Published:Updated:

பள்ளியிலிருந்து வந்த போன் கால்; காணாமல் போன சிசிடிவி வீடியோ! - இறந்த மகளுக்கு நீதிகேட்டுப் போராடும் பெற்றோர்

பள்ளிச் சிறுமியின் மரணத்துக்கு நீதி கேட்டு அவரின் பெற்றோர் கடந்த மூன்று வருடங்களாகப் போராடி வருகின்றனர்.

பிரீத்தியின் பெற்றோர்
பிரீத்தியின் பெற்றோர் ( Twitter/@JanaSenaParty )

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சுகலி ராஜு நாயக் - பார்வதி தேவி தம்பதி. இவர்களுக்கு 10-ம் வகுப்பு படிக்கும் பிரீத்தி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு பள்ளி விடுதி அறையில் பிரீத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆனால், `அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார். எங்கள் மகளுக்கு நீதி வேண்டும்’ என இதுநாள் வரை பிரீத்தியின் பெற்றோர் போராடி வருகின்றனர்.

பிரீத்தி
பிரீத்தி
Twitter

பிரீத்தியின் இறுதி நிமிடங்கள்!

கர்னூல் மாவட்டத்தில் உள்ள கட்டமஞ்சி ராமலிங்க ரெட்டி மேல்நிலைப் பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி, பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார் மாணவி பிரீத்தி. கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி அவர் படித்த பள்ளியிலிருந்து தந்தை ராஜுவுக்கு ஒரு போன்கால் வந்துள்ளது. அதில் உங்கள் பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லை வந்து அழைத்துச் செல்லும்படி பள்ளி நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு பள்ளிக்குச் சென்ற ராஜுவுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. உடல்நிலை சரியில்லை எனக் கூறிய தன் மகள், இறந்த நிலையில் கிடந்துள்ளார். ராஜு பள்ளிக்குச் செல்வதற்கு முன்னதாகவே அங்கு பல போலீஸ்காரர்கள் இருந்துள்ளனர். `வகுப்பு நடக்கும்போது, தனக்கு வயிற்றுவலி உள்ளது. ஓய்வு தேவை எனக் கூறிவிட்டு விடுதிக்குச் சென்றார் பிரீத்தி. அவர் அதிக மன அழுத்தத்திலிருந்ததால் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்’ என பிரீத்தியின் இறப்புக்குப் பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

பிரீத்தியின் பெற்றோர்
பிரீத்தியின் பெற்றோர்
Twitter/@JanaSenaParty

பிரீத்தியின் மரணத்தில் சந்தேகம்!

சிறுமி பிரீத்தி தற்கொலை செய்துகொண்டார் எனப் பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால் அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை, யாரோ அவரைக் கொலை செய்து அதைத் தற்கொலையாக மாற்றியிருக்க வேண்டும் என்று பிரீத்தியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதைக் கொலை என நிரூபிக்கும் வகையில் சில ஆதாரங்களையும் அவர்கள் கூறியுள்ளனர்.

`அவனிடம் பழகாதே; அப்பாவிடம் சொல்லிவிடுவேன்!'- காதலனுடன் சேர்ந்து அம்மாவைக் கொன்ற மகள்

`பிரீத்தி இறப்பதற்கு முந்தைய நாள் எங்களுக்கு போன் செய்து, பள்ளி தாளாளரின் இரு மகன்களும் இரவு நேரத்தில் விடுதிக்கு வந்து தனக்கு பல்வேறு தொல்லை தருவதாகவும், அவர்களின் பேச்சைக் கேட்கத் தவறினால் பள்ளியில் படிக்க முடியாது என மிரட்டுவதாகவும் கூறினாள். இது தொடர்பாக ஆகஸ்ட் 20-ம் தேதி பள்ளி நிர்வாகத்தினரிடம் பேசலாம் என நினைத்தோம். ஆனால், ஆகஸ்ட் 19-ம் தேதியே அவள் இறந்துவிட்டாள்.

பிரீத்தியின் பெற்றோர்
பிரீத்தியின் பெற்றோர்
Twitter/@JanaSenaParty

பிரீத்தி சேலையால் தூக்குப்போட்டு இறந்துள்ளதாக போலீஸாரும், பள்ளி நிர்வாகமும் கூறியது. ஆனால், அவள் கழுத்தில் கயிற்றால் இறுக்கியது போன்ற தடம் உள்ளது. அவள் தற்கொலை செய்துகொள்ளவில்லை. அது கொலை என நாங்கள் கூறியும் பிரீத்தி இறந்த இடத்திலிருந்து எந்தத் தடயத்தையும் போலீஸார் சேகரிக்கவில்லை. மாறாக, வேக வேகமாக அவளின் உடலைப் பள்ளியிலிருந்து அப்புறப்படுத்தி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

பிரீத்தி இறப்பதற்கு முன்னதாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலில் பல்வேறு காயங்கள் இருந்துள்ளன என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பள்ளியின் தாளாளர் மற்றும் அவரின் மகன்கள் மீது புகார் அளித்தோம். அதன்பேரில் அவர்கள் மூவரும் கொலை மற்றும் வன்கொடுமை பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

பிரீத்தியின் பெற்றோர்
பிரீத்தியின் பெற்றோர்
Twitter

ஆனால், அவர்கள் மீது எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விரைவிலேயே அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். எங்கள் மகள் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதற்கான ஆதாரத்தை நாங்கள் சேகரித்த அளவுக் கூட போலீஸார் சேகரிக்கவில்லை. அதிகாரிகள், போலீஸார், அரசு போன்ற அனைவரும் அவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றனர்” என பிரீத்தியின் பெற்றோர் குற்றம்சாட்டினர். இதையடுத்து, தங்கள் மகளின் இறப்புக்கு நீதிகேட்டு பிரீத்தியின் பெற்றோர், சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதனால், பிரீத்தி இறப்பு விவகாரம் 2017-ம் ஆண்டு ஆந்திராவில் விஸ்வரூபம் எடுத்தது.

விசாரணைக் குழு!

போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து ஒரு விசாரணைக் குழுவை அமைத்து பிரீத்தி இறப்பு வழக்கு பற்றி விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க கர்னூல் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். பிரீத்தியின் இறப்பில் பல்வேறு மர்மங்கள் உள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். `பிரீத்தியின் உடலில் உள்ள காயங்கள், உயிரிழந்த நேரம் ஆகிய அனைத்தும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேலும், பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் கூறும் பதில்களும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளது’ என அதிகாரிகள் கூறியிருந்தனர்.

பிரீத்தியின் பெற்றோர்
பிரீத்தியின் பெற்றோர்
Twitter

பின்னர் அந்தப் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்கள், ஊழியர்களுக்கும் ரத்தப்பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பிரீத்தி இறப்பதற்கு முன்னதாக அவர் விடுதி அறைக்குள் செல்லும் சிசிடிவி காட்சிகள் மட்டுமே உள்ளது. அதன் பின்னர் நடந்த சம்பவங்கள் அடங்கிய சிசிடிவி காட்சிகள் காணாமல் போயுள்ளன. அனைத்து விசாரணைகளும் முடிந்த பிறகு, `பிரீத்தி இறப்பதற்கு முன்னதாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்’ என அறிக்கை சமர்ப்பித்தது விசாரணைக் குழு.

மூன்று வருட தொடர் போராட்டம்!

பிரீத்தி இறந்த வழக்கில் அனைத்து ஆதாரங்களும் இருந்தும் குற்றவாளிகளைக் கைது செய்ய போலீஸும் அரசும் மெத்தனம் காட்டி அவர்களுக்கு உதவி செய்வதாக பிரீத்தியின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். தன் மகளின் இறப்புக்குக் காரணமானவர்களுக்குத் தகுந்த தண்டனை வாங்கித் தர வேண்டும் எனக் கடந்த மூன்று வருடங்களாகப் போராட்டம் நடத்திவருகின்றனர்.

பவன் கல்யாண் - பிரீத்தியின் பெற்றோர்
பவன் கல்யாண் - பிரீத்தியின் பெற்றோர்
Twitter/@JanaSenaParty

சமீபத்தில் பிரீத்தியின் பெற்றோர் ஆந்திராவின் ஜனசேனா கட்சித் தலைவரும் நடிகருமாக பவன் கல்யாணை நேரில் சந்தித்து தங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளனர். பிரீத்தி விவகாரம் தற்போது மீண்டும் கவனம் பெற்றுள்ளதை அடுத்து இந்த வழக்கை மீண்டும் எடுத்து புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என அம்மாநில உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணையிலாவது தங்கள் மகளுக்கு நீதி கிடைக்குமா எனக் காத்துக்கொண்டிருக்கின்றனர் பிரீத்தியின் பெற்றோர்.