Published:Updated:

`அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக சோதனை; வழக்குகளைச் சந்திக்கத் தயார்!’ - கே.சி.வீரமணி

``சோதனையில் எந்தவிதமான ஆவணமும் கிடைக்கவில்லை. லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இது போன்ற ரெய்டு அச்சுறுத்தல்களைக் கடந்த காலத்திலிருந்தே கடந்துவந்திருக்கிறோம்’’ என்கிறார் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்குச் சொந்தமான 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று விடியற்காலை முதல் நள்ளிரவு 12 மணி வரை அதிரடியாக சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் 34,01,060 ரூபாய் பணம், ரூ.1,80,000 மதிப்பிலான அந்நியச் செலாவணி டாலர், ரோல்ஸ் ராய்ஸ் உட்பட ஒன்பது சொகுசு கார்கள், ஐந்து கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்குகள், சொத்துகள் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், 4.987 கிலோ கிராம் தங்க நகைகள் (அதாவது 623 சவரன்), 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ கிராம் வெள்ளிப் பொருள்கள், வங்கிக் கணக்கு புத்தகங்கள் ஆகியவை கண்டறியப்பட்டு, வழக்குக்குத் தொடர்புடைய பணம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருபதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரபூர்வ தகவல் வெளியிட்டிருந்தது.

கே.சி.வீரமணியின் வீடு
கே.சி.வீரமணியின் வீடு

சோதனை முடிந்த பிறகு ஜோலார்பேட்டையிலுள்ள தனது வீட்டுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த கே.சி.வீரமணி, ``லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் எந்தவிதமான ஆவணமும் கைப்பற்றப்படவில்லை’’ என்று தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் கூறுகையில், ``அமைச்சர்களாக இருந்தவர்களுடைய இல்லம், நிறுவனங்களில் சோதனையிடுவது வரலாற்றில் நடக்கிற நடைமுறைதான். ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக ஐந்து ஒன்றியச் செயலாளர்கள், பல்வேறு நிலை பொறுப்பாளர்களின் இல்லங்களிலும் சோதனை நடத்துவது வரலாற்றில் இல்லை.

உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறோம். இந்தநேரத்தில் இடையூறுகளை ஏற்படுத்துவதற்காகத்தான் சோதனை என்ற பெயரில் ஆளுங்கட்சி இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. எதுவென்றாலும் நீதிமன்றம் வாயிலாக சந்திக்கத் தயாராக இருக்கிறோம். சோதனையில் எந்தவிதமான ஆவணமும் கிடைக்கவில்லை. லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றிருக்கிறார்கள்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள்
பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள்

நீதிமன்றத்தில் தொடுக்கக்கூடிய வழக்குகளையும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். தேர்தல் களமானாலும், நீதிமன்றமானாலும் எந்தவிதத்தில் சந்திக்க வேண்டுமோ... அந்தவிதத்தில் சந்திப்பதற்கும் தயாராக இருக்கிறோம். இது போன்ற ரெய்டு அச்சுறுத்தல்களை கடந்த காலத்திலிருந்தே கடந்துவந்திருக்கிறோம். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் 1972-ல் இந்த இயக்கத்தை உருவாக்கியபோது, நூறுநாள்தான் தாக்குப்பிடிப்பார்கள் என்று சொன்னார்கள். ஆனால், 50 ஆண்டுகளைக் கடக்கக்கூடிய நிலையில், அ.தி.மு.க வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. அம்மா சொன்னதைப்போல் இன்னும் நூறு ஆண்டுகள் இந்த இயக்கத்தை வளர்த்தெடுக்க உறுதுணையாக இருப்போம்’’ என்றார். வீரமணி இப்படிப் பேசியபோது, கூடியிருந்த அ.தி.மு.க தொண்டர்கள் கரகோஷம் எழுப்பினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு