Published:Updated:

கண்ணகி முருகேசன் கொலை வழக்கு: `உங்க கதையை முடிச்சிடறோம்!’ - முருகேசனின் பெற்றோர் மீது தாக்குதல்

கடலூர் மாவட்டம் கண்ணகி முருகேசன் கொலை வழக்கில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு 13 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் நிலையில் முருகேசனின் பெற்றோர்கள் தாக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரது மகன் முருகேசன். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முருகேசனுக்கும், புதுக்கூர்பேட்டை பகுதியில் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரும், அப்போதைய ஊராட்சிமன்றத் தலைவருமான துரைசாமியின் மகள் கண்ணகிக்கும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது காதல் மலர்ந்திருக்கிறது. அதையடுத்து கடந்த 05.05.2003 அன்று இருவரும் கடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்துகொண்டு அவரவர் வீட்டில் தனித்தனியாக வசித்து வந்தனர். சிறிது நாட்கள் கழித்து விழுப்புரம் மாவட்டத்திலுள்ள (தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம்) தனது உறவினர் வீட்டில் மனைவி கண்ணகியை தங்க வைத்த முருகேசன், ஸ்ரீமுஷ்னம் அடுத்திருக்கும் வண்ணாங்குடிகாட்டிலுள்ள வேறொரு உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.

முருகேசன் தந்தை சாமிக்கண்ணு
முருகேசன் தந்தை சாமிக்கண்ணு

கண்ணகியை காணாமல் தேடிய அவரது உறவினர்களுக்கு இருவரது காதல் விவகாரம் தெரிய வந்தது. தொடர்ந்து முருகேசனின் சித்தப்பா அய்யாசாமியை அடித்து உதைத்து மூங்கில்துறைப்பட்டில் இருந்து கண்ணகியையும், ஸ்ரீமுஷ்னத்திலிருந்து முருகேசனையும் 2003-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி குப்பநத்தம் கிராமத்துக்கு அழைத்து வந்தனர் கண்ணகியின் உறவினர்கள். அன்றைய தினமே இருவரையும் மயானத்திற்கு அருகில் அழைத்துச் சென்று கை, கால்களை கட்டி ஊர்மக்கள் முன்னிலையில் விஷத்தை ஊற்றி கொலை செய்ததுடன் இருவரையும் தனித்தனியாக எரித்தனர்.

இந்த கொடூர சம்பவம் குறித்து முருகேசனின் பெற்றோர்கள் விருத்தாசலம் காவல்நிலையத்தில் கூறியபோது, அது தற்கொலை என்று கூறி அந்த புகாரை ஏற்காமல் திருப்பியனுப்பப்பட்டனர். அதற்கடுத்து நிலநாட்கள் கழித்து ஊடகங்களில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட செய்தி வெளியானது. அதனால் 18 நாட்கள் கழித்து கிராம நிர்வாக அலுவலரிடம் புகாரை வாங்கி காதல் திருமணத்தால் தங்கள் பிள்ளைகளை ஆணவக் கொலை செய்துவிட்டனர் என்று முருகேசன் தரப்பில் நான்குபேர் மீதும், கண்ணகி தரப்பில் நான்கு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர் விருத்தாசலம் போலீஸார். ஆனால், ‘சாதி ஆணவத்தில் நடத்தப்பட்ட இந்தக் கொலை வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் ரத்தினம் களமிறங்கியதால் 2004-ம் ஆண்டு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது வழக்கு. வழக்கை விசாரித்த சி.பி.ஐ அதே ஆண்டில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது.

மருத்துவமனையில் முருகேசனின் பெற்றோர்கள்
மருத்துவமனையில் முருகேசனின் பெற்றோர்கள்

அதில் கண்ணகியின் தந்தை துரைசாமி, விருத்தாசலம் காவல் நிலையத்தின் அப்போதைய இன்ஸ்பெக்டர் செல்வமுத்து, எஸ்.ஐ தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தது சி.பி.ஐ. கடலூர் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்த இந்த வழக்கின் விசாரணையில் 81 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், 36 பேர் பிறழ் சாட்சிகளாக மாறிப் போனார்கள். வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் செப்டம்பர் 24-ம் தேதி கண்ணகியின் தந்தை துரைசாமி, அவரது அண்ணன், விருத்தாசலம் காவல் நிலையத்தின் அப்போதைய இன்ஸ்பெக்டர் செல்வமுத்து, எஸ்.ஐ தமிழ்மாறன் உள்ளிட்ட 13 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது சிறப்பு நீதிமன்றம். கண்ணகியின் அண்ணன் மருதபாண்டிக்கு தூக்கு தண்டனையும் அளிக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் நேற்று மாலை வீட்டிலிருந்த முருகேசனின் பெற்றோர்கள் சிலரால் தாக்கப்பட்டு விருத்தாசலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். கொலை செய்யப்பட்ட கண்ணகி குடும்பத்தினரின் தூண்டுதலால்தான் அவர்கள் தோட்டத்தில் வேலை செய்பவர்கள் கொடூரமாக தாக்கியதாகக் குற்றம் சுமத்துகிறர் கொலை செய்யப்பட்ட முருகேசனின் சகோதரர் வேல்முருகன், இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், “என் ரெண்டாவது தம்பி ஒரு வேன் வைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறான்.

கொலை
கொலை

நேற்று ஆயுதபூஜைக்காக அந்த வண்டியை கோயில்ல வச்சி படைக்கறதுக்காக போயிருக்கான். அப்போ பூஜைக்காக வாங்குன பொருளெல்லாம் எடுத்துட்டு வர்றதுக்காக சின்ன தம்பி சுந்தரபாண்டி வீட்டுக்கு போயிருக்கான். அப்போ கண்ணகி குடும்பத்தார்கிட்ட பல வருஷமா பண்ணை கூலிகளா வேலை செய்றவங்க தம்பியை வழிமறிச்சி பிரச்னை பண்ணி இருக்காங்க. அவங்க எல்லாம் எங்க சமுதாயத்தைச் சேர்ந்தவங்கதான்னாலும் மாற்று சமுதாயத்துக்கு ஆதரவானவங்க.

ஆனால் அவங்ககிட்ட தம்பி எதுவும் பேசாம கோயிலுக்கு போயிட்டான். அதுக்கப்புறம் அவங்க எங்க வீட்டுக்குப் போயி “அவங்களை ஜெயில்ல போட்டுட்டு நீங்க சந்தோஷமா சாமி கும்புடுறீங்களா?” அப்படினு கேட்டு அப்பாவை கடுமையா அடிச்சிருக்காங்க. அவர் வாய்லையும், கைலயும் எட்டி உதைச்சிருக்காங்க. அதை தடுக்கப் போன எங்க அம்மாவையும் கடுமையா அடிச்சிப் போட்டுட்டு “உங்க கதையை முடிச்சிடறோம்”னு சொல்லிட்டு போயிருக்காங்க. அதுக்கப்புறம் அவங்களை ஆம்புலன்ஸ்ல கூட்டிக்கிட்டு போயி மருத்துவமனையில சேர்த்திருக்கோம். ஆனால் அடிச்சவங்களை அடையாளம் சொல்லி நேத்தே விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுக்கப் போனோம்.

திருமாவளவன் மீது வழக்கறிஞர் ரத்தினத்தின் குற்றச்சாட்டு: விசிக, முருகேசனின் பெற்றோர்  சொல்வதென்ன?

ஆனால் அப்போ புகாரை வாங்காம காலைல வாங்கனு சொல்லிட்டாங்க. இப்போ வரைக்கும் எங்க புகாரை வாங்காம அலைக்கழிக்கறாங்க. எங்க உசிருக்கு எந்த பாதுகாப்பும் இல்ல. இன்னும் எங்களுக்கு மிரட்டல்கள் வந்துக்கிட்டுதான் இருக்கு. இந்த நேரத்துல போலீஸும் அவங்களுக்கு சாதகமாவே நடந்துக்கறாங்க” என்கின்றார். இது தொடர்பாக விளக்கம் கேட்க கடலூர் மாவட்ட எஸ்.பி சக்தி கணேசனை தொடர்பு கொண்டோம். “இதுவரை எனது கவனத்திற்கு வரவில்லை. உடனே சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரிக்கும்படி கூறுகிறேன்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு