Published:Updated:

தொடரும் ஆன்லைன் சூதாட்ட மரணங்கள்... தடைச் சட்டம் கொண்டுவருவதில் தாமதம் ஏன்?

ஆன்லைன் ரம்மி

ஆன்லைன் ரம்மி விளையாட்டு காரணமாகத் தற்கொலைகள் அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றன. இந்த விளையாட்டுக்குத் தடைச் சட்டம் கொண்டுவருவதில் தாமதத்துக்கான காரணம் என்ன?

தொடரும் ஆன்லைன் சூதாட்ட மரணங்கள்... தடைச் சட்டம் கொண்டுவருவதில் தாமதம் ஏன்?

ஆன்லைன் ரம்மி விளையாட்டு காரணமாகத் தற்கொலைகள் அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றன. இந்த விளையாட்டுக்குத் தடைச் சட்டம் கொண்டுவருவதில் தாமதத்துக்கான காரணம் என்ன?

Published:Updated:
ஆன்லைன் ரம்மி

அதிகரிக்கும் தற்கொலை:

சென்னை மணலி புதுநகர் பகுதியைச் சேர்ந்த தம்பதி பாக்கியராஜ், பவானி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். பவானி கந்தன்சாவடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவர் வேலைக்கு ரயிலில் செல்லும்போது ஆன்லைன் ரம்மி விளையாடத் தொடங்கியிருக்கிறார். ஒரு கட்டத்தில் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி தனது சகோதரர்களிடமிருந்து 3 லட்சம் ரூபாய்க் கடன் வாங்கி விளையாடியுள்ளார். அதோடு, 20 சவரன் நகைகளை விற்று விளையாடியுள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட பவானி
தற்கொலை செய்துகொண்ட பவானி

மேலும், பவானி பல இடங்களில் கடன் பெற்றுத் தொடர்ந்து விளையாடியிருக்கிறார். கடன்சுமை அதிகரித்ததால் கடுமையான மனஉளைச்சலிலிருந்த பவானி நேற்று (05.06.22) தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். சம்பவமறிந்து வந்த மணலி புறநகர்ப் பகுதி காவல்துறையினர் பவானியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தத் தற்கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறார்கள் காவல்துறையினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொடரும் சோகம்:

கடந்த பிப்ரவரி மாதம், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகிலுள்ள வேப்பலோடை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பிரகாஷ் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடியிருக்கிறார். நேர்காணல் செல்ல வேண்டும், கோர்ஸ் படிக்க வேண்டும் என்று தொடர்ந்து வீட்டில் பணம் பெற்றுள்ளார். மேலும், அவர் பகுதி நேரமாக வேலைக்குச் சென்ற பணத்தையும் வீட்டில் கொடுக்கவில்லை. மொத்தமாக மூன்று லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்திருக்கிறார். தற்கொலை செய்துகொண்ட அன்று வீட்டில் பத்தாயிரம் ரூபாய் கேட்டிருக்கிறார். பெற்றோர் பணம் தராத விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

தற்கொலை செய்துகொண்ட பிரபு
தற்கொலை செய்துகொண்ட பிரபு

கடந்த ஏப்ரல் மாதம் சென்னை போரூர் விக்னேஸ்வரா நகர்ப் பகுதியில் வசித்துவரும் பிரபு என்பவர் தற்கொலை செய்துகொண்டார். இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பிரபு மொத்தமாக 35 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகக் கடன் பெற்று ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார். கடன் தொல்லை காரணமாகவும், கடுமையான மன உளைச்சல் காரணமாகவும் அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுபோல, தமிழகம் முழுவதும் பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டேதான் இருக்கின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தடை சட்டம்:

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களினால் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டது. இதனால், கடந்த 2020-ம் ஆண்டு அன்றைய அதிமுக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு அவசர தடை சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கானது தலைமை நீதிபதிகள் சஞ்சீவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கின் இரண்டு தரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கேட்டறிந்தனர்.

சென்னை உயர்நீதி மன்றம்
சென்னை உயர்நீதி மன்றம்

அப்போது பேசிய நீதிபதிகள், `` இந்த சட்டம் நிறைவேற்றும்போது, ஆன்லைன் விளையாட்டைத் தடை செய்ததற்கான போதுமான காரணங்கள் கூறப்படவில்லை. தமிழக அரசு சட்டம் கொண்டுவந்தது, சட்டத்துக்கு விரோதமானது. சரியான விதிகள் இல்லாது ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை விதிக்க முடியாது. மேலும், ஆன்லைன் விளையாட்டுகளுக்கான விதிமுறைகளை உருவாக்கி புதிய சட்டம் கொண்டுவர எந்த தடையும் கிடையாது" என்று கூறி தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்தை ரத்து செய்தது.

ஒருவருடமாக அரசு செய்யாதது ஏன்?

திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகியும் இன்னும் தடை சட்டம் எதுவும் கொண்டுவரப்படவில்லை. இதுகுறித்து அதிமுக வழக்கறிஞரணி இணைச் செயலாளர் இன்பதுரையிடம் பேசினோம். ``அதிமுக கொண்டுவந்த ஆன்லைன் சூதாட்ட தடைக்கு எதிரான வழக்கில், ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சார்பில் இந்தியாவின் முக்கிய வழக்கறிஞர்கள் பலரும் வாதாடினார்கள். திமுக ஆட்சி அமைந்து ஒரு ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிராக எந்த சட்டமும் நிறைவேற்றப்படவில்லை. இந்த ஒரு வருடத்தில் மட்டும் எத்தனை தற்கொலைகள் நடந்துள்ளன. மக்களுக்கான சட்ட மசோதா எதிலுமே திமுக அக்கறை காட்டாது. அதுவே தங்களுக்குத் தேவை என்றால் அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளும். உதாரணமாக, கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் பதவிக்காலத்தைக் குறைத்து, தங்களின் ஆதரவாளர்களை பணியமர்த்த வேண்டும் என்று முனைப்புக் காட்டிவருகிறது.

இன்பதுரை
இன்பதுரை

இதற்காகக் கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் பதவிக்காலத்தைக் குறைத்து சட்டம் நிறைவேற்றி, அதற்கு ஆளுநர் ஒப்புதலைப் பெறத் தொடர்ந்து முயற்சி செய்கிறது. ஜல்லிக்கட்டு மத்திய, மாநில அரசின் இணக்கப் பட்டியல் இருக்கின்றது. அப்படி இருக்கும்போது ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மாநில அரசு சட்டம் நிறைவேற்றினால் அதற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெறவேண்டும். அந்த ஒப்புதலை அன்றைய திமுக ஆட்சி பெறவில்லை. அதனால்தான், ஜல்லிக்கட்டு தடை, போராட்டம் என்று எல்லாமே நடந்தது. அந்த சமயத்தில், அதிமுக-தான் புதிய சட்டம் கொண்டுவந்து ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால், இந்த ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக இதுவரை புதிய சட்டம் ஏன் நிறைவேற்றப்படவில்லை. அதற்குத் தடையாக இருப்பது எது? பொதுமக்கள் பாதிக்கப்படும்போது உடனடியாக சட்டம் இயற்றப்படவேண்டியது அவசியம். அதனை ஏன் திமுக செய்யவில்லை?" என்று பேசினார்.

அரசு உறுதியாக உள்ளது:

கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தனது முகநூல் பக்கத்தில் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மோசடி நடைபெறுகிறது. முதலில் வெற்றிபெறுவது போல ஆசையைத் தூண்டி, பின்பு எல்லா பணத்தையும் இழக்கும் நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. தங்களுக்குப் பிடித்த நடிகர்கள் விளம்பரங்களில் வருவதைப் பார்த்து ஏமாறவேண்டாம். இது ஆன்லைன் ரம்மி இல்லை, மோசடி ரம்மி விளையாட்டு. தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடும் நபர்களுக்கு அவமானம், குடும்ப பிரச்னை, தற்கொலை செய்துகொள்ளும் நிலை உருவாகும்" என்று பேசி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

கடந்த சில தினங்களுக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ``கடந்த அதிமுக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய்யக் கொண்டுவரப்பட்ட சட்டம் வளமானதாக இல்லை. அவசரகதியில் சட்டம் கொண்டுவரப்பட்டதால் அந்த சட்டம் நீக்கப்பட்டுள்ளது. நடந்துவரும் திமுக ஆட்சியில் உறுதியான சட்டமாகக் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறது. ஆன்லைன் சூதாட்டங்களை ஒழிக்கவேண்டும் என்பதில் இந்த அரசு மிக உறுதியாக உள்ளது" என்று பேசினார்.

இன்னும் எத்தனை உயிர்கள்:

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ``தமிழகம் முழுவதும் அனைத்து பத்திரிகையிலும் இன்று முழு முதற்பக்க ஆன்லைன் ரம்மி விளம்பரம் வருகிறது. காவல்துறை டிஜிபி-யே ஆன்லைன் ரம்மி அல்ல அது ஆன்லைன் மோசடி, உங்கள் உயிரைக் கொல்லலாம் என வெளிப்படையாக எச்சரிக்கும் நிலையிலும் கூட, இந்த உயிர்க்கொல்லி ஆன்லைன் சூதாட்டங்களைத் தடைசெய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்? யாருடைய அழுத்தத்தால் இந்த தயக்கம்? இன்னும் எத்தனை உயிர்களைத் தெரிந்தே கொல்லப்போகிறது இந்த ஆன்லைன் சூதாட்டம்?" என்று தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.

வழக்கறிஞர் கண்ணதாசன்
வழக்கறிஞர் கண்ணதாசன்

அரசும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்படுகிறதா என்ற அச்சம் மக்களிடத்தில் எழுந்துள்ளது என்று எடப்பாடி குற்றச்சாட்டு வைத்துள்ள நிலையில், இதுகுறித்து திமுக செய்தித் தொடர்பாளர், வழக்கறிஞர் கண்ணதாசனிடம் பேசினோம். ``நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு போடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், சட்டப்படி மட்டுமே இந்த விவகாரத்தை அணுகவேண்டிய நிலை உள்ளது. நீட் விலக்கு விவகாரம் முதல் ஏழு பேர் விடுதலை வரை பல்வேறு வழக்குகளில் அதிமுக அரசு சட்டங்களை இயற்ற தெரியாமல் செய்ததன் விளைவாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் தவறு செய்துவிட்டு இப்போது திமுகவைக் குற்றம் சொல்லி மலிவான அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆன்லைன் சூதாட்டங்களை அடியோடு ஒழிக்கவேண்டும் என்பதில் திமுக மிக உறுதியாக இருக்கிறது" என்று பேசினார்.

இன்னொரு அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களைப் பாதுகாக்கவேண்டியது அரசின் கடமை. அதனை செய்யுமா அரசு?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism