண்ணோட செக்ஸ் வெச்சுகிட்டதுக்கு ஏதாவது ஒரே ஒரு ஆதாரம் கொடுக்கச் சொல்லுங்க பார்க்கலாம். இதைத்தான் ஆரம்பத்துல இருந்தே நான் அந்தப் பொண்ணுகிட்ட கேட்குறேன். ஆனா, அவங்க சம்பந்தமே இல்லாமல் எதையோ பேசிட்டு இருக்காங்க. அந்தப் பொண்ணு சொல்லிட்டு இருக்கிறது அத்தனையும் பொய். நான் கடந்த ஜூன் மாதம் முதல் டிசம்பர் வரை திருச்சியில் இருந்தேன். அந்தச் சமயத்துல என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது.''

'நீங்கள் பல பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் இருக்கிறதே?''

'அதுதாங்க எனக்கே தெரியவில்லை. என் வண்டியை என் நண்பர்கள் வாங்கிட்டுப் போவாங்க. அந்த வண்டி மட்டும்தான் என்னோடது. அதில் இருப்பது நான் இல்லை. கபிலனின் மனைவியோடு இருப்பது நான்தான். அது சாதாரணமாக எடுத்தப் படம். அவங்க எனக்கு அண்ணி முறை வேணும். அந்தப் பாசத்துல எடுத்த போட்டோ அது. உண்மையாகவே நான் திருச்சி அனுஷாவை மட்டும்தான் லவ் பண்ணினேன். வீட்டில் எங்களோட லவ்வுக்கு சம்மதிக்கலை. நாங்களே விருப்பப்பட்டு செக்ஸ் வெச்சுகிட்டோம். அப்புறமாதான் அந்தப் பொண்ணுக்கு நிறைய பசங்களோட தொடர்பு இருப்பது தெரிந்தது. நான் ஒதுங்கிட்டேன். மற்றபடி எனக்கு யாரும் லவ்வர் கிடையாது. எல்லோருமே நண்பர்கள் மட்டும்தான்!''

''பல பெண்களை நீங்கள் மயக்கி, ஆபாசமாக படம்பிடித்து வைத்துக்கொண்டு மிரட்டுவதாகவும் ரெஜினா சொல்லியிருக்கிறாரே?''

''அந்த ரெஜினாவும், போலீஸும் செய்யும் வேலை இது. அவங்க இஷ்டத்துக்கு ஏதாவது கதை கட்டி விடுறாங்க. அது எதுவும் உண்மை இல்லை.''

''உங்கள் அப்பாவின் மரணம் பற்றியும் சந்தேகம் கிளப்பியுள்ளார்களே?''

'என் அப்பா மீது அம்மா ரொம்பவும் பாசமாக இருந்தாங்க. அப்பா ஒரு ரயில் விபத்தில் எதிர்பாராமல் இறந்துட்டார். எங்க சொத்தை அபகரிக்க உறவினர்கள் சிலர் இப்படி தப்பா பேசிட்டு இருக்காங்க. ராஜா என்று சொல்லப்படுவர் எனக்கு மாமா முறை ஆகுது. அதாவது, எங்க அம்மாவுக்கு அண்ணன் முறை ஆகுது. அவரோடு எங்க அம்மாவை சேர்த்து வெச்சுப் பேசுறாங்க. கேட்கவே அசிங்கமா இருக்குது. அப்பாவோட மரணத்துக்குப் பிறகு மாமாதான் எங்களுக்கு எல்லா உதவியும் பண்ணிட்டு இருக்காங்க.''

''அமைச்சர் ஒருவர் உங்களுக்கு சப்போர்ட் செய்வதாகவும் புகார் சொல்லப்பட்டதே?''

''அப்படியெல்லாம் எனக்கு யாரையும் தெரியாதுங்க. நான் சாதாரண ஒரு காலேஜ் பையன். என்னை அரசியலுக்குள்ளே எல்லாம் இழுக்காதீங்க.''

''பெண்களை மையமாக வைத்து உங்கள் மீது எப்படி இவ்வளவு புகார்கள் வருகிறது?''

'எல்லாத்துக்கும் ஒரே காரணம் எனது பணம்தான். என் வீட்டை அபகரிக்க இப்படிச் செய்கிறார்கள். என் குடும்பத்தைச் சேர்ந்த சிலரே அவர்களுக்கு உடந்தையாக இருக்கிறார்கள். யாரை என் உயிருக்கு உயிரான நண்பன் என்று நினைத்தேனோ, அவனே என் வீட்டின் சாவியை டூப்ளிகேட் போட்டு வைத்திருக்கிறான். கபிலனைத்தான் சொல்கிறேன். 'நண்பர்களிடம் இருந்து என்னைக் காப்பாற்று... எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று ரஜினி சொல்வார் இல்லையா... என் சூழ்நிலையும் அப்படித்தான் இருக்கிறது. என் மானம் போச்சு... படிப்பு போச்சு. எங்க குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துடுச்சு. இனி எப்படி எங்களால் வெளியில் தலைகாட்ட முடியும்? எல்லாம் முடிஞ்சுப் போச்சு?''

- சண்.சரவணக்குமார்,

படங்கள்: வீ.சிவக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு