Published:Updated:

சென்னை ஐ.ஐ.டியில் கேரள மாணவி தற்கொலை... செல்போன் பதிவால் பேராசிரியர்களுக்கு சிக்கல்!

சென்னை ஐ.ஐ.டி.யில் முதலாம் ஆண்டு மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் காவல்துறையும், ஐ.ஐ.டி நிர்வாகமும் உண்மையை மறைக்க முயல்வதாக மாணவர்களும், மாணவியின் குடும்பத்தினரும் குற்றம்சாட்டியுள்ளனர்.

தற்கொலை
தற்கொலை

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் அண்மையில் நடந்த தற்கொலை சம்பவம் ஒன்று பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. கடந்த நவம்பர் 9-ம் தேதி சனிக்கிழமையன்று முதலாம் ஆண்டைச் சேர்ந்த ஃபாத்திமா லத்தீஃப் எனும் கேரள மாணவி இங்கு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது.

ஐ.ஐ.டி
ஐ.ஐ.டி

இந்த நிலையில், கொல்லத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மாணவியின் பெற்றோர், தமிழக காவல்துறை இந்த வழக்கை மெத்தனமாக கையாள்வதாகக் குற்றம்சாட்டியிருந்தனர். இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்து நியாயமான விசாரணை நடைபெறுவதற்கு உதவ வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளனர். இதுதொடர்பாக தமிழக முதல்வரிடம் பேசுவதாக பினராயி விஜயன் உறுதியளித்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்களின் மகள் தற்கொலை தொடர்பாக சில விஷயங்களைப் பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்துகொண்ட அவர்கள், ``எங்கள் மகள் ஃபாத்திமாவின் செல்போனில் சில பேராசிரியர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அவளுடைய தற்கொலைக்கு அவர்கள்தான் காரணமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது!’’ என்றும் கூறியிருந்தனர். ஃபாத்திமாவின் செல்போன் மெசேஜில் சுதர்சன் பத்மநாபன், மிலிந்த் பிராமே, ஹேமசந்திரன் காரா ஆகிய பேராசிரியர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்த பதிவின் புகைப்படங்களையும் அவர்கள் வெளியிட்டிருந்தனர். இவர்கள் கூறியுள்ள தகவல், ஐ.ஐ.டி வட்டாரத்தில் மட்டுமின்றி, கேரளாவிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால், மாணவி ஃபாத்திமா தற்கொலை தொடர்பாக ஐ.ஐ.டி நிர்வாகம் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. மாறாக இப்படியொரு தற்கொலை நடந்திருப்பதைக் குறிப்பிட்டு, அதற்காக வருத்தப்படுவதாக மட்டும் ஒரு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தற்கொலை தொடர்பான வழக்கு, சென்னை கோட்டூர்புரம் போலீஸாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை தரப்பில், ``தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் அந்த மாணவி கடும் மனஅழுத்தத்தில் இருந்துள்ளார். அதுதான் இத்தகைய மோசமான முடிவு எடுக்கத்தூண்டியிருக்கும் என்று சந்தேகிக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவியின் செல்போன் பதிவு
மாணவியின் செல்போன் பதிவு

இந்த நிலையில், அந்தத் துறையைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத மாணவர் ஒருவர் நம்மிடம் பேசுகையில், ``மாணவியின் குடும்பத்தினர் கோட்டூர்புரம் காவல் நிலையம் சென்றபோது அங்கே ஃபாத்திமா செல்போன் கேட்பாரற்றுக் கிடந்ததைப் பார்த்துள்ளனர். சார்ஜ் இல்லாமல் ஆஃப் ஆகியிருந்த அந்த போனை ஃபாத்திமாவின் சகோதரி எடுத்து சார்ஜ் செய்து பார்த்தபோதுதான் அதில் `என் மரணத்துக்கு இந்த பேராசிரியர்கள்தான் காரணம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த இரண்டு பதிவுகளையும் ஃபாத்திமாவின் சகோதரி தன்னுடைய செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதைத்தான் கேரளாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவரின் பெற்றோர் வெளியிட்டுள்ளனர். செல்போன் மீண்டும் கோட்டூர்புரம் காவல்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டு தற்போது அவர்கள் வசம்தான் உள்ளது.

அந்த மாணவி குறைந்த மதிப்பெண் பெற்றதற்காக தற்கொலை செய்துகொண்டிருப்பார் என்பதை நம்பமுடியவில்லை. அவர் முதல் மதிப்பெண் பெறுகிற மாணவி. அந்த மூன்று பேராசிரியர்களின் பாடங்களிலுமே அவர் நல்ல மதிப்பெண்தான் எடுத்திருக்கிறார். சுதர்சன் என்கிற பேராசிரியரின் பாடத்தில் மட்டும் அவருக்கு ஐந்து மதிப்பெண்கள் குறைத்து வழங்கப்பட்டிருந்தது. அதுபற்றி அந்தப் பேராசிரியருக்கு ஃபாத்திமா மெயில் அனுப்பியுள்ளார். அதற்கு `உரிய நடவடிக்கை எடுப்பதாக’ பேராசிரியர் சுதர்சனும் பதில் மெயில் அனுப்பியிருக்கிறார். சனிக்கிழமை (9-ம் தேதி) காலை ஃபாத்திமா தற்கொலை செய்துள்ளார். இந்த நோட்ஸ் பதிவு வெள்ளி (8-ம் தேதி) அன்று உருவாக்கப்பட்டு இரண்டு முறை ஃபாத்திமாவால் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இறுதியாக சனிக்கிழமை அதிகாலையில் தூக்கிட்டுக்கொள்வதற்கு கொஞ்ச நேரம் முன்பாக இறுதியாக செல்போனைப் பயன்படுத்தியிருக்கிறார்.

உமாகாந்த் தாஸ்
உமாகாந்த் தாஸ்

பத்திரிகையாளர் சந்திப்பில் பேராசிரியர்களின் பெயர்கள் வெளிவந்த உடனே மாணவர்கள் கோடடூர்புரம் காவல் நிலையத்துக்குச் சென்று விசாரித்தபோது `செல்போனில் எந்த ஆதாரமும் இல்லை' என காவல்துறையினர் மறுத்தனர். மாணவர்கள் செல்வதற்கு முன்பே ஐ.ஐ.டி வளாக காவல் அதிகாரிகள் அங்கிருந்தனர். இதனால் செல்போன் ஆதாரத்தை அழிக்க முயற்சி செய்கிறார்களோ என்கிற சந்தேகமும் எழுகிறது. ஐ.ஐ.டி வளாகத்தில் நடைபெறுகிற சாதிய, மதப்பாகுபாடுகள் ஊரறிந்தது. இதனால் மாணவியின் பெற்றோர் வைத்த குற்றச்சாட்டையும் மறுத்துவிட முடியாது. அதே நேரம் ஐ.ஐ.டி நிர்வாகமும், காவல்துறையும் தெளிவான விளக்கம் தராமல் மௌனம் காப்பதும் சந்தேகங்களுக்கு மேலும் வலுசேர்க்கிறது" என்றார்.

இது தொடர்பாக ஃபாத்திமா படித்த humanities துறைத் தலைவர் உமாகாந்த் தாஸை தொடர்புகொண்டு கேட்டதற்கு , ``சமீபத்திய குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக எங்களுக்கு மாணவர் தரப்பிலிருந்தோ, பெற்றோர் தரப்பிலிருந்தோ, காவல்துறை தரப்பிலிருந்தோ எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. அந்த மாணவியின் தற்கொலை தொடர்பாக போலீஸ் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருப்பதால் விசாரணை முடிகின்ற வரையில் எந்தவொரு கருத்தும் சொல்ல இயலாது" என்றார்.