திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பல்லவாடா பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க அம்மா பேரவை இணைச் செயலாளராக இருந்துவருகிறார். பல்லவாடா ஊராட்சித் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார். இவரின் மனைவி ரோஜா கவுன்சிலராக இருந்துவருகிறார். இவரின் மகன் ஜேக்கப் கல்லூரியில் படித்துவருகிறார்.
இன்று மதியம் ரமேஷ்குமார், தன் மனைவியின் செல்போனுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அப்போது, ரோஜாவின் செல்போனுக்கு அழைப்பு செல்லவில்லை. இதையடுத்து, அவரின் மகனின் செல்போனுக்கு அழைத்தபோது, அந்த எண்ணும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக இருவரையும் தொடர்புகொள்ள முடியாததினால் சந்தேகமடைந்த ரமேஷ், வீட்டுக்கு வந்து பார்த்திருக்கிறார். அப்போது, வீட்டில், ரோஜாவும், அவருடைய மகனும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
மேலும், ரமேஷ்குமாரின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்கள் அடித்து உடைக்கப்பட்டிருந்தன. அதற்கான ஹார்டு டிஸ்க்கும் திருடப்பட்டிருந்தது. அதோடு, வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரையும் காணவில்லை. அதையடுத்து, தன்னுடைய மனைவியையும், மகனையும் யாரோ கடத்தியிருக்கலாம் என்று பதற்றமடைந்த ரமேஷ், இது குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து வந்த போலீஸார், அந்தப் பகுதியிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், அவர்களது கார் தமிழ்நாடு-ஆந்திரா எல்லைப் பகுதியில் சென்றதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. நான்கு தனிப்படைகள் அமைத்து, மாயமானவர்களைத் தேடும் பணியை போலீஸார் தீவிரப்படுத்தியிருக்கின்றனர். வீட்டிலிருந்த அ.தி.மு.க கவுன்சிலர் திடீரென மாயமான சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.