Published:Updated:

தேசத்தை உலுக்கிய பில்கிஸ் பானோ வழக்கில் 11 குற்றவாளிகளும் விடுதலை - எதிர்ப்பு வலுப்பது ஏன்?!

பில்கிஸ் பானோ - Bilkis Bano

குஜராத் மாநிலத்தில் பில்கிஸ் பானோ என்கிற பெண்ணின் குடும்பத்தாரைக் கொலை செய்த வழக்கில் சிறையில் உள்ள 11 குற்றவாளிகள் விடுதலையாகியுள்ளனர். இந்த வழக்கின் பின்னணி என்ன?

தேசத்தை உலுக்கிய பில்கிஸ் பானோ வழக்கில் 11 குற்றவாளிகளும் விடுதலை - எதிர்ப்பு வலுப்பது ஏன்?!

குஜராத் மாநிலத்தில் பில்கிஸ் பானோ என்கிற பெண்ணின் குடும்பத்தாரைக் கொலை செய்த வழக்கில் சிறையில் உள்ள 11 குற்றவாளிகள் விடுதலையாகியுள்ளனர். இந்த வழக்கின் பின்னணி என்ன?

Published:Updated:
பில்கிஸ் பானோ - Bilkis Bano

2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தை `இந்தியாவின் கறுப்புப் பக்கம்’ என்றே சொல்லலாம். குஜராத்தில் 2002-ம் ஆண்டில் கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்தில் 59 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தையடுத்து, குஜராத்தில் பெரும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தேறின. 700-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களும், 250-க்கும் மேற்பட்ட இந்துக்களும் உயிரிழந்தனர். 200-க்கும் அதிகமானோர் காணாமல்போயிருக்கிறார்கள். 2,500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

குஜராத் கலவரம்
குஜராத் கலவரம்

வகுப்புவாத கலவரத்தில், மார்ச் 3-ம் தேதி ரன்திக்பூரைச் சேர்ந்த பில்கிஸ் பானோவையும், அவரின் குடும்பத்தினரையும் ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களால் தாக்கியது. இந்தத் தாக்குதல் சம்பவம் நடக்கும்போது பில்கிஸ் பானோ ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார், அந்தக் கலவரக்காரர்கள் பில்கிஸ் பானுவைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அவர் கண்ணுக்கு முன்பாகவே அவரின் மூன்று வயதுக் குழந்தை அடித்துக் கொலைசெய்யப்பட்டது. அந்தத் தாக்குதலில் இரண்டு நாள் பச்சிளம் குழந்தை உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தச் சம்பவத்தின்போது பில்கிஸ் பானோ மட்டும் அங்கிருந்து உயிர் தப்பினார். யாரும் கற்பனையில்கூட நினைத்துப் பார்க்க முடியாத கொடூரம் அன்று நடந்திருந்தது. தனக்கும், தன் குடும்ப உறுப்பினர்களுக்கும் நடந்த கொடுமைக்கு எதிராக பில்கிஸ் பானோ சட்டப் போராட்டம் நடத்தத் தொடங்கினர். பல்வேறு தடைகளையும் தாண்டி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவந்தது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உதவியோடு, பில்கிஸ் பானோவின் வழக்கு குஜராத்திலிருந்து மகாராஷ்டிராவுக்கு மாற்றப்பட்டது.

பில்கிஸ் பானோ - Bilkis Bano
பில்கிஸ் பானோ - Bilkis Bano

மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் 2008-ம் ஆண்டு, ஜனவரி 21-ம் தேதி, இந்த வழக்கு தொடர்பாகக் கொலையாளிகள், போலீஸார், மருத்துவர்கள் உள்ளிட்ட 11 பேர் குற்றவாளிகள் எனறு கூறி ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோவுக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடும், அரசு வேலையும், பாதுகாப்பான வீடும் குஜராத் அரசு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில், குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட 11 பேரையும் குஜராத் அரசு கருணை அடிப்படையில் விடுதலை செய்திருப்பது இந்தியா முழுவதும் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.

சிறையிலிருந்து வெளியில் வந்தவர்களை, ஆரத்தி எடுத்து, மாலை அணிவித்து இனிப்பு வழங்கிக் கொண்டாடிவருகிறார்கள். சிறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்துவரும் 11 பேரில் ஒருவர் குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி, தங்களின் தண்டனையை ரத்து செய்யுமாறு குஜராத் உயர் நீதிமன்றத்திடம் மனு அளித்திருந்தார். இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சம்பவம் நடந்தது குஜராத்தில், இது குறித்து குஜராத் அரசு முடிவு செய்யலாம் என்று தெரிவித்தது.

விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகள்
விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகள்

இதையடுத்து, குஜராத் மாநில அரசு, பஞ்சமால் மாவட்ட ஆட்சியர் சுஜால் மயாத்ரா தலைமையில் குழு அமைத்து குற்றவாளிகளின் மனுவை விசாரிக்க உத்தரவு பிறப்பித்தது. இந்தக் குழு ஒருமனதாக 11 குற்றவாளிகளையும் விடுவிக்க முடிவெடுத்தது. அதன் அடிப்படையில், குற்றவாளிகள் அனைவருக்கும் கருணையின் அடிப்படையில் தண்டனைக் காலம் முடியும் முன்பாகவே விடுதலை வழங்கப்பட்டது என்று அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த விடுதலை தொடர்பாகப் பேசிய பில்கிஸ் பானோ தரப்பு வழக்கறிஞர், ``இப்படி ஒரு முடிவை அரசு எடுக்கும்போது பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் நம்பிக்கையை இழக்கிறார்கள். உச்ச நீதிமன்றம், மாநில அரசின் முடிவைக் கேட்கும்போது, அவர்களுக்கு எதிராக அரசு முடிவெடுத்திருக்க வேண்டும்" என்று கருத்து தெரிவித்திருந்தார்.

குற்றவாளிகளுக்கு வரவேற்பு
குற்றவாளிகளுக்கு வரவேற்பு
Durairaj G

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், `` குஜராத் அரசின் செயல் நாட்டின் மனசாட்சிக்குவிடப்பட்ட சவால். கொடுங்குற்றவாளிகளை விடுதலை செய்திருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு மிக வன்மையாகக் கண்டிக்கிறது. குஜராத் அரசின் இந்தக் கொடுஞ்செயலை அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு தங்களது கண்டனக் குரலை எழுப்ப முன்வரவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

11 பேர் விடுதலை தொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ``ஐந்து மாத கர்ப்பிணிப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து மூன்று வயது சிறுமியைக் கொன்றவர்கள், சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழாவின்போது விடுதலையாகியிருக்கிறார்கள். பெண் சக்தி பற்றிப் பொய் பேசுபவர்களால் நாட்டுப் பெண்களுக்கு என்ன செய்தி கொடுக்கப்படுகிறது... பிரதமர் அவர்களே, உங்கள் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தை ஒட்டுமொத்த நாடும் பார்க்கிறது" என்று கருத்து தெரிவித்திருந்தார்.

பிறந்து சில தினங்களேயான பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை கொடூரமாகக் கொலை செய்த வழக்கிலும், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கிலும் குற்றவாளிகள் என்று நிரூபணமாகி 15 ஆண்டுகளாகச் சிறையிலிருந்தவர்களை கருணை அடிப்படையில் குஜராத் அரசு விடுதலை செய்திருக்கும் சம்பவத்துக்கு இந்தியா முழுவதும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கண்டனங்களைப் பதிவுசெய்துவருகிறார்கள்.