அரக்கோணம்: ``இரட்டைக் கொலை; அ.தி.மு.க - பா.ம.க காரணம்!" - போராட்டம் அறிவித்தார் திருமாவளவன்

அரக்கோணத்தில், இரண்டு இளைஞர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரக்கோணம் அருகேயுள்ள சோகனூர் காலனியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (20). செம்பேடு காலனியைச் சேர்ந்தவர் சூர்யா (25). நண்பர்களான இருவரும் நேற்று இரவு கௌதம நகர் பகுதியில் 10 பேர் கும்பலால் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டனர். தாக்குதலுக்கு ஆளான மேலும் 3 பேர் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்கள். கொல்லப்பட்ட இளைஞர்களின் உறவினர் மற்றும் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் எதிர் தரப்பினருக்குச் சொந்தமான நெல் மூட்டைகளையும், டிராக்டரையும் தீ வைத்து கொளுத்தினர். பதற்றம் நிலவியதால் உடனடியாக நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, மொத்தம் 8 பேர் குற்றவாளிகளாக சேர்த்துள்ளது காவல்துறை. அவர்களில் மதன், அஜித், புலி, குமார் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவாகவுள்ள மேலும் நான்கு பேரை தீவிரமாகத் தேடி வருகிறார்கள். இந்த நிலையில், இரட்டை கொலையில் அ.தி.மு.க கூட்டணி கட்சிகளின் வாக்கு அரசியல் இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறார். திருமாவளவன் கூறியிருப்பதாவது, ``இந்தப் படுகொலைகளைச் செய்த சாதிவெறியர்கள் மற்றும் மணல் திருடர்களை உடனடியாகக் கைதுசெய்து குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும்.
சம்பவத்தைக் கண்டித்து, ஏப்ரல் 10-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகளின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அ.தி.மு.க-வின் காவேரிப்பாக்கம் மேற்கு ஒன்றியச் செயலாளர் பழனி என்பவர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். திருட்டு மணல் ஏற்றிய வாகனங்கள் தலித் குடியிருப்பின் வழியாக வந்தபோது அங்கிருந்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தற்போது நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வி.சி.க வேட்பாளர் கௌதமசன்னாவுக்கு ஆதரவாக பானைச் சின்னத்துக்கு அந்த கிராம இளைஞர்கள் வாக்குகள் சேகரித்துள்ளனர். அத்துடன், பா.ம.க ஆதரிக்கும் அ.தி.மு.க வேட்பாளரை ஊருக்குள் அனுமதிக்கவில்லை.

இவற்றையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு தேர்தல் சூழலைப் பயன்படுத்தி, பழனியின் மகன்களும் அ.தி.மு.க, பா.ம.க சாதிவெறியர்களும் கூட்டுசேர்ந்து இந்தப் படுகொலையை நடத்தியுள்ளனர். வாக்குப்பதிவு முடிந்ததற்குப் பிறகு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் தலித்துகள் தாக்கப்பட்டுள்ளனர். தோல்வி பயத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் இறங்கியுள்ளனர். காட்டுமன்னார்கோயில், வானூர், திருப்போரூர், கிருஷ்ணகிரி மற்றும் அரியலூர் தொகுதிகளிலும்கூட தலித்துகளுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் நிகழ்ந்துள்ளன. இத்தகைய சூழலில், இதனை வன்மையாகக் கண்டித்துக் குரலெழுப்ப வேண்டுமென அனைத்து சனநாயக சக்திகளையும் அறைகூவி அழைக்கிறோம்’’ என்று கூறியிருக்கிறார்.