Published:Updated:

`அறக்கட்டளை பணத்தில் லஞ்சம்; அமெரிக்கச் சுற்றுலா!' -அதிமுக முன்னாள் எம்பி சிக்கிய மோசடி வழக்கு என்ன?

கே.என்.ராமச்சந்திரன்
கே.என்.ராமச்சந்திரன்

எம்.ஜி.ஆர் தலைமையில் இவருக்குத் திருமணம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மத்திய மாவட்ட அவைத்தலைவரான இவர் 2014-2019 ல் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

வங்கி மேலாளருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் அ.தி.மு.க எம்.பி குற்றவாளி என சென்னை எம்.பி.-எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கே.என். ராமச்சந்திரன்
கே.என். ராமச்சந்திரன்

யார் இந்த ராமச்சந்திரன்?

வண்டலூர் பகுதியைச் சேர்ந்தவர் கே.என் ராமச்சந்திரன். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அ.தி.மு.கவில் இருந்து வருகிறார். எம்.ஜி.ஆர் தலைமையில் இவருக்கு திருமணம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மத்திய மாவட்ட அவைத்தலைவரான இவர் 2014 -2019 ல் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

வண்டலூரில் உள்ள பெட்ரோல் பங்க் மற்றும் பூந்தமல்லியில் உள்ள சக்திமாரியம்மன் இன்ஜினீரியங் கல்லூரி ஆகியவற்றை நடத்தி வருகின்றார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியில் ஏ.கே.மூர்த்தியை எதிர்த்து போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். மீண்டும் 2011ம் ஆண்டு செங்கல்பட்டு சட்ட மன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் தே.மு.தி.க கூட்டணிக்குத் தொகுதியை விட்டுக்கொடுத்ததால் எம்.எல்.ஏ வாய்ப்பு பறிபோனது.

கடனுக்கு லஞ்சமாக அமெரிக்கா சுற்றுலா...!

கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளையை நடத்தி வரும் இவர் அதன் அறங்காவலராக உள்ளார். இந்த அறக்கட்டளைக்குக் கீழ் பூந்தமல்லியில் சக்தி மாரியம்மன் இன்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரித் தலைவராக இருக்கும் அவருடைய மகன் ராஜசேகரன் கல்லூரியை நிர்வகித்து வருகிறார்.

கே.என்.ராமச்சந்திரன்
கே.என்.ராமச்சந்திரன்

இந்தக் கல்லூரி விரிவாக்கத்திற்காக சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கடன் கேட்டு அணுகியுள்ளார். அப்போது வங்கி மேலாளராக இருந்த தியாகராஜன் என்பவர் விண்ணப்பத்தைச் சரியாகப் பரிசீலனை செய்யாமல் ராமச்சந்திரனுக்கு 20 கோடி பணத்தைக் கடனாக வழங்கினார். இதற்கு, வங்கி மேலாளர் குடும்பத்துடன் அமெரிக்கா சென்று வருவதற்கு 2.69 லட்சம் அறக்கட்டளை நிதியிலிருந்து லஞ்சமாகக் கொடுத்திருக்கிறார்.

சி.பி.ஐ. வழக்கு!

வங்கி மேலாளருக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பாக 2015 ல் ராமச்சந்திரன், அவரின் மகன் ராஜசேகரன் மற்றும் வங்கி மேலாளர் தியாகராஜன் ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கே.என் ராமச்சந்திரன் குற்றவாளி என நீதிபதி லிங்கேஸ்வரன் இன்று தீர்ப்பு வழங்கினார்.

வங்கி மேலாளர் தியாகராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், முன்னாள் எம்.பி.ராமச்சந்திரன் மற்றும் அவரின் மகன் ராஜசேகரனுக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி லிங்கேஸ்வரன் உத்தரவிட்டார்.

தீர்ப்பைக் கேட்டு மயங்கி விழுந்த மேலாளர்!

மோசடி குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது என்று அறிவிக்கப்பட்டதும் கோர்ட் வளாகத்திலேயே மயங்கி விழுந்தார் வங்கி மேலாளர் தியாகராஜன். பின்னர் அங்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதேபோல் முன்னாள் எம்.பி. ராமச்சந்திரன் மற்றும் அவரின் மகன் ராஜசேகரன் இருவரையும் போலீஸார் புழல் சிறைக்குக் கொண்டுசென்றனர்.

அடுத்த கட்டுரைக்கு