Published:Updated:

`8 வருட தொடர் திருட்டு; பூட்டியிருக்கும் கிராமத்து வீடுதான் டார்கெட்’ -பலே திருடன் சிக்கியது எப்படி?

பரிமுதல் செய்த நகைகளை காட்சி படுத்தும் காவல்துறை
பரிமுதல் செய்த நகைகளை காட்சி படுத்தும் காவல்துறை

பூட்டப்பட்ட கிராமத்து வீடுகளை மட்டுமே டார்கெட் செய்து, மூன்று மாவட்டங்களில் பல ஆண்டுகளாக திருட்டில் ஈடுபட்டு வந்த தனிநபர் திருடன், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட மேலந்தல் கிராமத்தில் கடந்த 16-ம் தேதி தண்டபாணி என்பவரின் வீட்டில் பூட்டை உடைத்து பட்டபகலில் 20 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக காவல்துறைக்கு புகார் சென்றுள்ளது. இது தொடர்பான விசாரணைக்காக, மாவட்ட எஸ்.பி.ஜியாயுல் ஹக் உத்தரவின்பேரில், திருக்கோவிலூர் டி.எஸ்.பி கங்காதரன் மேற்பார்வையில், ஆய்வாளர் பாபு தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வந்துள்ளது. மேலந்தல் கிராமத்தில், 'அந்த நபர் எந்த பகுதியில் இருந்து வந்தார்' என காவல்துறை விசாரித்தபோது திருவண்ணாமலை சாலை பகுதியில் இருந்து வந்ததாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் ஏதேனும் கிடைக்கின்றனவா என்று காவல்துறை சோதித்து வந்த சமயத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கொட்டையூர் பகுதியில் அதேபோன்றதொரு திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது.

கைது செய்யப்பட்ட கா.காமராஜ்
கைது செய்யப்பட்ட கா.காமராஜ்

அங்கு விசாரித்த போது, 'வீட்டின் உரிமையாளர் வீட்டை பூட்டிவிட்டு அருகிலுள்ள ஒரு பகுதிக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ந்துள்ளார். உள்ளே சென்று திருடனை அந்த நபர் பிடித்தபோது, உடன் வருவதைப் போலவே நடித்த திருடன் ஒரு கட்டத்தில் உரிமையாளரை தள்ளி விட்டுவிட்டு தப்பித்துச் சென்றுள்ளான்'. அப்பகுதியில் கிடைத்த ஒரு சி.சி.டி.வி காட்சியை கைப்பற்றிய காவல்துறையினர், தீவிரமாக விசாரித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று (20.07.2021) மணம்பூண்டி கூட்ரோடு பகுதியில் காவல்துறையினர் வாகன தனிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அந்த சி.சி.டி.வி காட்சியில் இருந்த பெயர் போடப்பட்ட இரு சக்கர வாகனம் அந்த வழியே வந்துள்ளது.

சந்தேகப்படும்படியான நபரை நிறுத்தி காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அப்போது அந்த நபர் முன்னுக்கு பின் முரணான பதில் கூறியுள்ளார். மேலும் சிசிடிவி காட்சியில் இருந்த நபரும் ஒரே நபராக தெண்படவே, கை ரேகையை சோதித்து பார்த்துள்ளனர். அதில் அந்த நபரே திருடன் என உறுதியாகியுள்ளது. வடகரைதாயனூர் கிராமத்தை சேர்ந்த கா.காமராஜ் என்ற பெயர் கொண்ட அந்த நபரை கைது செய்த போலீஸார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

ஜெராக்ஸ் போடப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகள்; ஆடுகள் நூதன திருட்டு! - மூவர் கும்பல் சிக்கியது எப்படி?

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். "இவர் பகல் நேரங்களில் மட்டுமே திருடி வந்துள்ளார். உடன் கூட்டாளிகளை வைத்துக்கொள்வது கிடையாது. நகரப்பகுதிகளில் திருடினால் எங்கே சி.சி.டி.வி-களில் மாட்டிக் கொள்வோமோ..! என்று முடிவெடுத்து கிராமப்பகுதிகளில் மட்டும் கைவரிசை காட்டி வந்துள்ளார்.

பிடிபட்ட நபருடன் காவல்துறையினர்.
பிடிபட்ட நபருடன் காவல்துறையினர்.

பூட்டியிருக்கும் வீடுகளையும், 100 நாள் வேலைக்கு செல்லும் மக்களின் வீடுகளையும் தான் டார்கெட்டாக வைத்து திருடி வந்துள்ளார். அதேபோல, கிராமப்புறத்தில் திருடினால் பெரிதாக சந்தேகிக்க மாட்டார்கள் என்பதாலும், 'பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள் தான்... ஏதோ திருடிட்டாங்க என தங்களுக்குள்ளாகவே சண்டை போட்டுக்கொள்வார்கள்' என்பதற்காகவும் கிராமப்புறத்தில் உள்ள வீடுகளில் கைவரிசை காட்டி வந்துள்ளான். இவனுக்கு டைம், மதியம் 12 மணிக்குள்ள என முடிவு செய்து அந்த நேரத்திற்குள் பூட்டியிருக்கிற வீடுகளில் கைவரிசையை காட்டி கிளம்பிடுவான். திருடப் போகும் போது சந்தேகம் வராதபடி இருக்க, பைக் மற்றும் காரை மாத்தி மாத்தி பயன்படுத்தியுள்ளார். அதேபோல திருடப் போகும் சமயத்தில் வாகனத்தில் உள்ள நம்பர் பிளேட்டுகளை கழட்டி வைத்துவிட்டு சென்றுவிடுவார் போல.

டீசன்டாக போகும் இவர், பூட்டியிருக்கும் வீடுகளில் கைவரிசை காட்டும் போது.. யாராவது சந்தேகப்படும்படியாக கேட்டால், அந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு சொந்தக்காரர் எனவும்; பத்திரிகை வைப்பதற்காக வந்திருப்பதாகவும்; அந்த ஊருக்கு பக்கத்தில் உள்ள ஏதாவது ஒரு ஊரில் இருந்து தான் வருவதாகவும் கூறி இதுவரை தப்பித்து வந்துள்ளார். இதுபோன்ற செயலை, கடந்த 8 வருடமாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செய்து வந்துள்ளார். இதற்கு முன்பாக இவர் மீது வழக்குகள் இல்லாததால் இவரை உடனே சந்தேகிக்க முடியாமல் இருந்தது. காவல்துறையினரின் கூட்டு முயற்சியால் தற்போது கைது செய்துள்ளோம்.

காவல்துறை
காவல்துறை

இவரிடம் இருந்து 75 சவரன் தங்கம், அரை கிலோ வெள்ளி, 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 2 கார் மற்றும் 2 பைக்குகளை பறிமுதல் செய்துள்ளோம். அவரிடம் உள்ள சொத்துக்கள் தொடர்பாக விசாரித்து வருகிறோம். அவரின் வாக்குமூலத்தின் படி, 454, 380 பிரிவுகளின் கீழ் 10 வழக்குகளை பதிவு செய்துள்ளோம். அதேபோல சில சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளோம். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்றார்.

பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான் என கூறுவது சரியாகத்தான் உள்ளது!

அடுத்த கட்டுரைக்கு