Published:Updated:

``ஜே.என்.யு.வில் என்ன நடந்தது?'' - விவரிக்கும் பல்கலைக்கழக மாணவர்

ஜே.என்.யு  மோதல்
ஜே.என்.யு மோதல்

"இந்தத் தாக்குதலைக் கண்டு அஞ்சி, போராட்டத்தைக் கைவிட மாட்டோம்."

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகமே போர்க்களமாகக் காட்சியளிக்கிறது. மாணவ அமைப்புகளுக்கிடையே வெடித்த மோதலில், மாணவர்கள் பலரும் படுகாயமடைந்துள்ளனர். ஜே.என்.யு மாணவர் அமைப்பின் தலைவரான அய்ஷி கோஷ் (Aishe Ghosh) கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். முகத்தில் ரத்தம் வழிந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவருகின்றன.

அய்ஷி கோஷ் ஜே என் யு மாணவர் சங்கத் தலைவர்
அய்ஷி கோஷ் ஜே என் யு மாணவர் சங்கத் தலைவர்

இந்த வன்முறை வெறியாட்டத்திற்கு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பே காரணம் என்று ஜேஎன்யு (இடது சாரி) மாணவ அமைப்பு குற்றம் சாட்டுகிறது. பாரதிய வித்யார்த்தி அமைப்போ, ஜேஎன்யு (இடது சாரி) மாணவ அமைப்புதான் இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என்று குற்றம் சாட்டுகிறது. இதனால் பல்கலைக்கழகம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் பதற்றம் நீடித்துள்ளது.

இது தொடர்பாக, வன்முறைச் சம்பவத்தில் சிக்கிய தமிழ்த்துறை முனைவர் ஆய்வியல் மாணவர் அருண் பேசுகையில், "ஜே.என்.யு-வில் அறிவிக்கப்பட்ட புதிய கல்விக் கட்டண உயர்வு மற்றும் மாணவர்களுக்கு எதிரான விடுதி வரைவு அறிக்கையை எதிர்த்து, கடந்த இரண்டு மாதமாக மாணவர்கள் போராடி வருகின்றனர். 65-வது நாளை எட்டியுள்ள இந்தப் போராட்டத்தால், மாணவர்கள் தேர்வெழுதாமலும் வகுப்புகளைப் புறக்கணித்தும், தங்களின் உரிமைகளுக்காகக் கடுமையாகப் போராடிவருகின்றனர். இந்த நிலையில், அடுத்த கல்விப் பருவம் தற்போது (ஜனவரி மாதம் முதல்) தொடங்கியுள்ளன. அதற்கான விடுதிக் கட்டணம் மற்றும் கல்விக் கட்டணம் போன்றவற்றைச் செலுத்திவிட்டு வகுப்புக்களைத் தொடருமாறு, பல்கலைக்கழகம் உத்தரவிட்டிருந்தது.

ஏற்கெனவே, நாங்கள் கல்விக் கட்டணத்தை எதிர்த்துப் போராடி வருவதால், இந்தப் புதிய உத்தரவையும் எதிர்த்து கடந்த 4 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற்ற போராட்டத்திலும் பேசினோம். அப்போது திடிரென்று கூட்டத்திற்குள் நுழைந்த ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த பல மாணவர்கள், எங்கள்மீது தாக்குதலை நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஜே என் யூ பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சதிஷ் சந்தர யாதவ் மற்றும் கவுன்சிலர் அபேக்க்ஷா ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

ஜே .என்.யு  மோதல்
ஜே .என்.யு மோதல்
`திட்டமிட்டே அடித்தார்கள்; இந்தியில் திட்டினார்கள்!’ -ஜே.என்.யூ வன்முறையால் கலங்கிய மாணவர்கள்

அவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில், அந்த வன்முறைத் தாக்குதலைக் கண்டித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாணவர்கள் அனைவரும் அமைதியான முறையில் பேரணி நடத்தினோம். அந்தப் பேரணி, பெரியார் விடுதியைக் கடந்து சென்றுகொண்டிருந்தபோது, ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், மீண்டும் எங்கள்மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே சிறு மோதல் நடந்தது.

இந்த மோதல் முடிந்ததும், இப்படியான தொடர் தாக்குதல் குறித்துத் தீர்வு காண அடுத்தகட்ட முடிவு எடுப்பதற்காக, சபர்மதி தபா விடுதி அருகே, எங்களுடைய அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் ஒன்றுகூடினோம். இந்த இடைவெளியில், ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் வெளியிலிருந்து குண்டர்களையும், டெல்லி பல்கலைக்கழகத்தில் பயிலும் அவர்களுடைய அமைப்பைச் சேர்ந்த மாணவர்களையும் அழைத்துவந்தனர்.

அய்ஷி கோஷ்
அய்ஷி கோஷ்

வந்தவர்கள், திடீரென்று சபர்மதி தபா விடுதி முன்பு கூடியிருந்த எங்களுடைய மாணவர்கள்மீது தாக்குதல் நடத்தினர். கிரிக்கெட் பேட் , பெரிய பெரிய இரும்புக் கம்பிகள் , மரக்கட்டைகள் போன்ற ஆயுதங்களைக் கொண்டு சரமாரியாகத் தாக்கினார்கள்.

இந்தத் தாக்குதலில், எங்கள் ஜேஎன்யூ மாணவர்கள் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ் என்ற 23 வயதாகும் மாணவி, பலத்த காயமடைந்துள்ளார். எங்களுடைய போராட்டத்தை ஒடுக்க வேண்டும் என்பதற்காகவே எங்கள் மாணவர் சங்கத் தலைவர் மீது திட்டமிட்டே தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த வன்முறை வெறியாட்டத்தை, போலீஸார் வேடிக்கை பார்த்ததோடு, அந்த வன்முறைக் கும்பல்களுக்கு பாதுகாப்புகொடுத்து, பல்கலைக்கழக வளாகத்திற்குள் அனுப்பியதும் தெரியவந்துள்ளது. அதற்கான வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. கடந்த 65 நாள்களாக நாங்கள் அமைதியான முறையில் போராடிக்கொண்டிருக்கிறோம். நாங்கள் எப்படி வன்முறையில் ஈடுபடுவோம்?

`மாணவர்கள், பேராசிரியர்கள் மீது தாக்குதல்; விடுதி சூறையாடல்!' -கலவர பூமியான டெல்லி ஜே.என்.யூ

எங்களின் எழுச்சியான போராட்டத்தை விரும்பாத எங்கள் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜேகதேஷ்குமார் மாமிடாலா, 'பல்கலைக்கழகத்தில் வன்முறை நடக்கிறது' என்று கூறி பல்கலைக்கழகத்தை இழுத்து மூடுவதற்காகத் திட்டமிட்டுள்ளார். அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஏபிவிபி மாணவ அமைப்பைச் சார்ந்தவர்களையும், சங்க் பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்களையும் ஏவிவிட்டு, வன்முறை வெறியாட்டத்தை நடத்தியுள்ளார் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவருடைய அந்த நோக்கத்தை நாங்கள் வெற்றிபெற விடமாட்டோம். மேலும், இந்தத் தாக்குதலைக் கண்டு அஞ்சி, போராட்டத்தைக் கைவிட மாட்டோம். நேற்று நடந்த இந்த அராஜகத்தை எதிர்த்து உள்துறை அமைச்சகத்தின் முன்பு மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு