Published:Updated:

`எங்கே போனார் வணக்கம் சோமு?' -பெண் பேராசிரியைக் கடத்தல் வழக்கில் அலைக்கழிக்கும் அ.தி.மு.க புள்ளி

`வணக்கம்’ சோமு
`வணக்கம்’ சோமு

திருச்சி பேராசிரியை ஒருவரைக் காரில் கடத்தி கட்டாயத் திருமணம் செய்ய முயன்ற அ.தி.மு.க பிரமுகர் வணக்கம் சோமு, கடந்த ஆறுமாதமாகத் தலைமறைவாக உள்ளதைச் சுட்டிக்காட்டுகின்றனர் பேராசிரியையின் உறவினர்கள்.

திருச்சி மலைக்கோட்டை எஸ்.ஆர்.சி கல்லூரி சாலையில் வசிப்பவர் வணக்கம் சோமு என்கிற சோமசுந்தரம். இவர் அப்பகுதியின் அ.தி.மு.க பொருளாளராக இருக்கிறார். இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக சில வருடங்களாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 30-ம் தேதி காலை, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆண்டாள் வீதியில், தனியார் கல்லூரிப் பேராசிரியை மகாலட்சுமி, தோழி ஹேமாவுடன் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது ஆம்புலன்ஸில் அங்கு வந்த 5 பேர்கொண்ட கும்பல், ஹேமாவைக் கீழே தள்ளிவிட்டு பேராசிரியை மகாலட்சுமியை வலுக்கட்டாயமாக ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு வேகமெடுத்தது.

கடத்தல்
கடத்தல்
மாதிரி படம்

இதுகுறித்து, திருச்சி கோட்டைக் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, திருச்சி மற்றும் சுற்றுவட்டார காவல் நிலையங்கள் அலர்ட் செய்யப்பட்டன. தொடர்ந்து, மகாலட்சுமியின் செல்போன் சிக்னல் மூலம் ஆம்புலன்ஸ் செல்லும் வழியைப் போலீஸார் கண்காணித்தனர். போலீஸார், தங்களைப் பின்தொடர்வதை உணர்ந்த கும்பல், சட்டெனத் திருச்சியை அடுத்த துவரங்குறிச்சி பகுதியில் மகாலட்சுமியை இறக்கிவிட்டுவிட்டுத் தப்பிச்சென்றது. சம்பவ இடத்தில் மகாலட்சுமியை மீட்ட போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

போலீஸ் விசாரணையில் பேசிய மகாலட்சுமி, ``கடந்த சில மாதங்களாகவே, திருச்சி மலைக்கோட்டை பகுதி அ.தி.மு.க பொருளாளரான வணக்கம் சோமு எனக்குத் தொல்லை கொடுத்து வந்தார். தொடர்ந்து, என்னை மிரட்டியும் வந்தார். எனக்கு அப்பா இல்லை. பாதுகாப்பு கருதி அம்மாவிடம் நடந்ததை விளக்கினேன். சூழலைப் புரிந்துகொண்ட அம்மா எனக்குத் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தார். இதைத் தெரிந்துகொண்ட சோமு, `என்னைத் தவிர்த்து நீ யாரையும் திருமணம் செய்துகொள்ள முடியாது' என மிரட்ட ஆரம்பித்தார்.

இந்நிலையில், கல்லூரிக்கு என் தோழி ஹேமாவுடன் சென்று கொண்டிருந்த என்னை ஆம்புலன்ஸில் கடத்தினார். அந்தக் காரில் வணக்கம் சோமு மற்றும் அவரின் ஓட்டுநர் விக்கி உள்ளிட்ட 5 பேர் இருந்தனர்” என்றார்.

`வணக்கம்' சோமு
`வணக்கம்' சோமு

விசாரித்ததில், வணக்கம் சோமு மற்றும் அவரின் முகநூல் மூலம் அவரின் நண்பர்களான தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டையைச் சேர்ந்த அலெக்ஸ், தஞ்சாவூர் மரிய பிரகாஷ் மற்றும் கார் ஓட்டுநர் விக்கி ஆகியோர் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதையடுத்து அலெக்ஸ் மற்றும் மரிய பிரகாஷ் ஆகியோர் மட்டும் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களும் வணக்கம் சோமுவும் திருச்சி கல்லூரியில் படித்த காலத்தில் நண்பர்களாக இருந்துள்ளனர். தற்போது வெளிநாட்டில், வேலைபார்த்துவரும் இவர்கள் நண்பனின் காதலுக்காக உதவ வெளிநாட்டில் இருந்து வந்து சிக்கிக்கொண்டனர்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, அ.தி.மு.க-விலிருந்து வணக்கம் சோமு நீக்கப்பட்டார். கடந்த 6 மாதங்களாக அவர் தன் கூட்டாளிகளான ஜெயபால் உள்ளிட்ட மூவருடன் தலைமறைவாக உள்ளார். ஆரம்பத்தில், மதுரை, குற்றாலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் தங்கியிருந்ததோடு, போலீஸார் தங்களை நெருங்குவதை அறிந்து, தங்கும் இடங்களை அடிக்கடி மாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. பிறகு, கேரளா, மும்பை, டெல்லி என வலம்வரும் அவர், தற்போது ஆந்திராவில் இருப்பதாகக் கூறும் போலீஸார், இந்தமுறை அவரைப் பிடித்தே தீருவோம் எனக் கூறிவருகிறார்கள்.

ஆனால், பாதிக்கப்பட்ட பேராசிரியையின் உறவினர்களோ, ``வணக்கம் சோமு ஆளும்கட்சி பிரமுகர் என்பதால் அவரைப் போலீஸார் பிடிக்காமல் உள்ளனர். `பெண் விவகாரங்களில் சிக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க அலட்சியம் காட்டக் கூடாது' என நீதிமன்றங்கள் கூறினாலும், வணக்கம் சோமு விவகாரத்தில் போலீஸார் மிகவும் மெத்தனமாக உள்ளனர். தலைமறைவாக உள்ள வணக்கம் சோமு, முக்கியப் புள்ளி ஒருவரின் பாதுகாப்பில் உள்ளார்” எனக் குற்றம்சாட்டுகின்றனர்.

பேராசிரியையை ஆம்புலன்ஸில்  கடத்திய அதிமுக நிர்வாகி...  ஊதிப் பெரிதாக்கும் கோஷ்டி அரசியல்!

இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதில் அளிக்கும் போலீஸார், ``வணக்கம் சோமுவை பிடிப்பதற்குப் பல வகைகளில் முயற்சி எடுத்து வருகிறோம். நிச்சயம் அவரைக் கைது செய்வோம். அவர் அடுத்தடுத்து இடத்தை மாற்றிக்கொண்டே இருப்பதால்தான் இவ்வளவு தாமதம். மற்றபடி நாங்கள் யாருக்கும் சாதகமாகச் செயல்படவில்லை” என்கின்றனர் ஆவேசமாக.

அடுத்த கட்டுரைக்கு