Published:Updated:

ஆவடி: `திருமண அழைப்பிதழ் கொடுப்பதாக வந்த கூலிப்படை!’ - அ.தி.மு.க நிர்வாகிக்குக் கத்திக் குத்து

கொலை செய்ய முயன்ற கூலிப்படையினர்
கொலை செய்ய முயன்ற கூலிப்படையினர்

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே, அ.தி.மு.க பிரமுகர் ஒருவரை நான்கு பேர்கொண்ட கூலிப்படைக் கும்பல் ஒன்று திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்திருப்பதாகக் கூறி அழைத்து, கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (48). இவர் வில்லிவாக்கம் ஒன்றிய அ.தி.மு.க துணை செயலாளராகப் பதவி வகித்துவருகிறார். முன்னாள் கவுன்சிலராகவும் மூர்த்தி இருந்திருக்கிறார். பகுதியில் செல்வாக்கு மிகுந்தவராக அறியப்படும் மூர்த்தி, கட்டப் பஞ்சாயத்து மற்றும் ரியல் எஸ்டேட் வேலைகளில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்பட்டது. நிலம் மற்றும் பஞ்சாயத்து விவகாரங்களைக் கையாண்டுவந்த மூர்த்திக்கு, தொழிலில் எதிரிகள் அதிகளவில் இருந்திருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று மூர்த்தி, அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பிலுள்ள தன் வீட்டின் வெளியில் நின்றுகொண்டு தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது, அவரைக் காண நான்கு இளைஞர்கள் வந்திருக்கிறார்கள். திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக வந்திருப்பதாக மூர்த்தியிடம் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத் தொடங்கியவர்கள், சிறிது நேரத்தில் தாங்கள் மறைத்துவைத்திருந்த கத்திகளை வெளியில் எடுத்து மூர்த்தியைச் சரமாரியாக வெட்டத் தொடங்கியிருக்கிறார்கள். இளைஞர்களின் தாக்குதல்களைச் சற்றும் எதிர்பாராத மூர்த்தி நிலைதடுமாறி விழுந்திருக்கிறார். மேலும், அந்தக் கும்பலிடமிருந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, தப்பித்து பிரதான சாலைக்கு அலறியடித்தபடி ஓடியிருக்கிறார்.

கொலை முயற்சி
கொலை முயற்சி
Representational Image

மூர்த்தியின் அலறல் சத்தம் கேட்டு பகுதிவாசிகள் திரண்டிருக்கிறார்கள். மக்கள் கூட்டம் கூடியதை அடுத்து நான்கு இளைஞர்களில் மூன்று பேர் ஓட்டம் பிடித்துள்ளனர். ஆனால், ஒரு ஆசாமி மட்டும் மூர்த்தியை விடாமல் துரத்தி வெட்டிக் கொலை செய்ய முயன்றிருக்கிறார். அந்த ஆசாமியிடமிருந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக மூர்த்தியும் பதிலுக்குக் கத்தியைப் பிடுங்கி வெட்டியிருக்கிறார். மூர்த்தியைக் கொலை செய்ய வந்த மூவர் ஓட்டம் பிடித்ததை அடுத்து சிக்கிய இளைஞரை மட்டும் பொதுமக்கள் பிடித்து வைத்துக்கொண்டு, திருமுல்லைவாயில் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

அதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் மூர்த்தியை மீட்டு வானகரத்திலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்குச் சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். பிடிபட்ட இளைஞரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

திருமுல்லைவாயில் காவல்நிலையம்
திருமுல்லைவாயில் காவல்நிலையம்

போலீஸார் விசாரணையில், அ.தி.மு.க பிரமுகர் மூர்த்தியைக் கொலை செய்ய முயன்ற நான்கு பேர்கொண்ட கூலிப்படைக் கும்பலில் பிடிபட்ட நபர் பிரபாகரன் என்பது தெரியவந்தது. மேலும், கைதுசெய்யப்பட்ட பிரபாகரன் அளித்த தகவலின் பேரில் அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விஜயசேகர் (23), முத்து (23) மற்றும் ராஜீ (19) ஆகியோரை திருமுல்லைவாயில் போலீஸார் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்குள் புகுந்து கூலிப்படையினர் அ.தி.மு.க பிரமுகரைக் கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு