மேற்கு வங்க மாநிலத்தில், பள்ளிகளுக்கான ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக மாநில அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, அவர் உதவியாளர் அர்பிதா முகர்ஜி இருவரையும் கடந்த சனிக்கிழமை இரவு அமலாக்கத்துறை அதிகாரிகள் கைதுசெய்தனர். இவர்கள் இருவரையும், அமலாக்கத்துறை அதிகாரிகள் கைதுசெய்வதற்கு முந்தைய நாள், அர்பிதா முகர்ஜி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 21 கோடி ரூபாய் ரொக்கமாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி தன் வீட்டை மினி வங்கியாகப் பயன்படுத்தினார் என்று அமலாக்க இயக்குநரகத்திடம் அர்பிதா முகர்ஜி கூறியதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
அர்பிதா முகர்ஜி, ``பார்த்தா சாட்டர்ஜி, அவருடைய நபர்கள் மட்டுமே நுழைந்த ஒரு அறையில்தான் எல்லாப் பணமும் பதுக்கி வைக்கப்பட்டது. என் வீட்டையும், இன்னொரு பெண்ணின் வீட்டையும் பார்த்தா சாட்டர்ஜி மினி வங்கியாகப் பயன்படுத்தினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அது மட்டுமல்லாமல் பணத்தை எப்போதும் மற்றவர்கள்தான் கொண்டு வருவார்கள். அந்த அறையில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது பற்றி அமைச்சர் ஒருபோதும் என்னிடம் கூறியதில்லை" என்று அமலாக்கத்துறையிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
பார்த்தா சாட்டர்ஜி, வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை விசாரணை ஆணையத்தின் காவலில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அர்பிதா முகர்ஜி கூறியதாக இத்தகைய செய்தி வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.