ராமநாதபுரம் மாவட்டம், ராமசாமிபட்டியைச் சேர்ந்தவர் தங்கமணி (45). இவர் நண்பரான சோலை என்பவருக்குச் சொந்தமான இடத்தில் பெருநாழியைச் சேர்ந்த தங்கராஜ் பாண்டியன் என்பவர் 'ஊன்று கல்' நட்டதாகவும், அந்தக் கல்லை உடைத்ததாகக் கூறி தும்முசின்னம்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ், சோலை, ராமசாமிபட்டி தங்கமணி , முஸ்டக்குறிச்சியைச் சேர்ந்த அய்யனார் ஆகியோர் மீது தங்கராஜ் பாண்டியன் எம்.ரெட்டியபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

இந்த வழக்கிலிருந்து தங்கமணி பெயரை நீக்க எம்.ரெட்டியபட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் இராமநாதன் ரூ.30,000 லஞ்சம் பெற்றுக்கொண்டதாகவும், மேலும் பணம் போதவில்லை எனக் கூறி மீண்டும் தங்கமணியிடம் சார்பு ஆய்வாளர் இராமநாதன் பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால், வேறு வழியின்றி தங்கமணி விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறைக்குத் தகவல் அளித்திருக்கிறார்.
அதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீஸார் அறிவுரையின்படி ரசாயனம் தடவிய பணம் ரூ.10,000-ஐ தங்கமணி, சார்பு ஆய்வாளர் இராமநாதனிடம் கொடுத்தார். அப்போது மாறுவேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சார்பு ஆய்வாளர் இராமநாதனைக் கையும் களவுமாகப் பிடித்து கைதுசெய்தனர். மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், சார்பு ஆய்வாளர் இராமநாதனிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
