Published:Updated:

`நாகையில் லாரியில் சிக்கிய ரூ.20 லட்சம் மதிப்புள்ள மதுபானம்!’ - வாக்காளர்களைக் கவர கொண்டுவரப்பட்டதா?

நாகையில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள மது சிக்கியது எப்படி?

பிடிக்கப்பட்ட மதுபானம்
பிடிக்கப்பட்ட மதுபானம்

நாகை மாவட்டத்தில் லாரியில் கடத்தி வந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள மதுபானத்தை நாகை மதுவிலக்குப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

மது
மது

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலிருந்து மதுபானங்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்வதை தடுப்பதற்காக நாகை எஸ்.பி செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலிருந்து லாரியில் மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக நாகை மதுவிலக்குப் பிரிவு போலீஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

இதன்பேரில் போலீஸார் திட்டச்சேரி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தினர். போலீஸாரைக் கண்டதும் டிரைவர் லாரியை நிறுத்தாமல் வேகமாக ஏனங்குடி கடைத்தெரு நோக்கிச் சென்றார். போலீஸார் துரத்தியதும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். பின் தொடர்ந்து சென்ற போலீசஸார் லாரியை சோதனை செய்தனர்.

மது
மது

காரைக்காலிலிருந்து அட்டைப் பெட்டிகளில் கடத்தி வந்த 5,616 லிட்டர் மதுபானம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் மதுபாட்டில்களுடன் லாரியைப் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். பறிமுதல் செய்த மதுபானம், லாரி ஆகியவற்றை நாகை மதுவிலக்கு பிரிவு போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு வந்தனர். இதைப் பார்வையிட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம், வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய கடத்திக் கொண்டு செல்லப்பட்டதா... மதுபானங்கள் எங்கு கடத்திச் செல்லப்படுகிறது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.