Published:Updated:

‘ஆன்ட்ராய்டு போன் வைத்திருந்ததாக முருகன் மீது வழக்கு!’- முன் விடுதலையைத் தடுக்க சிறைத்துறை சதி?

வேலூர் சிறையில், ராஜீவ் காந்தி கொலைக் கைதி முருகனிடமிருந்து ஆன்ட்ராய்டு செல்போன் கைப்பற்றப்பட்டதாக சிறைத்துறை சொல்கிறது. ஏழு பேரின் முன் விடுதலையைத் தடுப்பதற்காக சதித் திட்டம் நடப்பதாக, சிறைத்துறைமீது பாய்கிறார், முருகனின் வழக்கறிஞர் புகழேந்தி.

முருகன்
முருகன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய நளினி, வேலூர் மத்திய பெண்கள் சிறையிலும் அவரது கணவர் முருகன், மத்திய ஆண்கள் சிறையிலும் 28 ஆண்டுகளாகச் சிறைத்தண்டனையை அனுபவித்துவருகிறார்கள். லண்டனில் தங்கியிருக்கும் மகள் ஹரித்ராவுக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்துவைக்க நளினி-முருகன் தம்பதி விருப்பப்பட்டனர்.

நளினி
நளினி

சிறைத்துறை பரோல் வழங்காததால், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி, ஒரு மாத பரோலில் கடந்த ஜூலை 25-ம் தேதி வெளியே வந்தார் நளினி. சத்துவாச்சாரியில் உள்ள திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணை பொதுச் செயலாளர் சிங்கராயர் வீட்டில் தங்கிய அவர், மகளின் திருமண ஏற்பாடுகளைச் செய்வார் என்றார்கள். ஆனால், லண்டனில் இருக்கும் மகள் இந்தியா வரவில்லை. 

மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகிய நளினிக்கு, ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் மேலும் மூன்று வாரம் பரோல் காலம் நீட்டிக்கப்பட்டது. கடைசி வரை மகள் ஹரித்ரா வராத நிலையில், செப்டம்பர் 15-ம் தேதி பரோல் காலம் முடிந்து சிறைக்குத் திரும்பினார். இந்த நிலையில், மீண்டும் ஒரு மாதம் பரோலில் வெளியில் அனுப்புமாறு கேட்டு சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதியிடம் மனு கொடுத்துள்ளார் நளினி.

சிறைத்துறை டி.ஐ.ஜி ஜெயபாரதி
சிறைத்துறை டி.ஐ.ஜி ஜெயபாரதி

‘‘தன் கணவர் முருகனின் தந்தை, இலங்கையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்காக தமிழகம் வரவிருக்கும் அவருக்கு உதவியாக இருக்க எண்ணுகிறேன். ஒரு மாதம் பரோல் கிடைத்தால் மாமனாரை கவனித்துக்கொள்வேன்’’ என்று கூறியுள்ளார். அந்த மனு பரிசீலனையில் இருக்கும் நிலையில், பரோல் கிடைக்க வாய்ப்பில்லை என்று முன்கூட்டியே தகவல்கள் வருகின்றன.

இதனிடையே, முருகன் இருக்கும் அறையிலிருந்து சிம் கார்டு பொருத்தப்பட்டிருந்த ஆன்ட்ராய்டு செல்போனை பறிமுதல் செய்திருப்பதாக, சிறைத்துறை தரப்பில் காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முருகன் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது. சிறைக்குப் புறம்பான பொருள்களை அறைக்குள் வைத்திருந்ததாக முருகன் மீது ஏற்கெனவே ஒரு வழக்கும் இருந்தது.

முருகன்
முருகன்

இதுபற்றி முருகனின் வழக்கறிஞர் புகழேந்தியிடம் கேட்டதற்கு, ‘‘முன் விடுதலையைத் தடுப்பதற்காக சிறைக்குள் நளினி, முருகனுக்கு எதிராகச் சதி நடக்கிறது. சிறைக் குற்றங்களைச் செய்தவர்களை, முன் விடுதலை செய்ய முடியாது. அதனால்தான் செல்போன், சிம் கார்டு, சார்ஜர், கத்தி, பணம் போன்ற பொருள்களை அறைக்குள் வைத்திருப்பதாகப் பிரச்னையில் சிக்கவைக்கப்பார்க்கிறது சிறைத்துறை. பலத்த பாதுகாப்பை மீறி செல்போனை யார் கொண்டுசென்று கொடுத்திருப்பார்கள். விடுதலை தொடர்பான பேச்சு தீவிரமாக இருக்கும் நிலையில், அதனைத் தடுப்பதற்காக தீவிரமாக சில அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்’’ என்று பாய்கிறார்.