Published:Updated:

சிறார் வதை வழக்கு: `நாஞ்சில் முருகேசனுக்கு உதவி?’ - நீக்கப்பட்ட அ.தி.மு.க நிர்வாகி

அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட ஞாலம் ஜெகதீஸ்
அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட ஞாலம் ஜெகதீஸ்

சிறார் வதை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசனின் நண்பராக இருந்த மாவட்ட சிறுபான்மை அணி செயலாளர் ஞாலம் ஜெகதீஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி ஒருவரை 20 வயது வாலிபர் கடத்திச் சென்றதாகக் கடந்த ஜூலை மாதம் 16-ம் தேதி பெற்றோர் போலீஸில் புகார் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸார் சுசீந்திரத்தில் பதுங்கி இருந்த வாலிபரையும் சிறுமியையும் மீட்டனர். சிறுமியைக் கடத்தியதாக வாலிபரை கைது செய்த போலீஸார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

அதில் சிறுமி 10-ம் வகுப்பு படித்து வருவதும், அவரை தாயின் உடந்தையுடன் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் மற்றும் சிலர் சிறார் வதை செய்ததாகவும் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார் குழந்தைகள் நலக்குழுவிடம் சிறுமியை ஒப்படைத்தனர். சிறுமியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. பின்னர் இதுகுறித்து தமிழக முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து அ.தி.மு.க அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் நாஞ்சில் முருகேசன். தொடர்ந்து கடந்த மாதம் 27-ம் தேதி போக்ஸோ உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் நாஞ்சில் முருகேசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த நாஞ்சில் முருகேசன் கடந்த 29-ம் தேதி கைது செய்யப்பட்டார். சிறையில் அடைப்பதற்கு முன்பு நடத்திய மருத்துவ பரிசோதனையில் ரத்த அழுத்தம் மற்றும் சுகர் பிரச்னை இருந்தது கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நாஞ்சில் முருகேசன் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போதும் அங்கு சிகிச்சையில் உள்ளார்.

சிறார் வதை வழக்கில் கைது செய்யப்பட்ட நாஞ்சில் முருகேசன்
சிறார் வதை வழக்கில் கைது செய்யப்பட்ட நாஞ்சில் முருகேசன்

இந்த நிலையில் போலீஸார் நடத்திய விசாரணையில் நாஞ்சில் முருகேசனுக்கு சிறுமியின் தாயுடன் முதலில் தொடர்பு இருந்துள்ளதாகவும், அதன் பிறகு சிறுமி மீது நாஞ்சில் முருகேசன் கண் வைத்ததாகவும், பணத்துக்கு ஆசைப்பட்டு சிறுமியின் தாயும் இதற்கு உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து சிறுமியின் தாய் மற்றும் சிலர் கைது செய்யப்பட்டனர். இது ஒருபுறம் இருக்க கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சிறுபான்மை பிரிவு செயலாளர் ஞாலம் ஜெகதீஸ் என்பவர் சிறுமியின் தாயை நாஞ்சில் முருகேசனுக்கு அறிமுகம் செய்து வைத்ததாக தகவல் வெளியானது.

இதையடுத்து அ.தி.மு.க அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஞாலம் ஜெகதீஸ் நீக்கப்பட்டு கட்சித் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கட்சியின் இருந்து நீக்கப்பட்ட பிறகுதான் நாஞ்சில் முருகேசன் மீது வழக்கு பாய்ந்தது. அதுபோல ஞாலம் ஜெகதீஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் அவர் மீது வழக்கு பாய வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஞாலம் ஜெகதீசிடம் கேட்டதற்கு, ``நானும் நாஞ்சில் முருகேசனும் கட்சி ரீதியாக நட்பு வைத்திருந்தோம். சில நிகழ்ச்சிகள் நடத்த அவர்தான் பண உதவி செய்துவந்தார்.

ஞாலம் ஜெகதீஸ் மற்றும் நாஞ்சில் முருகேசன்
ஞாலம் ஜெகதீஸ் மற்றும் நாஞ்சில் முருகேசன்

நாஞ்சில் முருகேசனை அவரது தோட்டத்தில் சந்தித்து பேசிக்கொண்டிருந்த புகைப்படம் ஒன்றை அவர் இந்த வழக்கில் சிக்கும் முன்பு நான் எனது ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தேன். அந்தப் புகைப்படத்தை இப்போது எடுத்து சமூக வலைதளங்களில் போட்ட சிலர் நாஞ்சில் முருகேசனுக்கு சிறுமியின் தாயை நான் அறிமுகம் செய்து வைத்ததாகப் பரப்புகிறார்கள். இதுகுறித்து நான் எஸ்.பி-க்கு ஆன்லைனில் புகார் அனுப்பி இருந்தேன். நாஞ்சில் முருகேசனுடன் தொடர்பில் இருந்த பெண் யார் என்றே எனக்கு தெரியாது. என்னை கட்சியில் இருந்து நீக்கியது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு