Published:Updated:

சசிகலாவிடம் விசாரணை... எதை நோக்கிச் செல்கிறது கொடநாடு வழக்கு?!

கொடநாடு வழக்கு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. சசிகலாவிடம் தனிப்படைப் போலீஸார் சுமார் 6 மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியுள்ளனர்.

சசிகலாவிடம் விசாரணை... எதை நோக்கிச் செல்கிறது கொடநாடு வழக்கு?!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. சசிகலாவிடம் தனிப்படைப் போலீஸார் சுமார் 6 மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியுள்ளனர்.

Published:Updated:
கொடநாடு வழக்கு

கொலை - கொள்ளை

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் வழக்கு கடந்துவந்தப் பாதைக் குறித்தும், அதன் வழக்கு விசாரணை எதை நோக்கிச் செல்கிறது? என்பது குறித்தும் உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்தோம். ``ஜெயலலிதா 2016 டிசம்பர் 5-ம் தேதி மறைந்ததும், சசிகலா பொதுச்செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டார். தொடர்ந்து, முதல்வராக அமரும் நேரத்தில், ஓ.பி.எஸ் தர்மயுத்தம் தொடங்கியதால், கட்சி பிளவுபட்டது... சின்னமும் முடக்கப்பட்டது. இருந்தபோதும், 122 எம்.எல்.ஏ-க்களை கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் தங்கவைத்து, அங்கேயே அ.தி.மு.க சட்டமன்றக் கட்சித் தலைவராக அதாவது முதல்வராக எடப்பாடி பழனிசாமியைத் தேர்வுசெய்ய வைத்துவிட்டு, 2017 பிப்ரவரி 14-ம் தேதி சிறை சென்றார் சசிகலா. முதல்வராகப் பொறுப்பேற்றதும் 2017 பிப்ரவரி 22-ம் தேதி சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தார் எடப்பாடி. அதன்பிறகு, சரியாக இரு மாதங்கள் கழித்து ஏப்ரல் 24-ம் தேதி ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. காவலாளியான ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு, பங்களாவில் இருந்த பணம், பொருள்கள் மற்றும் பல ஆவணங்கள் காணாமல் போயின.

கொடநாடு காவலாளி ஓம்பகதூர் கொலை..
கொடநாடு காவலாளி ஓம்பகதூர் கொலை..

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேத்யூ மூலம் கிளம்பிய பூதம்!

தெஹல்கா புலனாய்வு இதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ என்பவர் கொடநாடு வழக்குக் குறித்து புலனாய்வு செய்து, அதன் விவரங்களைப் பேட்டியாக டெல்லியில் கொடுத்திருந்தார். அப்போது, ‘அ.தி.மு.க அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் எங்கெல்லாம், எவ்வளவு சொத்து சேர்த்து வைத்துள்ளனர் என்பதற்கான ஆதாரங்களைக் கைப்பற்றவே முதல்வர் எடப்பாடி இந்த கொள்ளை நாடகத்தை அரங்கேற்றினார். அந்த ஆவணங்களை வைத்துக்கொண்டே ஓ.பி.எஸ் உள்ளிட்ட அத்தனை அமைச்சர்களையும் கைக்குள் வைத்திருக்கிறார்’ என்று குண்டைத்தூக்கிப்போட்டார் மேத்யூ.

தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ
தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தூசுதட்டப்பட்ட வழக்கு

எனினும், அ.தி.மு.க ஆட்சி இருந்ததால், முதல்வராக எடப்பாடியார் பதவி வகித்ததால், கொடநாடு வழக்கு நீலகிரி காவல்துறை பரண் மீது வைக்கப்பட்டது. தி.மு.க ஆட்சி அமைந்ததும், எடப்பாடியைக் கார்னர் செய்வதற்காகவே மீண்டும் கொடநாடு வழக்குத் தூசுதட்டப்பட்டது. ‘என்னை கொடநாடு வழக்கில் சிக்கவைக்க தி.மு.க அரசு முயல்கிறது’ என்று எடப்பாடியே இதுபற்றிப் பேட்டிகொடுத்தார். இருப்பினும், தொடர்ந்து விசாரணை சென்றுகொண்டிருந்த நேரம் சிலகாலம் பல்வேறு விவகாரங்களால் கொடநாடு வழக்கு மக்களாலும், ஊடகங்களாலும் மறக்கப்பட்டது.

கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், ஜெயா தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான விவேக் ஜெயராமன், அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, அவர் மகன் அசோக், தம்பி மகன் பாலாஜி, உதவியாளர் நாரயணன், அ.தி.மு.க பிரமுகர் அனுபவ் ரவி உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தினர். இவ்வழக்கு தொடர்பாக இதுவரை 200-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

கொடநாடு வழக்கு
கொடநாடு வழக்கு

சசிகலாவிடம் விசாரணை!

ஜெயலலிதா எப்போது கொடநாடு சென்றாலும் உடன் சசிகலாவும் சென்றதாலும், பங்களா சசிகலாவின் கன்ட்ரோலில் இருந்ததாலும், இவ்வழக்குக் குறித்து சசிகலாவிடம் விசாரணை நடத்தப் போலீஸார் முடிவுசெய்தனர். அதன்படி, இன்று ஏப்ரல் 21-ம் தேதி தனிப்படைப் போ.நகர் இல்லத்தில் வைத்து விசாரத்தினர். மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராகவ், விசாரணை அதிகாரியும், கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளருமாகிய கிருஷ்ணமூர்த்தி, துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகர், துணை காவல் கண்காணிப்பாளர் ரேங்கில் இருக்கும் இரண்டு பெண் போலீஸார், குற்றப்பிரிவு எழுத்தர் ஆகியோர் சசிகலாவிடம் விசாரணை மேற்கொண்டனர். சசிகலாவின் பதிலை பதிவேற்றுவதற்காக டைப்பிஸ்ட் ஒருவரும், விசாரணையை படம் பிடிப்பதற்காக வீடியோகிராஃபர் ஒருவரும் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர்.

சசிகலா
சசிகலா

கேட்கப்பட்டக் கேள்விகள் என்னென்ன?

சசிகலாவிடம் கேட்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்டக் கேள்விகளை தனிப்படைப் போலீஸார் தொகுத்து வைத்திருந்தனர். அதில், 50-க்கும் மேற்பட்டக் கேள்விகள் இன்று கேட்கப்பட்டதாம். முக்கியமாகப் பார்க்கப்போனால், கொள்ளை சம்பவம் நடப்பதற்கு முன்பாக கொடநாடு பங்களாவில் என்னென்ன ஆவணங்கள் இருந்தன என்பதுதான் முதல் கேள்வியாக இருந்தது என்கிறார்கள். பணம் ரொக்கமாக எவ்வளவு இருந்தது? நகைகள் எத்தனை பவுன் பங்களாவில் இருப்பில் இருந்தது? போன்ற கேள்விகளும் கேட்கப்பட்டிருக்கிறது. கொடநாட்டில் இருந்த சசிகலா தொடர்பான சொத்துகள் குறித்த ஆவணங்கள், சென்னை சி.ஐ.டி நகரிலுள்ள சர்வீஸ் அப்பார்ட்மென்டில் வருமான வரித்துறையால் கண்டெடுக்கப்பட்டன. அதைக்கொண்டுதான் சசிகலா தொடர்பான 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டன. அந்த ஆவணத்தின் உண்மைத்தன்மை, அது எப்படி சென்னையில் கிடைக்கப்பெற்றது? இன்னும் வேறு என்னென்ன ஆவணங்கள் இருந்தன? போன்ற கேள்விகளும் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது.

கொடநாடு பங்களாவில் ஊழியர்கள் எத்தனை பேர் பணியாற்றினர் என்பது குறித்தும், அந்த ஊழியர்கள் எல்லாம் எந்த நிறுவனம் மூலம் அல்லது யார் மூலம் பணியமர்த்தப்பட்டனர்? என்பது குறித்தும் கேள்விகள் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது குறித்து சிறையிலிருந்த உங்களுக்கு எப்படி, யார் மூலம், எப்போது தெரியவந்தது? போன்ற கேள்விகளும் இடம்பெற்றிருந்திருக்கின்றன. இதற்கு முன்பு விசாரிக்கப்பட்ட கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் பெறப்பட்ட வாக்குமூலம் தொடர்பாகவும் சசிகலாவிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

மேற்குறிப்பிட்ட கேள்விகள் போலீஸாரால் லேசாகக் கசியவிடப்பட்டவை. கேள்விகள் ஆயிரமிருந்தாலும், பதில்தானே முக்கியம்! அந்த வகையில் சசிகலாவின் பதில்கள் திருப்திகரமாக இல்லை என்பதுதான் போலீஸாரின் எண்ணமாக இருக்கிறது. பெரும்பாலானக் கேள்விகளுக்கு தெரியாது... நியாபகமில்லை... என்றுதான் சசிகலா பதிலளித்ததாகச் சொல்லப்படுகிறது. சசிகலாவை

கொடநாடு எஸ்டேட் பங்களா
கொடநாடு எஸ்டேட் பங்களா

வழக்கு செல்லும் பாதை!

கொடநாடு வழக்கில் எடப்பாடியைச் சிக்கவைக்க வேண்டும் என்பதுதான் ஆட்சியாளர்களின் எண்ணம். அதற்கான மூவ்கள்தான் நடந்துவருகின்றன. எடப்பாடிக்கு எதிராக ஆணித்தனமான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே கைது வரை செல்ல முடியும். எனினும், தி.மு.க அரசுக்கு எடப்பாடியைக் கைதுசெய்ய வேண்டும் என்பது எண்ணமல்ல என்றபோதும், சிக்கவைத்து பெயரை டேமேஜ் செய்து, கட்சியை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்பதுதான் மெயின் மோட்டிவ்!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

சிறையிலிருந்து விடுதலையானதிலிருந்து அ.தி.மு.க-வில் ஐக்கியமாக சசிகலா பகீரத பிரயத்தனம் செய்துவருகிறார். பிரதமர் மோடியின் ஆதரவு இருப்பதால், எடப்பாடி மட்டும் இதுவரை அதற்குச் செவிசாய்க்கவில்லை. கட்சியை வழிநடத்திச் செல்லும் தலைவராக எடப்பாடி இருப்பதால், வேறு வழியின்றி முன்னாள் அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும், நிர்வாகிகளும் அவருக்கு ஆதரவு அளித்துவருகிறார்கள். சசிகலாவுக்கு அ.தி.மு.க-வில் இணைய இன்றை சூழலில் எடப்பாடி மட்டுமே எதிர்ப்பு என்றாகிவிட்டது. அதனால், தன்னை விரட்டிக்கொண்டிருக்கும் எடப்பாடிக்குத் தக்க பதிலடிக் கொடுக்க சசிகலா விருப்பப்படுவார் என்பதாலேயே கொடநாடு வழக்குக் குறித்து சசிகலாவிடம் விசாரணை நடத்துகிறார்கள். சசிகலா நேரடியாக எடப்பாடியைக் குற்றம் சொல்ல முடியாதபோதும், அவர் சொல்லும் சில பதில்கள் எடப்பாடிக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடியவையாக இருக்காதா... என போலீஸார் துருவித்துருவி விசாரித்தனர்.

சசிகலா - எடப்பாடி பழனிசாமி
சசிகலா - எடப்பாடி பழனிசாமி

இன்றைய விசாரணையில் எடப்பாடிக்கு எதிராக எந்த ஒரு ஸ்ட்ராங்க் ஸ்டேட்மென்ட்டும் கிடைக்காததால், நாளை ஏப்ரல் 22-ம் தேதியும் விசாரணையைத் தொடர முடிவெடுத்துள்ளனர். தன்னை அரசியலில் இருந்தே அகற்ற முயலும் எடப்பாடிக்கு செக் வைக்க விரும்பினால், சசிகலாவுக்கு இதுதான் சரியான சான்ஸ்! இதைப் பகடைக்காயாக வைத்தே, அ.தி.மு.க-வுக்குள் சசிகலா என்ட்ரி கொடுக்க எடப்பாடியிடம் டீலிங் பேசவும் வாய்ப்புகள் இருக்கின்றன" என்பதோடு முடித்துக்கொண்டார் அந்த உளவுத்துறை அதிகாரி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism