Published:Updated:

`ஆன் டூட்டி, ரயில்வே; லாரியில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்!'- கனிமவள அதிகாரிகளைப் பதறவைத்த கும்பல்

எம்.கணேஷ்
வீ.சக்தி அருணகிரி

ரயில்வே பணிக்கு மணல் அள்ளுவதாகக் கூறி முறைகேடாக மணல் அள்ளிய கும்பலைக் கைது செய்துள்ளது காவல்துறை.

லாரியில் ரயில்வே பணி என எழுதப்பட்டுள்ளது
லாரியில் ரயில்வே பணி என எழுதப்பட்டுள்ளது

மதுரை - போடி அலக ரயில்பாதை பணிகள் வேகமெடுத்துவரும் சூழலில், மதுரை - தேனி எல்லையான ஆண்டிபட்டி கணவாய் பகுதியில், ரயில்வே பணிக்கு மணல் அள்ளுவதாகக் கூறி முறைகேடாக மணல் அள்ளிய கும்பலைக் கைது செய்துள்ளது காவல்துறை.

பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள்
பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள்

ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் உள்ள மலைப் பாதையில் பணிகள் வேகமாக நடந்துவருகின்றன. அகல ரயில்பாதை என்பதால், மலையைக் குடையும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதே நேரம், டிராக் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. இப்பணிக்காக, குறிப்பிட்ட இடத்தில் கிராவல் மண் அள்ளிக்கொள்ளலாம் என தேனி மாவட்ட கனிமவளத் துறை அனுமதி அளித்திருந்தது. முறையாக அனுமதி பெற்ற இடத்தில் கிராவல் மண் அள்ளாமல், வேறொரு இடத்தில் அதிகமாக மண் அள்ளப்படுவதாக, மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.

அதை அடுத்து ஆண்டிபட்டி போலீஸாரை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்துக்கு விரைந்த கனிமவள அதிகாரிகள், அங்கு நான்கு டிப்பர் லாரிகளில் மணல் அள்ளப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டனர். போலீஸாரைக் கண்டவுடன், அங்கிருந்த சிலர் ஓட்டம் பிடித்தனர். மீதமிருந்தவர்களைப் பிடித்த போலீஸார் அவர்களிடம் விசாரணை செய்தபோது, ``அதிகாரிகள்தான் மண் அள்ளச் சொன்னார்கள். எங்களுக்கு வேற எதுவும் தெரியாது” என்று கூறியுள்ளனர். நான்கு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் கைது செய்யப்பட்டனர். தப்பியோடியவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

ஆண்டிபட்டி காவல்நிலையம்
ஆண்டிபட்டி காவல்நிலையம்

இது தொடர்பாக கனிமவள அதிகாரிகளிடம் பேசியபோது, ``அனுமதி கொடுக்காத இடத்தில் மண் அள்ளியிருக்கிறார்கள். லாரியில் ரயில்வே பணிக்கான அறிவிப்பு பேப்பரை ஒட்டியிருந்தனர். இவர்கள் ரயில் பாதை அமைக்கும் ஒப்பந்ததாரர்களின் ஆள்கள்தானா? அல்லது மோசடிக் கும்பலா? என போலீஸார் விசாரித்துவருகிறார்கள்” என்றனர்.

மதுரை - போடி அகல ரயில்பாதை திட்டமானது, தேனி மக்களின் கனவுத் திட்டம். அதில் முறைகேடுகள் நடக்கிறதா? என ஆய்வு செய்ய வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.