Published:Updated:

ஹாசினி போல 2017-ல் எத்தனை குழந்தைகள் பாதிக்கப்பட்டார்கள் தெரியுமா?  #NCRBReport

கடைசியில், அக்கறையோடு பேசிய... இல்லை நடித்த அவன்தான் குற்றவாளி...

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ( விகடன் )

பிப்ரவரி 5, 2017. சென்னை குன்றத்தூர் பகுதி. மாலை 4 மணி. அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி ஒருவர் மாயமானார். பெற்றோர்களும் அக்கம் பக்கத்தினரும் சேர்ந்து சிறுமியைத் தேடினர். அந்தக் குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்த் என்ற 24 வயது இளைஞரும் அந்தச் சிறுமியைத் தேடினார். சில மணி நேரத்துக்குப் பிறகு, சிறுமியைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மறுநாள் ஊடகம் ஒன்றில் அந்தச் சிறுமி மாயமானதைப் பற்றி வெளியிடப்பட்ட தொகுப்பில் அக்கம் பக்கத்தினர் சிறுமி மாயமானது தொடர்பாகத் தங்கள் வேதனையைத் தெரிவித்தனர். அந்தத் தொகுப்பில் மிகவும் அக்கறையோடு பேசினார் தஷ்வந்த். பின்னர்தான் தெரியவந்தது அக்கறையோடு பேசிய... இல்லை நடித்த தஷ்வந்த்தான் குற்றவாளி என்பது. அங்கிருந்த சிசிடிவி பதிவில் தஷ்வந்த் ஒரு பையோடு வீட்டைவிட்டு வெளியேறுவது போலக் காட்சிகள் பதிவாயிருந்தன. சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்து அவளைக் கொலை செய்து பையில் வைத்து எடுத்துச் சென்று உடலை எரித்த சம்பவம், தமிழகத்தை உலுக்கியது. சிறுமி ஹாசினி கொலை வழக்கு சம்பவம் நாம் யாவரும் அறிந்ததே. ஆனால் மறந்திருப்போம். அந்தச் சம்பவத்தை இப்போது ஞாபகப்படுத்தக் காரணம் இருக்கிறது. 2017-ம் ஆண்டு சென்னை மாநகரில், ஹாசினி மட்டுமல்ல அவரோடு சேர்த்து 83 குழந்தைகள் பாலியல் வன்கொடுமையை அனுபவித்துள்ளனர் என்கிறது மத்திய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை.

ஆம்! சென்னையில் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் என்று 2017-ம் ஆண்டு பதியப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 249. அதில் 83 வழக்குகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள்.
79 ஆண்டுகள்... 7 லட்சம் தொழிலாளர்கள்... 1,000 ஆலைகள் -  பட்டாசு... ஒரு A to Z  வரலாறு!

இந்த 83 என்ற எண்ணிக்கை வழக்குகளாகப் பதிவானவை மட்டுமே. பதிவாகாமல் எத்தனையோ ஹாசினிகள் சென்னையில் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையில், 2016-ம் ஆண்டு 230 ஆக இருந்த குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள், 2017-ம் ஆண்டு 249 ஆக அதிகரித்துள்ளது.

Crime against children
Crime against children
Vikatan Infographics

கடந்த திங்கள்கிழமை, 2017-ம் ஆண்டிற்கான குற்ற ஆவண அறிக்கையை வெளியிட்டது மத்திய குற்ற ஆவணக் காப்பகம். அந்த அறிக்கையில், நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்ந்த குற்றங்கள் காரணமாக 1,29,032 வழக்குகள் பதிவாகியுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2015-ம் ஆண்டில் 94,172 ஆக இருந்தது. அது 2016-ம் ஆண்டு 1,06,958 ஆக உயர்ந்தது. தற்போது வெளியாகியுள்ள,  2017-ம் ஆண்டிற்கான குற்ற ஆவண அறிக்கையோடு கடந்த ஆண்டு அறிக்கையை ஒப்பிடும்போது, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 20 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பது  மிகவும் வேதனைக்குரிய விஷயம். 2017-ம் ஆண்டு, நாடு முழுவதும் போக்சோ சட்டத்தின் கீழ் மட்டும் 32,608 வழக்குகள் பதிவாகியுள்ளன. 54,163 குழந்தைக் கடத்தல் வழக்குகளும் இதில் அடங்கும். 

இந்தியா முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களில், 60 சதவிகிதம் பேர் குழந்தைகளின் உறவினர்களாகவும் தெரிந்தவர்களாகவுமே இருக்கிறார்கள்.

மாநிலங்கள் வாரியான குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் பட்டியலில், தமிழகம் 14-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 2017-ம் ஆண்டு, 3,529 எதிரான குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன என்கிறது குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை. இது 2016-ம் ஆண்டைவிட 24 சதவிகிதம் அதிகமாகும். இந்தப் பட்டியலில் உத்தரப்பிரதேசம் (19,145), மத்தியப் பிரதேசம் (19,038), மகாராஷ்டிரா (16,918) ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. யூனியன் பிரதேசமான டெல்லியில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் என 7,852 வழக்குகள் பதிவாகியுள்ளன.

Crime committed against children
Crime committed against children
Vikatan Infographics

தமிழகத்தில்,  2017-ம் ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில்  குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளாக பதியப்பட்ட 1,488 வழக்குகள், 2017-ம் ஆண்டில் முடித்து வைக்கப்பட்டன. அதில் 539 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டு, தமிழகத்தில், குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில், 42.8% ஆக இருந்த தண்டனை வழங்கும் விகிதம் 2017-ம் ஆண்டு 36.9% ஆக குறைந்துள்ளது.
மத்திய குற்ற ஆவணக் காப்பகம்

கலாசார மாற்றம், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்களுக்கு இருக்கும் அக்கறையின்மை ஆகியவைதான் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க பிராதனக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. சுவிட்சர்லாந்து போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் வெறும் 2 சதவிகிதம்தான். இதற்குக் காரணம், ஸ்விட்சர்லாந்து அரசாங்கம் பாலினக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் என்கிறார்கள் குழந்தைகள் நல ஆர்வலர்கள். 

பாலினக் கல்வி
பாலினக் கல்வி

தமிழக அரசு 2017-ம் ஆண்டு, குழந்தைகள் நலக் கொள்கை வரைவு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், பள்ளிதோறும் குழந்தைகள் நலக் குழு அமைத்து முறையாகச் செயல்படுத்துவதன் மூலமும் பாலினக் கல்வி முறையைக் கொண்டு வருவதன் மூலமும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முடியுமென்று கூறப்பட்டுள்ளது. அதை முறையாகச் செயல்படுத்த வேண்டும் என குழந்தைகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதை மனதில் வைத்து மத்திய-மாநில அரசுகள் செயல்பட்டால் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.