Election bannerElection banner
Published:Updated:

`தமிழ்நாடே வெடிக்கும்!' - சேலம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மிரட்டல் கடிதம்

வாகனம்
வாகனம்

`நல்லதம்பியை விடுதலை செய்யவில்லை என்றால் சேலமே வெடிக்கும். ஏன் தமிழ்நாடே வெடிக்கும்' என்ற வாசகம் அடங்கிய நோட்டீஸால் சேலம் நீதிமன்ற வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் அஸ்தம்பட்டி அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. இந்த நீதிமன்ற வளாகத்தின் முன்புற நுழைவு வாயில் நடுவில் மதியம் 1:00 மணிக்கு ஒரு டி.வி.எஸ் எக்ஸல் இரு சக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது.

வாகனம்
வாகனம்

நீதிமன்ற வளாகத்துக்குள் நுழையும் நடு வழியிலேயே அந்த இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. மேலும், அந்த இரு சக்கர வாகனத்தின் முன்புறமும், பின்புறமும் வெள்ளை நிற தாளில் சிவப்பு எழுத்துகளில் ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது.

அந்த நோட்டீஸில்,``தமிழ்நாடு அரசுக்கு முக்கிய அறிவிப்பு... சேலம் தென் அழகாபுரத்தைச் சேர்ந்த வக்கீல் சுரேஷ்குமாரும் அழகாபுரம் போலீஸாரும் சேர்ந்து அரசுப் பேருந்து ஓட்டுநர் நல்லதம்பியை பொய் கேஸ் போட்டு கைதுசெய்திருக்கிறார்கள். நல்லதம்பி இப்போது சிறையில் இருக்கிறார். வக்கீல் சுரேஷ்குமார் தலைமை தாங்கி நல்லதம்பியை இன்று அல்லது நாளைக்குள் விடுதலை செய்ய வேண்டும்.

கடிதம்
கடிதம்
விஜயகுமார்

விடுதலை செய்ய மறுத்தால் நல்லதம்பிக்காக அவர் தம்பி ராஜா எதை வேண்டுமானாலும் செய்வார். வக்கீல் சுரேஷ்குமாருக்கு இரண்டு நாள்தான் கெடு. இந்தக் கெடு முடிவதற்குள் நல்லதம்பி விடுதலை ஆக வேண்டும். விடுதலை ஆகவில்லை என்றால் சேலம் மாவட்டமே வெடிக்கும். ஏன் தமிழ்நாடே வெடிக்கும். ஏன் இந்தியாவே வெடிக்கும். ஏன் உலகமே வெடிக்கும். இந்தத் தவறு நடக்கக் கூடாது என்றால் நல்லதம்பியின் விடுதலை சுரேஷ்குமார் கையில்தான் உள்ளது. ஏதும் பிரச்னை என்றால் இந்த நம்பருக்குத் தொடர்புகொள்ள வேண்டும்' என்று குறிப்பிட்டு இரண்டு செல்போன் எண்களும் எழுதப்பட்டிருந்தன.

இந்த மிரட்டல் கடிதத்தைப் படித்து பலரும் அச்சப்பட்டதோடு நீதிமன்ற வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த அஸ்தம்பட்டி காவல்துறையினர் விரைந்து வந்து இரு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்ததோடு, அந்த இருசக்கர வாகனத்தில் இருந்த நோட்டீஸை புகைப்படம் எடுத்துக்கொண்டு அந்த நோட்டீஸை கிழித்துப் போட்டார்கள். இதுகுறித்து அஸ்தம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடிவருகிறார்கள்.

போலீஸ்
போலீஸ்
விஜயகுமார்

இதுபற்றி அழகாபுரம் காவல் நிலையத்தில் விசாரித்தபோது, ``நல்லதம்பி என்பவர் அரசுப் பேருந்து ஓட்டுநராக இருக்கிறார். அவரின் எதிர் வீட்டில் குடியிருப்பவர் வழக்கறிஞர் சுரேஷ்குமார். இருவருக்கும் பணம் கொடுத்தல் வாங்கல் பிரச்னையில் வழக்கறிஞரை நல்லதம்பி அடித்துக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அதனால் நல்லதம்பியைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தோம். அதையடுத்து, நல்லதம்பி சிறையில் இருக்கிறார். ஆனால், மிரட்டல் கடிதம் ஒட்டும் அளவுக்குப் பெரிய ஆட்கள் என்று எதிர்பார்க்கவில்லை'' என்றார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு