அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களின் வீடுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் சூழலில், ஒரு அரசு அதிகாரி வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக, அவரின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் வீரமணி, கரூர் விஜயபாஸ்கர், வேலுமணி, புதுக்கோட்டை விஜயபாஸ்கர் உள்ளிட்ட சில முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடியாகச் சோதனை நடத்தி, பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், தற்போது அரசு அதிகாரிகளின் வீடுகளிலும், அவர்களுக்குச் சொந்தமான தொழில் நிறுவனங்களிலும் ரெய்டு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் பவானி. அரசு அதிகாரியான இவர், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வருவாய்த்துறை நீதிமன்றத்தில் சப் கலெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறைக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன.

அதையடுத்து, திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு கண்காணிப்புத் துறை போலீஸார் இன்று காலை முதலே நெல்சன் சாலையில் உள்ள பவானிக்குச் சொந்தமான வீடுகளிலும், லால்குடி அடுத்த வாளாடி பகுதியிலிருக்கும் அவருக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளிட்ட மூன்று இடங்களில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். இதில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த நிலையில், என்ன நடந்தது என்று சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் சிலரிடம் கேட்டோம். ``பவானி திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு சிறப்புத் துணை ஆட்சியராக பணியாற்றிய காலகட்டத்தில், அளவுக்கு அதிகமாகச் சொத்துகளை வாங்கிக் குவித்திருக்கிறார். அதுவும் அவர் உறவினர்கள் மற்றும் அவர்களின் வீட்டில் வேலைப் பார்த்தவர்களின் பெயரிலும் இடங்களை ரிஜிஸ்டர் செய்திருக்கிறார்.

அப்போதைய அ.தி.மு.க ஆட்சியில் முன்னாள் கொறடாவாக இருந்த, மனோகரனின் உறவினர் என்பதால் செல்வாக்கோடு வலம் வந்தார். இப்போது ஆட்சி மாற்றம் நடந்தபிறகு அவருடன் பழகிய அதிகாரிகள் ஆதாரங்களுடன் எங்களுக்குத் தகவல் அனுப்பினார்கள். அதன் அடிப்படையில் விசாரித்து வருகிறோம்" என்றனர்.