Published:Updated:

கைவிரித்த அரசியல் வி.வி.ஐ.பி?! - வெங்கடாசலம் தற்கொலை பின்னணி!

வெங்கடாசலம்
News
வெங்கடாசலம்

தான் நம்பியிருந்த அந்த அரசியல் வி.வி.ஐ.பி-யும் கைவிரித்துவிட்டதால், விரக்தியின் உச்சத்தில் இருந்திருக்கிறாராம் வெங்கடாசலம்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக இருந்த வெங்கடாசலம் திடீரென தற்கொலை செய்துகொண்டிருப்பது, அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கிறது. அவர்மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், நேற்று டிசம்பர் 2-ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் வெங்கடாசலம். அவர் தற்கொலைக்கான பின்னணியில், அரசியல் வி.வி.ஐ.பி-யின் கைவிரிப்பும், லஞ்ச ஒழிப்புத்துறையின் கிடுக்குப்பிடி விசாரணையும் இருந்ததாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்

தமிழக வனத்துறை அதிகாரியாக இருந்த ஏ.வி.வெங்கடாசலம், பணி ஓய்வுக்குப் பிறகு ஜூன் 26, 2019-ல் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போதே, இந்த நியமனம் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்தன. அ.தி.மு.க வி.வி.ஐ.பி ஒருவரின் தூரத்து உறவினர் என்பதாலேயே, அவருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டதாக சச்சரவுகள் வெடித்தன. இதையெல்லாம் சமாளித்து, அ.தி.மு.க ஆட்சியில் கோலோச்சினார் வெங்கடாசலம். ஆனால், மே 2021-ல் ஆட்சி மாறிய பிறகு அவருக்கு நெருக்கடிகள் சூழ்ந்தன. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பொறுப்பிலிருந்து அவரை ராஜினாமா செய்யவைப்பதற்கு தி.மு.க அரசுத் தரப்பிலிருந்து குடைச்சல் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்தச் சம்பவங்கள் குறித்து நம்மிடம் பேசிய மாசுக் கட்டுபாடு வாரிய அதிகாரிகள் சிலர், ``வாரியத்தின் தலைவராக நியமிக்கப்படுபவர்களுக்கு விதிப்படி மூன்றாண்டுகள் பணி வழங்கப்பட வேண்டும். ஆனால், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள ஒரு வழக்கின் காரணமாக, வாரியத் தலைவர் பதவியை ஓராண்டுக்கு மேல் நீட்டித்து வழங்க முடியாத சூழல் நிலவியது. இதனால், ஜூன் 27, 2020-ல் மீண்டும் ஓராண்டுக்குப் பணி நீட்டிப்பு வெங்கடாசலத்துக்கு வழங்கப்பட்டது. இதன்படி, இந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் அவர் பணி முடிந்தது. ஆனால், தனக்கு விதிப்படி மூன்றாண்டுகள் பதவி இருப்பதாகவும், அதற்குரிய அரசாணையை அரசு வெளியிட வேண்டுமென்றும் வெங்கடாசலம் பல மாதங்களாக அரசுத் தரப்பில் கோரிவந்தார். அதற்காக நீதிமன்றப் படியேறவும் அவர் தயாராக இருந்தார்.

கைப்பற்றப்பட்ட பணம்
கைப்பற்றப்பட்ட பணம்

இந்தச் சூழலில் தி.மு.க ஆட்சி அமைந்தவுடன், வெங்கடாசலம் காலகட்டத்தில் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் தடையில்லாச் சான்றுகள், அனுமதி உத்தரவுகளைத் தோண்ட ஆரம்பித்தது லஞ்ச ஒழிப்புத்துறை. இதற்கிடையே, வனத்துறை தொடர்பாக கடந்த ஜூலை 22-ம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு வெங்கடாசலம் அழைக்கப்படவில்லை. ஆனால், மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உறுப்பினர் செயலர் மட்டும் அழைக்கப்பட்டிருந்தார். தனக்குக் குறிவைக்கப்படுவதை உணர்ந்த வெங்கடாசலம், வனத்துறையின் உயர் பொறுப்பிலிருந்த ஓர் உயரதிகாரி மூலமாக, அரசின் கோபப் பார்வையிலிருந்து தப்பிக்க முயன்றார். அந்த உயரதிகாரியின் உறவினர் டெல்லியில் கோலோச்சியதால், அவர் மூலமாக மத்திய அரசின் உதவியையும் நாடினார் வெங்கடாசலம். ஆனால், எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் வெங்கடாசலம் தொடர்புடைய 11 இடங்களில் அதிரடியாகச் சோதனை நடத்தியது லஞ்ச ஒழிப்புத்துறை. இந்தச் சோதனையில், 11 கிலோ தங்கம், நான்கு கிலோ வெள்ளிப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. கணக்கில் வராத சுமார் 10 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடமிருந்து 10 கிலோ சந்தன மரக்கட்டைகள் கைப்பற்றப்பட்டதால், தமிழ்நாடு வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு, வெங்கடாசலம் மீது விசாரணை சூடுபிடித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 60-க்கும் அதிகமான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட தடையில்லாச் சான்றிதழ்களில் முறைகேடு நடந்திருப்பதாகக் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக வெங்கடாசலத்திடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்தபோது, அவர் போதிய ஒத்துழைப்பை வழங்கவில்லை. இதனால், அவரைக் கைதுசெய்து விசாரிக்க அதிகாரிகள் தீவிரமாகினர். கழுத்துக்கு மேல் தண்ணீர் செல்வதை உணர்ந்து பதற்றமான வெங்கடாசலம், சமீபத்தில் தனக்கு வாரியத் தலைவர் பதவியளித்த அ.தி.மு.க வி.வி.ஐ.பி-யிடம் பேசியிருக்கிறார். 'உங்க ஆளுங்க சொல்லித்தானே பல கோப்புகளில் கையெழுத்து போட்டேன். இப்ப, என்னைய கைதுசெய்யப் பார்க்குறாங்க. ரொம்ப அவமானமா இருக்கு' என்றிருக்கிறார்.

அதற்கு அந்த வி.வி.ஐ.பி., 'இந்த விவகாரத்துல என்னால எந்த உதவியும் செய்ய முடியாது. என் தலைக்கு மேலயே கத்தி தொங்கிட்டு இருக்கு. எப்போ, என்னையக் கைது செய்வாங்கனு எனக்கே தெரியலை. இனிமே இது விஷயமா என்கிட்ட எதுவும் கேட்டு வராதீங்க' என்று கைவிரித்துவிட்டார். தான் நம்பியிருந்த அந்த அரசியல் வி.வி.ஐ.பி-யும் கைவிரித்துவிட்டதால், விரக்தியின் உச்சத்தில் இருந்திருக்கிறார் வெங்கடாசலம். இந்தச் சூழலில், நேரில் ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்புத்துறை அவருக்கு சம்மன் அனுப்ப முடிவெடுத்திருந்தது. இதனால், 'கைது செய்யப்படுவோமோ' என்கிற அச்சத்தில் தூக்கிட்டு, தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் வெங்கடாசலம்" என்றனர்.

வெங்கடாசலம்
வெங்கடாசலம்

வெங்கடாசலத்தின் மறைவையொட்டி, மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் நடந்துள்ள முறைகேடுகளுக்கு முழுக்குப்போடும் முயற்சியில் சில அதிகாரிகள் மும்முரமாகியிருக்கின்றனர். அவரின் தற்கொலையை சென்னை பெருநகர காவல்துறை விசாரித்துவரும் நிலையில், மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை லஞ்ச ஒழிப்புத்துறை வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டும். இந்தத் தற்கொலை, வெங்கடாசலம் சார்ந்துள்ளவர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்புதான் என்றாலும், அவரைப் பகடைக்காயாகப் பயன்படுத்தியவர்களும், முறைகேடுகளுக்குத் துணை போனவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென்பதே நேர்மையான அதிகாரிகளின் எதிர்பார்ப்பு.