Published:Updated:

மாடியிலிருந்து குதித்த மாணவி; அருகில் இறந்த நிலையில் பச்சிளம் குழந்தை! - அதிர்ச்சி சம்பவம்

மாணவி கர்ப்பம்
News
மாணவி கர்ப்பம் ( சித்திரிப்புப் படம் )

இருவரையும் மீட்டு கோடம்பாக்கம் மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறினர்.

சென்னை, கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் சினிமா துறையில் லைட் மேனாக வேலை பார்த்துவருகிறார். இவரின் மகளுக்கு 21 வயதாகிறது. இவர் கிண்டியில் படித்துவருகிறார். இந்த நிலையில், மாணவிக்கு திடீரென நேற்று வயிற்றுவலி ஏற்பட்டிருக்கிறது. அதை அந்தப் பெண் அவர் குடும்பத்தினரிடம் கூறியிருக்கிறார். உடனே, அவர் குடும்பத்தினர் வெந்தயம் கலந்த தண்ணீரைக் குடிக்கும்படி அறிவுறுத்தியிருக்கின்றனர். அதன்படி வெந்தயம் கலந்த தண்ணீரைக் குடித்த மாணவி, வீட்டின் மொட்டைமாடியில் நடைபயிற்சி மேற்கொண்டிருக்கிறார்.

பச்சிளம் குழந்தை
பச்சிளம் குழந்தை
சித்தரிப்புப் படம்.

இந்தச் சூழலில், திடீரென மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அவரின் குடும்பத்தினர் வெளியில் வந்தனர். அப்போது மாணவி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரின் அருகில் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று கிடந்தது. அதைப் பார்த்து மாணவியின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இருவரையும் மீட்டு கோடம்பாக்கம் மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறினர். மேலும் மாணவியை மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வடபழனி போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தற்கொலைக்கு முயன்ற மாணவி, தான் படித்த கல்லூரியில் ஒருவரைக் காதலித்தது தெரியவந்தது. இருவரும் நெருங்கிப் பழகியதில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்திருக்கிறார். அதை அவர் வீட்டுக்குத் தெரியாமல் மறைத்திருக்கிறார். இந்தச் சூழலில்தான், வயிற்றுவலி ஏற்பட்டதும் மாணவி, கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz