Published:Updated:

சாத்தான் குளம் சம்பவம்: `5 நிமிடம், 80 கி.மீட்டர், 20 லட்சம்!'- மிரட்டும் நம்பர்ஸ், மிரளும் போலீஸ்!

பென்னிக்ஸ் - ஜெயராஜ்
பென்னிக்ஸ் - ஜெயராஜ்

சாத்தான் குளம் சம்பவத்தில், 'கடையை அடைக்க 5 நிமிடம் தாமதமானதற்காக தந்தை-மகனை போலீஸார் கொடூரமாக அடித்தது ஏன்? 80 கி.மீ தூரத்திலுள்ள சிறையில் அடைத்தது ஏன்? உண்மையை மறைக்கும் அரசு, 20 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தது ஏன்?' என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகின்றனர் வியாபாரிகள்.

கொரோனா காலகட்டம் தமிழக போலீஸாருக்குப் போதாத காலகட்டமாக உருவெடுத்து வருகிறது. சாத்தான்குளத்தில், தந்தை - மகன் மரணம், கோவையில் பள்ளி மாணவனுக்கு அடி உதை, புதுக்கோட்டை பெண் தீக்குளித்து சாவு... என அத்தனை சம்பவங்களிலும் காவல்துறையை நோக்கிக் குற்றச்சாட்டுகள் நீளுகின்றன.

இதற்கிடையே, சாத்தான்குளம் சம்பவம் கட்சிகளுக்கிடையேயான 'அரசியல்'-ஆகவும் உருவெடுத்து வருகிறது. 'பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம், ஒருவருக்கு அரசு வேலை' என அறிவித்திருக்கிறார் தமிழக முதல்வர். ஆனால், 25 லட்சம் ரூபாயை நிவாரணமாக அறிவித்துள்ளது தி.மு.க. மேலும், 'உண்மையை மறைத்துக் கூறுகிறார் முதல்வர்' எனக் கண்டித்து அறிக்கையும் வெளியிட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.

குற்றம்சாட்டப்பட்டுள்ள போலீஸார்
குற்றம்சாட்டப்பட்டுள்ள போலீஸார்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் இருவருமே உள்ளூரில் கடை வைத்துள்ளனர். கடந்த 19-ம் தேதியன்று அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டியும் கடையைத் திறந்துவைத்து இவர்கள் வியாபாரம் செய்ததாகவும், இதையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இந்த விசாரணையின்போது, போலீஸார் தாக்கியதில் படுகாயமடைந்த தந்தையும் மகனும் அடுத்த சில நாள்களிலேயே சிகிச்சை பலனின்றி இறந்துபோயுள்ளனர் என்றும் பரபர செய்திகள் கிளம்ப, காவல்துறைக்கு எதிராகத் தமிழகமே கொந்தளித்துக்கொண்டிருக்கிறது.

சொத்துக்காகக் கொல்லப்பட்ட முதல் மனைவி! -கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி

'அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி கடையைத் திறந்துவைத்த குற்றத்துக்காக தந்தையும் மகனும் சாகடிக்கப்படுவார்களா?', 'காவல்துறையின் தாக்குதலால் இறந்துபோனவர்கள் மீது இதற்கு முன் எந்தவிதக் குற்றச்சாட்டோ அல்லது வழக்குகளோ இல்லை. அப்பாவி குடும்பத்தினரை இப்படி அடித்தே கொன்றுவிட்டார்களே...' என்பன போன்ற கேள்விகள் பொதுமக்கள் மத்தியிலும் எழ ஆரம்பித்திருக்கின்றன.

சாதிக் கட்சியில் ஆரம்பித்து அனைத்துக் கட்சியினரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவருகின்றனர். வணிகர் சங்கங்களும் காவல்துறைக்கு எதிராகக் கடையடைப்பு - போராட்டம் என எதிர்ப்பைப் பதிவு செய்துவருகின்றன.

பாதிக்கப்பட்ட குடும்பம்
பாதிக்கப்பட்ட குடும்பம்

'தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் மாநில துணைப் பொதுச்செயலாளர் கார்த்திகேயன் இந்த விவகாரம் குறித்துப் பேசும்போது, ''கடையை மூட 5 நிமிடம் தாமதமாகிவிட்டது என்ற காரணத்தைச் சொல்லி, தந்தை ஜெயராஜை காவல்நிலையத்துக்குக் கூட்டிச் சென்றிருக்கிறார்கள். தந்தையை அழைத்துவர காவல்நிலையத்துக்கு பென்னிக்ஸ் சென்றபோது, அவர் கண்ணெதிரிலேயே அவரது தந்தையைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர் போலீஸார். இதைத் தட்டிக்கேட்டுள்ளார் பென்னிக்ஸ். உடனே இருவரையும் கொடூரமாக அடித்தே கொன்றுவிட்டார்கள். கடையை அடைக்க 5 நிமிடம் தாமதமானதற்காக 2 பேரை அடித்துக்கொன்றிருப்பது எந்தவகையில் நியாயம்?

கடையை மூட, லேட்டாகிவிட்டது என்றால், உரிய விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்யலாம் அல்லது கடையை மூடி சீல் வைக்கலாம். ஆனால், இப்படிக் கூட்டிச் சென்று அடித்துக் கொல்லும் அளவுக்கு அந்தத் தந்தையும் மகனும் என்ன குற்றம் செய்துவிட்டார்கள்?

கடையை மூடப்போகும் நேரத்தில் ஒன்றிரண்டு வாடிக்கையாளர் வந்துவிட்டால், அவர்களுக்குப் பொருள்களைக் கொடுத்துவிட்டு கடையை மூடுவதென்பது மிக சாதாரணமான ஒரு விஷயம். இதை ஒரு கொலைக் குற்றம்போல் பாவிப்பதோ அல்லது தீவிரவாதி போன்று வியாபாரிகளை சித்திரித்து மிருகத்தனமாக அடித்துக் கொல்வதையோ எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது.

சனிக்கிழமையன்றே இருவரையும் கைது செய்துவிட்டனர் என்றால், அன்றையதினமே மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தாமல் ஞாயிற்றுக்கிழமைதான் ஆஜர்படுத்தியிருக்கின்றனர். சாதாரணமாகவே தங்கள் அதிகாரத்தைக் காட்டுவதற்காக அப்பாவி வியாபாரிகளை அவமரியாதையாகப் பேசுவதும், காசு கொடுக்காமல் பொருள்களை எடுத்துச் செல்வதுமாக ரவுடிகள்போல் நடந்துகொள்வார்கள் சில போலீஸார். இந்தக் கொரோனா காலகட்டத்தில், இவர்களது மிரட்டல்கள் எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்கின்றன.

ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவருமே ரொம்பவும் அப்பாவியான மனிதர்கள். அவர்கள் மீது இதுவரையில் எந்தவொரு வழக்கும்கூட காவல்நிலையத்தில் இல்லை. தினப்படி வருமானத்துக்காக கடை வைத்துப் பிழைப்பு நடத்திவந்த எளியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து இப்படிக் கொடூரத் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். பென்னிக்ஸின் பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாய்ப் பகுதிகளில் கொடூரமாக அடித்துக் காயப்படுத்தியிருக்கிறார்கள் என்று பென்னிக்ஸின் சகோதரி கூறியிருக்கிறார்.

கார்த்திகேயன்
கார்த்திகேயன்

சொல்லவே நா கூசுகிற அளவுக்கு இப்படியொரு மிருகத் தாக்குதலை நடத்துகிற அளவுக்கு அந்தத் தந்தையும் மகனும் செய்த குற்றம்தான் என்ன? இப்படித் தண்டிப்பதற்கான அதிகாரத்தை போலீஸுக்குக் கொடுத்தது யார்?

காவல்நிலையத்துக்கு வராமல் தப்பி ஓடுகிற குற்றவாளியைக் காவல்துறை அடித்திருந்தால்கூட அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், காவல்நிலையத்துக்கே வந்துவிட்ட இருவரையும் ஏன் இப்படிக் கொடூரமாகத் தாக்கவேண்டும்?

அடுத்ததாக, சாத்தான்குளத்தைச் சுற்றி 30 கிலோ மீட்டர் தூரத்துக்குள்ளாகவே ஶ்ரீவைகுண்டம், பாளையங்கோட்டை, திருச்செந்தூர் பகுதிகளில் சிறைச்சாலைகள் இருக்கிறபோது, 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவில்பட்டி சிறைச்சாலைக்கு ஏன் அழைத்துச் சென்றார்கள்?

இந்தச் சம்பவத்தில் இப்படி அடுக்கடுக்காக நிறைய கேள்விகள் இருக்கின்றன. அனைத்தையும் முழுமையாக விசாரணை செய்தால்தான் உண்மை வெளிவரும். இந்தப் படுகொலையைச் செய்த போலீஸாரின் விவரம் அனைத்தும் பெயர் வாரியாகவே ஊடகத்தில் வெளியாகிவிட்டது. இனியும் உண்மையை மூடி மறைக்காமல், உரிய விசாரணை செய்து, சம்பந்தப்பட்ட காவலர்களைக் கொலைக்குற்றத்தில் கைது செய்யவேண்டும்.

சாத்தான்குளம்: `உடற்கூறாய்வுக்கு முன்னரே எப்படி முதல்வர் காரணம் சொன்னார்?’ - கனிமொழி

இந்தப் பிரச்னையில், உண்மை நிலவரம் குறித்து எதையுமே சொல்லாமல், காவல்துறை கொடுத்த அறிக்கையை அப்படியே வாசித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மூச்சுத்திணறல் ஏற்பட்டு பென்னிக்ஸ் இறந்துவிட்டதாகவும், உடல்நலக் கோளாறால் ஜெயராஜ் இறந்துவிட்டதாகவும் சொல்லியிருக்கிறார். அதாவது, காவல்துறையினரின் கொடூரத் தாக்குதலால்தான் இறந்துபோனார்கள் என்பதைச் சொல்லாமல் தவிர்த்திருக்கிறார். அப்படியென்றால், வெறுமனே உடல்நலக் கோளாறுகளால் இறந்துபோனவர்களின் குடும்பத்துக்கு எதற்காக நிவாரணத் தொகையையும் அரசு வேலையையும் தருவதாக அறிவித்திருக்கிறார் முதல்வர்?'' என்கிறார் கிடுக்குப்பிடியாக.

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகக் காவல்துறை மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு அமைச்சர் ஜெயக்குமாரைத் தொடர்புகொண்டு பேசினோம்...

''இந்தப் பிரச்னைகள் முதல்வரின் கவனத்துக்கு வந்ததுமே, உடனடியாக டி.ஜி.பி-யை அழைத்து, 'நெருக்கடியான இந்தக் காலகட்டத்தில், காவல்துறையினர் பொதுமக்களிடம் கனிவாகவும் அன்பாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்று கண்டிப்புடன் கூறியிருக்கிறார். மேலும் காவல்துறையினருக்கான இந்த அறிவுறுத்தலை மேடையிலும் வெளிப்படையாக முதல்வர் பேசியிருக்கிறார்.

தற்போது, சாத்தான்குளம் சம்பவம் குறித்த விசாரணை நீதிமன்ற நடைமுறையில் இருப்பதால், இதுகுறித்து விரிவாகப் பதிலளிக்க முடியாது. அதேநேரம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மனிதாபிமான அடிப்படையில் அரசு சார்பில் நிவாரணமும் வேலைவாய்ப்பும் அறிவித்திருக்கிறார் முதல்வர்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு