Published:Updated:

`வெள்ளை நிற எஸ்யூவி; கேமராவுக்கு ஸ்ப்ரே!’ - புனேவை அச்சுறுத்தும் ஏடிஎம் கொள்ளையர்கள்

Representation Image
Representation Image

புனேவில் ஏடிஎம் இயந்திரத்தை வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

புனேவில் ஏடிஎம் கொள்ளையர்களின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏடிஎம் மையத்துக்குள் நுழையும் கொள்ளையர்கள் இயந்திரங்களை அப்படியே பெயர்த்து எடுத்துச் செல்கின்றனர். நவம்பர் மாதத்தில் இரண்டு ஏடிஎம் இயந்திரம் திருடிச் சென்றதில் சுமார் 30 லட்சம் அளவிலான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு மேலும் ஒரு ஏடிஎம் மையத்தில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இதற்கு முன்பு நடந்த சம்பவங்களில் கேஸ் கட்டர்களைக் கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துள்ளனர். ஆனால், இந்தமுறை வேறுவிதமாக நடந்துள்ளது.

சிசிடிவி கேமரா
சிசிடிவி கேமரா

நாட்டில் உள்ள அனைத்து ஏடிஎம் மையங்களிலும் ஒரே மாதிரியாக பணம் நிரப்பப்படுவதில்லை. நகர்ப்புறங்கள், கிராமப்புறப் பகுதிகளைப் பொறுத்து இது வேறுபடும். நகர்ப்புறங்களில் உள்ள ஏடிஎம் மையங்களில் பாதுகாப்பு பணியில் செக்யூரிட்டிகள் ஈடுபடுகின்றனர். இதுமட்டுமல்லாமல் தற்போது அனைத்து ஏடிஎம் மையங்களிலும் சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டிருக்கிறது. ஏடிஎம் இயந்திரங்களை எளிதில் உடைத்து பணத்தைக் கொள்ளையடிக்க முடியாது. பாதுகாப்பு அம்சங்களுடன்தான் ஏடிஎம் இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதன்காரணமாக ஏடிஎம்மில் கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் இயந்திரத்தை தகர்த்து எடுத்து செல்வது தற்போது வாடிக்கையாகிவிட்டது.

புனேவில் நேற்று நள்ளிரவு 2 மணிக்கு ஆக்ஸிஸ் பேங்க் ஏடிஎம் ஒன்றில் நடந்த கொள்ளை தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், ஏடிஎம் வாசல் அருகே வெள்ளை நிற எஸ்யூவி வாகனம் வந்து நிற்கிறது. வாகனத்திலிருந்து இறங்கிய இரண்டு நபர்கள் ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்தனர். அங்கிருந்த சிசிடிவி கேமராவில் ஸ்ப்ரே அடிக்கின்றனர். அதன்பின்னர் காரில் இருந்த கயிற்றைக் கொண்டு ஏடிஎம் இயந்திரத்தைக் கட்டுகின்றனர். காரை ஸ்டார்ட் செய்து வாகனத்தை இயக்குகின்றனர். ஏடிஎம் மையத்தில் இருந்த கண்ணாடிக் கதவுகளை உடைத்துக்கொண்டு இயந்திரம் வெளியே வந்தது.

ஏதோ கடையில் பொருள்களை வாங்கிச் செல்வதுபோல் ஏடிஎம் இயந்திரத்தைத் தூக்கி காரின் பின்புறத்தில் வைத்தனர். இதையடுத்து, கார் அங்கிருந்து மின்னல் வேகத்தில் புறப்பட்டுச் சென்றது. இந்தக் காட்சிகள் அனைத்தும் ஏடிஎம் முன்பு அமைந்திருக்கும் மற்றொரு கட்டடத்தில் பதிவான சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் போலீஸாருக்கு தலைவலியைக் கொடுத்துள்ளது. ஏடிஎம் இயந்திரத்தில் 9,70,000 பணம் இருந்ததாக வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர். இயந்திரத்தின் மதிப்பு 3,50,000 எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், ``இந்தச் சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். ஒரே கும்பல் தொடர்ந்து ஏடிஎம் கொள்ளையில் ஈடுபடுகின்றதா என சந்தேகம் உள்ளது” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு